ஒருவருக்கு மட்டுமே வாய்த்த நடை!



‘‘நிலாவில்கூட இதுவரை 12 மனிதர்கள் நடந்துவிட்டார்கள். ஆனால் இந்தப் பாதை ஒரே ஒருவர் மட்டுமே நடந்தது. அதற்குமுன் யாரும் அங்கு நடந்ததில்லை. இனிமேலும் நடக்க முடியாது’’ - இப்படி ஒரு அசத்தல் அறிமுகம் தருகிறது ‘தி வாக்’ திரைப்படம்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் கடந்த 2001ம் ஆண்டு தீவிரவாத தாக்குதலில் தகர்க்கப்பட்டன. அதற்குமுன்பு வரை அவை நியூயார்க்கின் பெருமைக்குரிய அடையாளங்களாக இருந்தன. வானைத் துளைத்துவிடும் அளவுக்கு உயரத்தில் பிரமிப்பூட்டிய அந்த இரண்டு கட்டிடங்களுக்கு இடையே ஒரு கம்பியைக் கட்டி, அதில் நடந்து சாதனை புரிந்த ஒரு வீரனின் கதையே இந்தப் படம்.

பிரெஞ்சுக்காரரான பிலிப்பி பெடிட் கடந்த 74ம் ஆண்டு இதை சாதித்தார். தரையிலிருந்து 1350 அடி உயரத்தில், இரண்டு கட்டிடங்களுக்கு இடையே கம்பியைக் கட்டி, ஒரு தடியால் தன்னை பேலஸ் செய்தபடி, இடையிடையே சில நிமிடங்கள் ஓய்வெடுத்துக்கொண்டு, 45 நிமிடங்களில் அவர் இந்த தூரத்தைக் கடந்தார்.

அதுவரை நியூயார்க் மக்களுக்கு அந்தக் கட்டிடங்கள் வெறும் சோப்பு டப்பா போன்ற அலுவலகங்களாகவே தெரிந்தன. பெடிட் செய்த சாதனையை தரையில் நின்றபடி கழுத்து வலிக்க பார்த்தவர்க்ள், அதன்பின் அந்த இரட்டை கோபுரங்கள் மீது பரவசமானார்கள். தங்கள் நகரின் பெருமையாக நினைத்தார்கள். அதனால்தான் அது தகர்க்கப்பட்டபோது அவர்களுக்கு வலித்தது.

இப்போது அந்த கோபுரங்கள் இல்லை; பெடிட் வேடத்தில் நடித்திருக்கும் ஜோசப் கார்டனும் சாகசம் செய்பவர் அல்ல. அதனால் 3டி படமாக இதை மிகுந்த சிரமப்பட்டு எடுத்திருக்கிறார்கள். வெறுமனே அந்த உயர நடை மட்டுமே படம் இல்லை. பெடிட் என்ற மனிதருக்குள் இப்படி ஒரு வேட்கை எப்படி வந்தது, அவரது காதல், குருவின் வழிகாட்டல் என பயணிக்கிறது படம். ‘உங்கள் லட்சியம் எதுவானாலும் அதுவாக வாழ்வது எப்படி’ என்பதைப் பாடமாகச் சொல்வதால், ‘தி வாக்’ இந்த ஆண்டின் மிக முக்கியமான படங்களில் ஒன்றாகிறது!

- அகஸ்டஸ்