கைம்மண் அளவு



திருவனந்தபுரத்தில் தம்பானூர் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் எதிரே மிகச்சிறந்த சைவ உணவு விடுதி ஒன்றுண்டு. அங்கு செல்லும் நண்பர்களுக்கு அந்த விடுதியை முன்மொழிவேன். அந்நகரில் தங்க நேரிடும் நாட்களில் விரும்பிப் போவதுண்டு அங்கே. விலை, கோவை அல்லது சென்னை விலைகளுக்கு மாற்றுக் குறைந்ததில்லை என்றாலும் உணவின் தரம் உயர்வாக இருக்கும். நெரிசல் மிகுந்த நாட்களில், ஓட்டலின் உரிமையாளரே முன்னின்று பந்தி விசாரிப்பார்.

அண்மையில் குடும்பத்துடன் திருவனந்தபுரம் சென்றிருந்தேன். திரும்புவதற்கு மாலை ஐந்து மணிக்கு முன்பதிவு இருந்தது ரயிலில். குடும்பத்தினரை உறவினர் வீட்டிலிருந்து நேராக ரயில் நிலையம் வரச் சொல்லிவிட்டு, நான் முன்னதாகக் கிளம்பி, மூத்த எழுத்தாளர் - சிறுகதைக் கலைஞர் ஆ.மாதவன் அவர்களைப் பார்க்கப் போனேன். ரயில் நிலையம் வரும் முன் மேற்படி உணவு விடுதிக்குள் நுழைந்தேன், ஒரு காபி குடிக்கும் உத்தேசத்துடன்.

கீழ்த்தளத்தில் அப்போதுதான் மதிய உணவுக்கடை ஒதுங்கிக் காலியாகக் கிடந்தது. சுத்தம் செய்வார்கள் போலும். நிர்வாகி போல நின்று கொண்டிருந்தவர் சொன்னார், ‘‘அண்ணாச்சி, மேல போயிருங்களேன். இங்க இன்னும் சர்வீஸ் ஆரம்பிக்கல’’.சற்றுத் தயங்கியது மனம். 24 படிகள் ஏற வேண்டும். கீழே காபி 25 ரூபாய் என்றால் மேலே குளிர்பதன அரங்கில் 30 ரூபாய். ‘சரி, வந்தாச்சு! நல்ல காபி ஒன்று குடிக்காமல் நகர் நீங்கினோம் என வேண்டாம்’ என்றெண்ணி மாடிப்படி ஏறினேன். காபி அற்புதமாக இருந்தது... புதுப்பால், புது டிகாக்‌ஷன், அரைச் சீனி.

எதிர் இருக்கையில் ஒருவர் சுடச்சுட வடையும், சட்னியும், சாம்பாரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நம் உணவுப் பழக்கத்தில் எத்தனை ஏறுகால் பாருங்கள்! ஒரு உளுந்த வடைக்கு சட்னியும் சாம்பாரும்! எதிர்காலத்தில் காரச் சட்னியும் ஊறுகாயும் கூட வேண்டி வரலாம். ‘குடும்பத்தினருக்கு நாலு வடை வாங்கிப் போனால் என்ன’ என்று அங்கலாய்த்தது மனம்.

காபிக்கு முப்பது ரூபாய் பில் வந்தது. அவரிடம் கேட்டேன், ‘‘தம்பி, நாலு வடை பார்சல் தரமுடியுமா?’’‘‘அதுக்கென்னங்க... தாராளமா!’’ என்றவர், வடைக்கு 120 ரூபாய் பில்லும் பார்சலுமாக வந்தார். அன்று காலைதான் கீழ்த்தளத்தில் நண்பர் ஏர்வாடி சுல்தான், அவர் தம்பி சல்மானுடன் சிற்றுண்டி அருந்தி இருந்தேன். வடை 25 ரூபாய் என்பதறிவேன். பில்லைப் பார்த்தபடி, கொண்டு வந்தவரிடம் கேட்டேன், ‘‘ஏன் தம்பி... பார்சல் வடைக்கும் குளிர்சாதன விலையா?’’

