நியூமராலஜி



‘‘சார்,  நீங்க நியூமராலஜி படி என் குழந்தைக்கு எழுதிக் கொடுத்திருக்குற பேர் ‘அ’வுல ஆரம்பிக்குது. ஆனா, அதனால வர்ற பிரச்னைகள் அதிகம் சார்!’’ - திலகா சொன்னதும் நியூமராலஜிஸ்ட் வெற்றிக்கண்ணன் நெற்றி சுருக்கினார்.‘‘பிறந்த தேதியை வச்சு கணிச்சுதான்மா சொன்னேன். முதல் எழுத்துன்னா எதுலயும் முன்னணினு அர்த்தம்மா!’’ என்றார் அவர்.

‘‘இல்ல சார், ஆல்பபெடிக் வரிசைப்படி இந்த மாதிரி பேரு ஸ்கூல்  அட்டெண்டன்ஸ்லயும் முதல் இடம் பிடிக்கும். பிராக்டிக்கல்  எக்ஸாம்ல இருந்து பேப்பர் கரெக்‌ஷன் வரை இவங்க பேர்தான் முதல்ல. ஒரு ஆசிரியர் பேப்பர் திருத்தும்போது ஆரம்பத்துல காட்டுற கண்டிப்பை போகப் போக தளர்த்துவார்ங்கறது உளவியல் உண்மை.

படிச்சு முடிச்ச பிறகும் எந்த நேர்காணலா  இருந்தாலும் அதில் முதல்ல இவங்களைத்தான் அனுப்புவாங்க. எல்லா விஷயத்துலயுமே ஆரம்பத்தை எதிர்கொள்ற  எல்லோருக்கும் பெரிய பிரச்னை காத்திருக்கும். அதோட போராடித்தான் அவங்க  முன்னாடி வர வேண்டியிருக்கும். ப்ளீஸ்… அதனால இந்த எழுத்துல பேரு வேண்டாம் சார்!’’ - திலகா தீர்மானமாகச் சொன்னாள்.‘முதலெழுத்தில் பெயர்  வைப்பதில் இத்தனை விஷயங்கள் இருக்கா!’ - அசந்து போனார் நியூமராலஜிஸ்ட் வெற்றிக்கண்ணன்.

பவித்ரா நந்தகுமார்