நான் உங்கள் ரசிகன்



இப்போ ஷூட்டிங்னா... ஹீரோ, ஹீரோயின்னு பெரிய ஆர்ட்டிஸ்ட், சின்ன ஆர்ட்டிஸ்ட் வித்தியாசமெல்லாம் பார்க்காம எல்லாருக்குமே கேரவன் வசதி செய்து கொடுத்திடுறாங்க. டிரஸ் மாத்துறதுக்கு, ஷூட்டிங் பிரேக்ல சின்னதா ரெஸ்ட் எடுக்கறதுக்கு சௌகரியமா இருக்கு.

ஆனா, அப்போ அப்படி இல்ல. ‘புதிய வார்ப்புகள்’ ஷூட்டிங் அப்போ, நடிகர்கள், அசிஸ்டென்ட்கள்னு ஒரே ஒரு ரூம்ல நாங்க 18 பேர் தங்கியிருந்தோம். கவுண்டமணி, ஜனகராஜ் மாதிரி அப்போதைய பெரிய நடிகர்கள் எல்லாருமே அங்க தரையில படுத்திருந்தாங்க. ரூம்ல இருந்தது ஒரே ஒரு பென்ச்... சின்ன நகரங்கள்ல டாக்டர் க்ளினிக்ல எல்லாம் இருக்கும்ல, அந்த சைஸ் பென்ச். பாக்யராஜ் ஹீரோங்கறதால அவருக்கு மட்டும் அந்த பென்ச்!

பென்ச் கிடைச்சுதேன்னு படுத்துத் தூங்குற ஆளு இல்ல பாக்யராஜ். ரொம்ப சின்ஸியர். நைட்டு 12 மணியில இருந்து அதிகாலை 4 மணி வரை உக்கார்ந்து வசனங்கள் எழுதுவார். காலையில 5 மணிக்கே ஸ்பாட்ல இருப்பார். முதல்ல ரைட்டர், ரெண்டாவது ஹீரோ... தூக்கம் பாக்யராஜுக்கு மூணாவது சாய்ஸ்தான்!‘வான் மேகங்களே’ பாட்டுக்கு வர்ற ஒரு மியூசிக்கல் பிட்டுதான் படத்தோட ஃபர்ஸ்ட் ஷாட்.

புலியூர் சரோஜாதான் டான்ஸ் மாஸ்டர். பாக்யராஜ் மிரண்டு போய், ‘‘என்னாது? எனக்கு போயி ஸாங்கா?’’ங்கறார். ‘‘ ‘16 வயதினிலே’ல இருந்து நல்லா வாழ்ந்துக்கிட்டிருக்கற மனுஷன் பாரதிராஜா... நல்ல நல்ல படமா கொடுத்தாரு... இப்போ இவருக்கெல்லாம் மேக்கப் போடுற கொடுமை வந்துடுச்சு’’ன்னு மேக்கப்மேன் ஒரு பக்கம் ஃபீல் பண்றார்.

ஒரே களேபரத்தோடு முதல் ஷாட் எடுத்தோம். ஸாங்ல பாக்யராஜ் என்ட்ரி ஆகுற சீன்ல அவரால நிக்க முடியல... நெர்வஸ்ல நடுங்கறாரு. நானும், புலியூர் சரோஜாவும் அவரை முன்னாடி ஒரு கை, பின்னாடி ஒரு கையுமா புடிச்சு, ஃபிரேம்ல நிறுத்துறோம். ஆனா, அந்த நிமிஷத்துல இருந்து 22 நாள்ல படம் முடிஞ்சிருச்சு. ஒரு நடிகரா அவர்கிட்ட அப்படி ஒரு பிக்கப்!