இலேசாகச் சிரித்தார் அவர். அந்தச் சிரிப்பு முதலாளிக்கு ஆதரவானதா, பயன்பாட்டாளருக்கு ஆதரவானதா என்று கண்டுகொள்ள இயலவில்லை. அவர் என்ன செய்வார் பாவம்? எய்தவன் இருக்க அம்பை நோவானேன்? ஆனால், அம்பைத்தானே நோகிறார்கள்? இரண்டாக ஒடித்தும் போடுகிறார்கள்?

ஏற்றுமதி செய்கிறவன் இருக்க, ஏற்றுமதியாகும் இடத்துக்குக் கொண்டு சேர்ப்பவன் இருக்க, கிடங்குகளில் பதுக்கி வைப்பவன் இருக்க, கிடங்குக்குக் கொண்டு சேர்ப்பவன் இருக்க, காட்டில் இருந்து நகருக்குக் கீழே இறக்குபவர் இருக்க, இவற்றுக்கெல்லாம் பின்னால் இருந்து சரடு வலிக்கும் சூத்ரதாரிகளான செல்வந்தர்கள், அதிகாரிகள், காவல்துறையினர், அமைச்சர்கள், தலைவர்கள் இருக்க, தினக்கூலிக்குச் செம்மரம் வெட்டப் போகிற அம்புகள்தானே சித்திரவதை, சிறை, கொலை என வல்லாண்மைக்கு இரையாகின்றன! எய்தவர்களே தமிழராய், தெலுங்கராய் கரந்து களித்து வாழ்கையில் முறிபடும் அம்புகள் தமிழ் அம்பு ஆனால் என்ன, தெலுங்கு அம்பு ஆனால் என்ன? சாகிறவனும் தமிழ், கொல்கிறவனும் தமிழ் என்றால் மரணம் பரவாயில்லையா?

எப்போதும் வலியை, துயரத்தை, சாவைக் கை நீட்டி வாங்கிக் கொள்கிறவன் ஏழையாகவும், அவற்றைக் கூவி விற்பவன் இன்னொரு கூட்டமாகவும்தானே இருக்கிறார்கள்! மலையானால் என்ன, மணல் ஆனால் என்ன, நிலக்கரியானால் என்ன, மருந்துகள் ஆனால் என்ன, பருகும் பால் ஆனால் என்ன, மாட்டுத் தீவனம் ஆனால் என்ன, சினிமா ஆனால் என்ன, கல்வியானால் என்ன, வேலைவாய்ப்புகளானால் என்ன, பணியிட மாற்றங்கள் ஆனால் என்ன? கேட்கலாம் என்று தோன்றுகிறது, சூரனை வதம் செய்த சுப்ரமணியனைப் பார்த்து, ‘வேலைப் பிடித்ததும் என்ன, என்ன, என்ன?’

களப, சந்தன, இளநீர், பால், தயிர், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்த அபிஷேகங்களை ஏற்றுக் கொள்வதற்காகவா வீரவேல், வெற்றிவேல்? எந்த மக்கட் பகையையும் வேரறுக்காதா?முருகா! உன் துருப்பிடித்த வேலைத் தூர எறி! பிரதம அமைச்சர் தொழில்முனைவோர் சடங்குக்காக குடிசையினுள் புகுந்து கூழ் குடித்தல் போலன்றி, வனத்தினுள் கூலி வேலைக்குப் போய்ப் பார்! உன் கோவணத்தையும் உருவிக்கொண்டு ஓட்டி விடுவார்கள் சூரபதுமர்கள்!

