வாழ்க்கையின் இறுதிக்கட்டம் நெருங்கியதை உணரும் நடிகர், தன் வாழ்க்கையின் கடைசி கட்டங்களில் சுடர்விட்டு பிரகாசிக்கும் நினைவுப் பயணமே, ‘உத்தம வில்லன்’. நடிகராக கமல்ஹாசனின் பல பரிமாணங்கள் வாழ்க்கை சம்பவங்களோடு ஊஞ்சல் மாதிரி முன்னும் பின்னுமாய் போய் வருகிற திரைக்கதையில் இருக்கிறது ‘உத்தம வில்லனி’ன் பலம்.

மாறுபட்ட இந்த உத்தியை எந்தக் குழப்பத்திற்கும் இடம் கொடுக்காமல், சுத்தமாகத் தருவதன் மூலம் தன் அனுபவ நுணுக்கத்தைக் காட்டுகிறார் கமல். நுணுக்கமான மனது நுணுக்கமான கலைகளையே தருகிறது என்ற உண்மையே ‘உத்தம வில்லனி’ன் உள்ளடக்கம். ‘மரணம் நெருங்கும்போதே, மனிதர்களோடு நெருங்கி வருகிற அண்மை பலருக்கும் வாய்க்கிறது’ என்கிற உண்மையைப் போட்டு உடைக்கிறார் கமல். அவருக்கு உதவியாக இருந்து படத்தை இயக்கியிருக்கிறார் ரமேஷ் அரவிந்த்.மிகவும் சிரமம் கொண்ட கதாபாத்திரத்தை ஜஸ்ட் லைக் தட் பின்னியிருக்கிறார் கமல்.
அவருடைய வாழ்க்கைதான் கதையோ என்ற பிரமை தந்தாலும், சற்றே வெளி வாழ்க்கையின் சுவடையும் கொடுத்துத் திணற வைக்கிறார் கமல். மிகவும் அபூர்வமான காட்சிகளாக படம் நெடுகிலும் அடுக்கப்பட்டுள்ளன.
கமல் தன் மகளை(!) முதலில் பார்த்துப் பேசுகிற காட்சி, அவளிடம் பேசிக்கொண்டு இருக்கும்போதே நெடுஞ்சாண் கிடையாக அப்படியே பக்கவாதத்தில் விழுகிற இடம், கள்ளக்காதலி என ஆண்ட்ரியாவை கால்களுக்கு இடையில் இழுத்து வைத்து உதட்டில் ‘உம்மா’ கொடுத்து கொஞ்சிக்கொள்ளும் காட்சி, கமல் மகனின் கோபம், பின்பு பாசம், அவனது ஆசை, அவனிடமே தன் உடல்நிலையைச் சொல்லிவிட்டு அவனைத் தேற்றுவது...
நாம் யாருமே முன்னே பின்னே தமிழில் பார்த்திருக்க முடியாத காட்சிகள் இதெல்லாம்! தமிழ் சினிமா நவீனமாகி விட்டதோ என்ற எண்ணம் படம் நடுவில் தோன்றாமல் இல்லை! கமலின் இளமை, ஆண்ட்ரியா சரி போதையில் கமலை நினைத்து வேதனைப்படுவது, காதலிக்கு எழுதிய கடிதம் போய்ச் சேரவில்லை என்றதும் கமல் காட்டும் ரியாக்ஷன்... உங்களுக்கு ஈடே யாரும் இங்கே இல்லை கமல்.
சூப்பர் சினிமா நடிகனுக்கு ‘அடங்கிய’ மனைவியாக ஊர்வசி, பிரமாதப்படுத்தியிருக்கிறார். சதா சர்வகாலமும் உடனிருக்கிற செக்ரட்டரி எம்.எஸ்.பாஸ்கரின் இயல்பு நடிப்பை எழுதியெல்லாம் காட்ட முடியாது. டைரக்டராகவே வரும் பாலசந்தர் நடிப்பு, அவரது மறைவை நினைத்து வருந்தச் செய்கிறது.
திரைப்படத்துக்குள் திரைப்படமாக வருகிற இன்னொரு சினிமாதான் கொஞ்சம் சங்கடப்படுத்துகிறது. தெய்யம், கூத்துக்கலை என பாடுபட்டு உழைத்தது ஏனோ ஒட்டவில்லை. நீள நீளமான காட்சிகள் அயர வைப்பதும் உண்மை. நாசரின் இயல்பு நடிப்பில் அயர்ச்சி கொஞ்சம் மறைவதும் உண்மைதான். இரண்டு கலைகளையும் இணைத்துச் செய்ததில் எந்த உணர்வையும் ஏற்படுத்தத் தவறியது ஏன்?
மகளாக கொஞ்ச நேரமே வந்தாலும் பார்வதி நாயர் தருவது பூரண வார்ப்பு. படத்தில் வருகிற ஆண்ட்ரியா மாதிரியானவர்களின் அன்புக்கு எந்த அடையாளமும் கிடைக்கப் பெறாததை காட்சிகளில் கொண்டு நிறுத்துவது அருமை. ஜிப்ரானின் பின்னணியும் பாடல்களும் பெரிதாக நினைவில் நிற்கவில்லை. ஷாம்தத்தின் ஒளிப்பதிவு கண்ணில் நிற்கிற பதிவு.நமக்கென்னவோ நடிகனின் வாழ்க்கைதான் சுவாரஸ்யம் ததும்பியது. ‘உத்தம வில்லன்’... கமலின் அரிய நடிப்பில் பார்க்க நமக்குப் பெரிய வாய்ப்பு.
- குங்குமம் விமர்சனக் குழு