வேலை



பிரபல மென்பொருள் நிறுவனம். உள்ளே போன சுனந்தாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பிடிவாதமாய் ‘‘ஹெச்.ஆர் மேனேஜரைப் பார்த்தே ஆகவேண்டும்’’ என்றாள். வரவேற்பறையில் உட்காரச் சொன்னார்கள். வேலை நிச்சயமாகப் போகப் போகிறது. ஏற்கனவே 2500 பேரை தூக்கி விட்டிருக்கிறார்கள். ஒருவேளை... நினைத்துப் பார்க்கவே பகீரென்றது சுனந்தாவிற்கு. வரவேற்பறையில் இருந்த பெண், ஹெச்.ஆர் அழைப்பதாகச் சொன்னாள்.

 தயங்கிக்கொண்டே வியர்த்தபடி ஹெச்.ஆர். மேனேஜர் அறைக்குள் நுழைந்தாள் சுனந்தா.‘‘என்ன விஷயம்? எதுக்கு என்னைப் பார்க்கணும்?’’ என்றார் ஹெச்.ஆர். மேனேஜர் இறுக்கமாக.‘‘வ... வந்து... வேலை...’’‘‘பிங்க் ஸ்லிப் ரெடியா இருக்கு. நாளையில இருந்து வர வேணாம். செட்டில்மென்ட் க்ளோஸ் பண்ணி பேங்க் அக்கவுன்ட்ல போட்ருவாங்க!’’‘‘அப்ப வேலை போச்சா?’’

‘‘அதைத்தாம்மா சொல்றேன், புரியலையா?’’‘‘ஆஹா... கேக்கவே செம சந்தோஷமா இருக்கு!’’‘‘எ... என்னம்மா சொல்றீங்க?’’‘‘பின்னே..? இந்தக் கம்பெனியில நடந்த ஆட்குறைப்புல என் மருமக ஆனந்திக்கும் வேலை போயிருக்குமோ, இல்லையோன்னு ஒரே சந்தேகம். அதை க்ளியர் பண்ணிக்கத்தான் வந்தேன். வேலை போச்சா? என் பிரார்த்தனை வீண் போகல! ஐ.டி.யில வொர்க் பண்றதால என் மருமகளுக்கு என்னா அலட்டல்... என்னா தெனாவெட்டு! இனி வீட்லதானே இருக்கணும். மாமியார்காரின்னா யாருன்னு காட்டறேன்!’’        

விஜயநிலா