மூத்த திறனாய்வாளர், பொதுவுடைமை சித்தாந்தி, தி.க.சி. மரணத்துக்குத் துட்டி கேட்க திருநெல்வேலி போயிருந்தோம். அதிகாலையிலேயே விஜயா பதிப்பகத்து அண்ணாச்சியுடன் மரண வீட்டில் தி.க.சிக்கு அஞ்சலி செலுத்தி விட்டு உட்கார்ந்திருந்தோம். இலக்கியச்சுற்றம் பெரும்பான்மையும் இருந்தது. ஒன்பதரை மணி போல, கோணங்கி வந்தார். ஒரு பயணத்தில் இருந்து இன்னொரு பயணத்துக்கு ஆயத்தமாக, Transit Passenger போல. கருவூரில் தொடங்கிய பயணம் மறையூருக்கு... காலை பத்து மணி ஆயிற்று. பசித்தது. ‘‘கோணங்கி, சாப்பிடப் போலாமா?’’ என்றார் அண்ணாச்சி. மூவருமாக நடந்து, மேல ரத வீதியின் வடக்கு முனையில் இருந்த தரமான உணவு விடுதிக்குள் நுழைந்தோம்.

அண்ணாச்சியும், கோணங்கியும் பூரி மசால் சொன்னார்கள். எனது பதினெட்டு ஆண்டுகால பம்பாய் வாசத்தில், மொத்த வாழ்க்கைக்கும் தேவையான பூரிகளைப் போதுமான அளவு உண்டு முடித்து விட்டதால், நான் தோசை சொன்னேன். இலை போட்டு, ஆறி அலந்து கிடந்த இரண்டு ‘வலுக் வலுக்’ பூரி வைத்து, எவர்சில்வர் தூக்கு வாளியிலிருந்து பெரிய அகப்பையாக இரண்டு அகப்பை சாம்பார் கோரி ஊற்றினார், பரிமாறுகிறவர், கோணங்கி இலையில்.
‘‘ஐயா... வந்து... நாங்க பூரி மசால்லா கேட்டோம்?’’ என்றார் கோணங்கி.

‘‘மசால் தீந்து போச்சு!’’‘‘அப்ப சொல்லாண்டாமா? வேற ஆர்டர் பண்ணி இருப்போம்லா?’’‘‘சரி! பரவால்ல கோணங்கி... அந்த இலையை எம்பக்கம் இழுத்து விடுங்கோ. நீங்க வேற ஆர்டர் பண்ணுங்கோ’’ என்றார் அண்ணாச்சி. வேலாயுத அண்ணாச்சிக்கு அது இயல்பு. ஒரு நாள் முன்னிரவில் கோவையிலிருந்து நீலகிரி விரைவு ரயிலில் அவர் சென்னை புறப்பட வேண்டும். இரவு உணவு புத்தகக் கடையிலேயே சாப்பிட்டுவிட்டுக் கிளம்பலாம் என்று நாலு இட்லி வாங்கி வரச் சொன்னார்.

பார்சல் கட்டுபவன் வைக்க மறந்தானோ, வாங்கப் போனவன் பார்க்க மறந்தானோ, பார்சலைப் பிரித்தபோது வெறும் இட்லி மாத்திரம் இருந்தது. ‘‘சரி, விடு... இன்னைக்கு கொடுத்து வச்சது இதுதான்’’ என்று வெறும் இட்லியைத் தின்றுவிட்டு ரயிலுக்குப் போனார். எனவே அவருக்கு பூரியும் சாம்பாருமே விருந்துதான். கோணங்கி சொன்னார், ‘‘அதுக்கில்லே அண்ணாச்சி... இவுரு மொதல்லேயே சொல்லீருக்காண்டாமா?’’

பரிமாறுபவர் ஏதோ சமாதானம் சொன்னார். கை கழுவப் போகுமுன் காற்றாடி விசையை மறக்காமல் அணைக்கிற பில் வாங்குபவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.இஃதோர் அற்ப சங்கதி என்று கடந்து போய்விடலாம்.  ஆனால் இதற்குள் இருக்கிற மனோபாவம்தான் எனது பாடு பொருள். சின்ன முளைதானே நாளை முள்மரமாகவும் கிளைக்கிறது.

ஆனால் நீங்கள் கிழிந்த பத்து ரூபாய்த் தாள் ஒன்றைக் கொடுத்துப் பாருங்கள்... எதிர்வினையை அனுபவிக்கலாம்.
சில ஆண்டுகள் முன்பு இலக்கியச் சந்திப்பு ஒன்றுக்காக ஈரோடு போய், மறுநாள் காலையில் கோவை திரும்பிக் கொண்டிருந்தேன். பெருந்துறை சாலையில், திண்டலுக்கு முன்பாக புதியதாய் ஐஸ்கிரீம் பார்லர் ஒன்று திறந்திருந்தார்கள்.