அதே படத்துல கே.கே.சௌந்தர், ஜி.சீனிவாசன்னு ரெண்டு பேரு நடிச்சிருப்பாங்க. ஜி.சீனிவாசன் பெரிய ஆர்ட்டிஸ்ட். அவர் நாயனக்காரரா நடிக்கணும். கே.கே.சௌந்தர்தான் ஊர்ப் பெரிய மனுஷரா நடிக்கணும். ஆனா, கே.கே.சௌந்தர் ட்ரெயின்ல அசந்து தூங்கிட்டாரு. அதனால கொடை ரோட்ல இறங்காம நேரா மதுரைக்கு போயிட்டாரு. ஆனா, இங்கே ஷாட் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஆர்ட்டிஸ்ட் வரலைன்னா டைரக்டர் டெரர் ஆகிடுவார். அதனால சீனிவாசனை பண்ணையார் கெட்டப்ல கொண்டு போயி நிறுத்திட்டேன்.

‘‘என்னய்யா இவரைப் போட்டிருக்கே? அவருல்ல நடிக்கணும்..?’’னு பாரதிராஜா எகிறுறார். சௌந்தர் ட்ரெயினை மிஸ் பண்ணினதை நான் சொல்லலை. ‘‘சீனிவாசன் ‘கிழக்கே போகும் ரயில்’ல முடிதிருத்துபவரா நடிச்சிருக்கார்.

இதிலும் நாயனக்காரரா நடிச்சா ஒரே மாதிரி இருக்கும். மாத்திவிட்டுப் பாருங்க சார்... அப்போதான் நல்லா இருக்கும்!’’ னேன். அவசரத்துல அதை டைரக்டர் ஏத்துக்கிட்டார். அது சீனிவாசனுக்கு பெரிய லைஃப். கே.கே.சௌந்தரும் அடுத்த பத்து வருஷத்துக்கு கொடி கட்டிப் பறந்தார்.

பாக்யராஜ் சிறந்த கதாசிரியர், வசனகர்த்தானு ஏன் சொல்றாங்கன்னா, அவர் எந்த வசனத்தையும் ஒரு தடவை பேசிப் பார்த்துதான் எழுதுவார். எந்த வசனமும் நாக்குல ரோல் ஆகாம இருக்கணும்ங்கறதுல கவனமா இருந்தார். அதனாலதான் அவர் வசனத்தை யாராலயும் தடுமாறாமப் பேசி நடிக்க முடியும். ஆனா, அவர் வசனத்தையே பேசத் தடுமாறின ஒரே ஆளு, இந்த மனோபாலாதான்.

‘புதிய வார்ப்புகள்’ல வந்த அந்த வசனம்... ‘‘பொய்யைப் புடிச்சு வச்சுக்கிட்டு பேசுனா, நிஜம் நின்னுக்கிட்டு முழிக்குமாம்... இந்த மாதிரியில்ல இருக்கு!’’ எதைப் புடிக்கணும்... எது நிக்கணும்னு எனக்குக் குழப்பம் ஆகிப்போச்சு.

ஆனாலும் எனக்குள்ள ஒரு நடிகன் இருக்கான்னு கண்டுபிடிச்சு, என்னை நடிக்க வச்சது பாரதிராஜாதான். ‘புதிய வார்ப்புகள்’ல ஒரு கறுப்புப் போர்வையை சுத்தி, குச்சியை கையில வச்சுக்கிட்டு ஆடு மேய்க்கிற அறுபது வயசுக் கிழவனா வருவேன். அந்தப் படத்துல நான் வர்ற சீன்ல எல்லாம் கைதட்டல் கிடைச்சுக்கிட்டே இருந்தது.

பாக்யராஜுக்கு அந்தப் படம் மறக்க முடியாதது. முதல் படத்துல நடிச்சு முடிச்சதும், தன் தாயாருக்குத் திரையிட்டுக் காட்டணும்னு பாக்யராஜ் விரும்பினார். ஆனா, கடைசி ஸாங் ஷூட் பண்றப்ப, அவர் தாயார் இறந்துட்டாங்க. அப்ப ஊருக்கு அவசரமாக் கிளம்பின பாக்யராஜை, தேனி பஸ் ஸ்டாண்ட்ல ஒரு சாதாரண பஸ்ல ஏத்தி விட்டேன். ‘புதிய வார்ப்புகள்’ வெளிவந்ததுக்குப் பிறகு பாக்யராஜுக்கு கிடைச்ச புகழ் உங்களுக்குத் தெரிஞ்சதுதான்..!