ஐஸ்கிரீம் என்பதை ‘பனிக்கூழ்’ என்றெழுதலாமா? சொல் தேர்வை உங்களுக்கே விட்டுத் தருகிறேன். விளம்பரத்துக்காக, வானளாவ வைத்திருந்த ஃப்ளெக்ஸ் பேனர் முகத்தில் அறைந்தது. அதில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த வாசகம் அப்படியே... Ready to be Squeezed, Sucked & Licked. இதன் தமிழ் மொழிபெயர்ப்பு தரும் உத்தேசம் இல்லை எனக்கு! சிறுவரும் இளைஞரும் பால் பேதம் இன்றி விரும்பி உண்ணும் ஒன்று ஐஸ்கிரீம். உலகத் தர ஐஸ்கிரீம் தினுசுகள், உலகத் தர விலையில் இறக்குமதியாகி விநியோகம் செய்யப்படுகின்றன. தரமும் சுவையும் மெச்சற்பாலதே! விளம்பரத்துக்கு எனப் பயன்படுத்தப்பட்ட சொற்கள் யாவும் ஆங்கில அகராதிச் சொற்களே! ஆனால், அவற்றைச் சேர்த்துப் பயன்படுத்தும்போது விபரீத அர்த்தம் தருகின்றன.

பண்பாட்டின் மீது செலுத்தப்படும் வன்முறை இது. கீழ்மையான விளம்பர உத்தி. சினிமாக்காரர்கள் லாபம் கருதி, பண்பாட்டுக் கூறுகளில் நஞ்சு கலப்பதைப் போல, உணவக அதிபர்களும் ஆரம்பித்துவிட்டால் எப்படி? விளம்பர வாசகமாக இச்சொற்களைப் பயன்படுத்திக்கொள்ளும் மனம் எத்தனை வக்கிரமானது? சினிமாப் பாடல்களில், வசனங்களில், சைகைகளில் கையாளப்படும் பாலியல் திணிப்பு வன்முறைகளில் ஐம்பது பிஎச்.டி பட்டங்களுக்கு ஆய்வுகள் மேற்கொள்ளலாம். ஆயிரக்
கணக்கான பக்கங்கள் நீளும்.

எவரும் சொன்னார்களோ, கடைக்காரர்களுக்கே உடம்பில் ஊறலும் தடிப்பும் ஏற்பட்டதோ, சில நாட்களில் அந்த விளம்பரம் அகற்றப்பட்டது. முன்பு பேசப்பட்டவை ஒரு வகையான பொருள் சுரண்டல் எனில், இஃதோர் பண்பாட்டு நசிவு. சூழலில் நஞ்சு பெய்தல். தமிழர்களோ, ‘பெயக்கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்’ என்ற குறளை எழுத்துப் பிசகாமல் பின்பற்றுகிறார்கள்.

பருகும் பானத்தில் நஞ்சு ஊற்றுவதைக் கண்டிருந்தாலும், அதை அமுதம் என்று கருதி, மறுக்காமல் வாங்கிப் பருகும் நாகரிகம் உடையவர்கள். தமிழன் சங்க இலக்கியம் கற்பித்ததையும் மீறுவதில்லை. ‘முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்’ என்ற நற்றிணைப் பாடல் வழி ஒழுகுகிறவர்கள். முன்னால் அமர்ந்து, நட்புப்பூண்டவர் ஊற்றிக் கொடுத்தால், நஞ்சைக் கூட உண்ணும் சிறந்த நாகரிகம் அவர்களது.