எந்த பாக்யராஜுக்கு அவரோட குரல் ப்ளஸ்ஸா இருக்கோ, அந்தக் குரலே சரியில்லைன்னு பாரதிராஜா அப்போ சொல்லிட்டார். ‘‘என்னய்யா... இவருக்கு வாய்ஸ் கீச்சு குரலா இருக்கு. குரலை மாத்தணும்’’னார். அந்தப் படத்துல பாக்யராஜுக்கு குரல் கொடுத்தது, வேற யாருமில்ல... கங்கை அமரன்தான்.

கிருஷ்ணா பிக்சர்ஸ் செட்டியாருக்காக பாரதிராஜா பண்ணின படம் ‘நிறம் மாறாத பூக்கள்’. முந்தின படமான ‘புதிய வார்ப்புகள்’ ஷூட்டிங் முடியிறதுக்கு முன்னாடியே அந்தப் படம் தொடங்கியாச்சு. ‘கிழக்கே போகும் ரயிலு’க்குப் பிறகு மறுபடியும் ராதிகாவை குணச்சித்திர கேரக்டரில் ‘நிறம் மாறாத பூக்கள்’ல நடிக்க வைக்கறோம். இன்னொரு பக்கம், ‘புதிய வார்ப்புகளு’க்காக ‘நம்தன நம்தன தாளம் வரும்’ பாடலை எடுத்துக்கிட்டிருந்தாங்க.

அந்தப் பாடல் பிறந்ததே ஒரு சுவாரஸ்யமான விஷயம். ‘கேளடி கண்மணி’யில் எஸ்.பி.பி. மூச்சுவிடாமல் ஒரு பாடலைப் பாடுவாரே... இதுக்கு முன்னோடி ‘நம்தன நம்தன’ பாடல்தான். இந்தப் பாடலுக்கான சிச்சுவேஷனை பாரதிராஜா இளையராஜாகிட்ட சொல்லிட்டு, ‘ஐகிரி நந்தினி... நந்திதமேதினி...’னு ஒரு நீளமான பக்திப் பாடல் வருமே... அதே மெட்டுல வேணும்’னு பாரதிராஜா சொன்ன அடுத்த விநாடியே, இளையராஜா போட்ட மெட்டுதான், ‘நம்தன நம்தன தாளம் வரும்’.   சரி விஷயத்துக்கு வருவோம்...  ‘நிறம் மாறாத பூக்கள்’ல  ‘ஆயிரம் மலர்களே...

மலருங்கள்’ பாடல் ஷூட். ஊரே பூவா பூத்திருக்குற இடத்துல அந்தப் பாட்டை எடுத்தாத்தானே எடுப்பா இருக்கும்? அதனால நேரா கொடைக்கானலுக்குக் கிளம்பிட்டோம். ஆனா, அங்கே கொடைக்கானலே காய்ஞ்சு போய்க் கிடக்கு. கொடைக்கானல்னா கலர்கலர் பூக்கள்னு யோசிச்ச நாங்க, சீஸன் பத்தியெல்லாம் யோசிக்கல. அங்க சரியான ட்ரை சீஸன் போலிருக்கு.

ஒரு பூ கூட பூக்காம, ஏரியாவே வறண்டு போயிருக்கு. மிரண்டுட்டோம்! அச்சச்சோ, டைரக்டருக்குத் தெரிஞ்சா டென்ஷன் ஆவாரே..!எந்த பாக்யராஜுக்கு அவரோட குரல் ப்ளஸ்ஸா இருக்கோ, அந்தக் குரலே சரியில்லைன்னு பாரதிராஜா அப்போ சொல்லிட்டார்.

- ரசிப்போம்...

தொகுப்பு: மை.பாரதிராஜா
படங்கள் உதவி: ஞானம்


மனோபாலா