தமிழனுக்கு இரங்குவதையும் அழுவதையும் தவிர்த்து நமக்கு மாற்று வழி என்ன? மட்டமான தெருப் பொறுக்கிகளும், பேட்டைக் காலிகளும் பயன்
படுத்தும் ஆபாசமான இரட்டை அர்த்த மொழியை எங்கும் பயன்படுத்த தமிழ் சினிமா வசனங்களும் பாட்டுகளும் கூசுவதில்லை. ‘ஊதா கலரு ரிப்பன்’, ‘எவன்டி உன்னைப் பெத்தான்’ என்பதெல்லாம் இங்கு சினிமா இலக்கியம்! தமிழ்க்கடவுள் முருகனும் தமிழ் மூதாட்டி ஒளவையும் சந்தித்து உரையாடும் காட்சி எழுதினால் கூட, அதில் இரட்டை அர்த்தம் வைப்பார் போலும்!

ஆங்கில Pulp Fiction எழுத்தாளர் ஒருவரைப் பற்றிச் சொல்வார்கள், அவர் மூளைக்குள் இருக்கும் பெண்குறி வழியாகவே சிந்திக்கிறார் என! எனக்கொரு ஐயப்பாடு! தம் வீட்டுப் பெண்களிடமும் இந்த சினிமாக்காரர்கள் இரட்டை அர்த்தத்தில்தான் பேசுவார்களோ? அரசுகளே பின் சென்று அவர்கள் கூவுவதற்கும் ஏவுவதற்கும் தம் கடன் பணி செய்து கிடப்பதே என்று அலையும்போது எவர் காப்பாற்ற முடியும் தமிழ் மக்களை?

முன்பு கிராமப்புறங்களில் நடக்கும் சிறுதெய்வ வழிபாட்டுக் கொடைகளின்போது, நள்ளிரவு தாண்டி, சிறுவர் சிறுமியர் உறங்கப் போன பின்பு, கரகாட்டக்காரர்கள் பாலியல் கொச்சை வசனம் பேசி வாலிப, வயோதிக அன்பர்களை உசுப்பேற்றுவார்கள். கரகாட்டக்காரப் பெண், சொம்புத் தண்ணீரை வாய் முழுக்க வாங்கி, கோமாளி மீது உமிழ்வாள். வெளிநாட்டில், ஓர் நட்சத்திரக் கலைவிழாவில், பிரபல இந்தி நடிகர் ஒருவர், முன்வரிசைத் தொழிலதிபர் பெண்களை மேடைக்கு ஏற்றி, அவர்கள் மீது வாய் நிறையத் தண்ணீர் வாங்கி உமிழ்ந்தார்! பெண்டிருக்கோ பரவசமும் மெய்மறப்பும்.

சினிமாவும் ஊடகங்களும் விளம்பரங்களும் இன்று யாவர் மீதும் உமிழ்ந்து கொண்டிருக்கிறார்கள் வாய்த் தண்ணீரை. அது வாய்த் தண்ணீராக இல்லாமல், சிறுநீராக இருந்தாலும் கூட நமக்கு மெய்சிலிர்ப்புத்தானே!தமிழ்க்கடவுள் முருகனும் தமிழ் மூதாட்டி ஒளவையும் சந்தித்து உரையாடும் காட்சி எழுதினால் கூட, அதில் இரட்டை அர்த்தம் வைப்பார் போலும்!

டகால்டி டிராபிக்

அமெரிக்காவின் மின்னாபோலிஸ் மாகாணத்தின் லேக் ஸ்ட்ரீட் பகுதியில் சிவப்பு நிறக் காரை ஓட்டிச் செல்ல நிரந்தரத் தடை உள்ளது.

வடக்கு கரோலினா சட்டப்படி ஒரு கல்லறைத்தோட்டத்துக்குள் காரைக் கொண்டு செல்ல முடியாது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் காருக்கு மேலே செல்லப்பிராணியை நிறுத்தி வைத்து டிரைவ் செய்வது கடும் குற்றம்!

அமெரிக்காவின் நெவாடா மாகாண நெடுஞ்சாலைகளில் ஒருவர் ஒட்டகத்தின் மீதேறி பயணம் செய்வது குற்றம் என சட்டம் சொல்கிறது.

(கற்போம்...)

நாஞ்சில் நாடன்

ஓவியம்: மருது