தில்லாலங்கடி திருடன்ஸ்!



‘‘ஆக்‌ஷன், காமெடி, த்ரில்லர் மூணும் கலந்தா ஒரு படம் நல்லா இருக்கும்னு நினைச்சேன். அப்படி ஒரு கதை அமைஞ்சதும் ஆரம்பிச்சதுதான் இந்த ‘காத்தாடி’. தடதடன்னு பரபரக்கிற இந்தக் கதையில் நிறைய அருமையான தருணங்கள் இருக்கு.

ஹீரோயிசம் இல்லாமல் ரொம்ப அசலாக நடப்பைச் சொன்னால் ரசிகர்கள் வரவேற்பு தருகிற காலம் இது!’’ - நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் எஸ்.கல்யாண். குறும்படங்களின் அனுபவங்களிலிருந்து நேரடியாகத் திரைக்கு வந்தவர். நாளைய இயக்குநர்களின் வரிசையில் இருப்பவர். இவரின் ‘கூத்து’ குறும்படம், மும்பை திரைப்பட விழாவில் முதல் இடம் பெற்றிருக்கிறது!

‘‘அழகா, ஸ்டைலா வந்திருக்கற காமெடி த்ரில்லர்தான் இது. ரெண்டு திருட்டுப்பசங்க. சும்மா ஒரு வேகத்துல கிடைச்சதை சுருட்டி, கேப்ல மாட்டி, அடி வாங்குற சாதி இல்லை இவங்க... எமகாதகனுங்க. செம புத்திசாலித் திருடங்க. செஸ் விளையாட்டு மாதிரி காய் நகர்த்தி களவாடுகிற டேஞ்சர் பாய்ஸ்.

அவங்களுக்கு ஃபாரின் வரைக்கும் போய் திருடணும்னு ஆசை. அதனால ஒரு எதிர்பாராத பிரச்னையில் சிக்குறாங்க. ‘அல்வாவுக்கே அல்வா’ம்பாங்களே, அப்படி ஒரு மேட்டர் இது. அதுக்கப்புறம் ஜெட் வேகத்துல சூடு பிடிக்கிற அடுத்தடுத்த முடிச்சுகள், உங்களை பரபரப்பா சீட் நுனிக்கு வரவழைக்கும்!’’

‘‘இந்தக் கதைக்கு இன்னும் பிரபலமான முகங்கள் முயற்சிக்கவில்லையா?’’‘‘ஆனா இந்தக் கதைக்கு இமேஜ் பார்க்காத முகங்கள்தான் தேவைப்பட்டுச்சு. கார்த்திக், டேனி... அவ்வளவு இயல்பா செட் ஆனாங்க. ரொம்ப சகஜமான நடிப்பை நீங்க கார்த்திக் கிட்ட உணர முடியும். ‘ஃப்ரண்டு... ஃபீல் ஆயிட்டாப்ல’ என ஒரே டயலாக்ல தமிழ்நாடு முழுக்க வைரலா பரவியவர், ‘இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ டேனி.

ரெண்டு பேரும் பண்ற அதகளம் எக்கச்சக்கம். இதற்கு நடுவில் ‘சாதன்யா’ன்னு ஒரு குழந்தையின் அற்புதமான நடிப்பு, அந்தச் சிறுமியோட வலிகள்னு இன்னும் நாம் தெரிஞ்சுக்க வேண்டிய பகுதிகளும் இருக்கு. சம்பத் படத்துக்குப் பெரிய ஆணிவேர். நிச்சயமா தமிழ் சினிமாவே பார்க்காததுன்னு சொல்லமாட்டேன்.

ஆனா, ட்ரீட்மென்ட் ரொம்பவும் புதுசு. யதார்த்தம் அள்ளும். இப்ப நடைமுறையில் இருக்கிற காமெடிப் படங்களின் பாதிப்பெல்லாம் இல்லை. நான் இப்ப சொன்ன வரைக்கும் நீங்க கேள்விப்படாதது ஏதாவது இருக்கா? ஆனால், திரையில் இருக்கும். அதுதான் விசேஷம்!’’
‘‘தன்ஷிகாதானே ஹீரோயின்?’’

‘‘இதில் ஹீரோயின்னு தனியா யாரும் கிடையாது. படத்தில் அவங்களுக்கு பெரிய பார்ட். துறுதுறுன்னு இருந்துக்கிட்டு, ரொம்ப கேஷுவலா நடிக்கிறாங்க. அவங்களுக்கு இன்னும் பெரிய இடம் கிடைக்கலைன்னு பேசிக்கிட்டு இருக்கும்போதே, ‘கபாலி’ படத்துக்காக 60 நாட்கள் தேதி கேட்டு தன்ஷிகாவை எங்க யூனிட்டிலிருந்து கடத்திக்கிட்டுப் போயிட்டாங்க. அதில் எங்களுக்குத்தான் முதல் சந்தோஷம்.

இதில் அவங்க ஒரு இன்ஸ்பெக்டர் ரோலில் வர்றாங்க. அந்த கம்பீரமும் மிடுக்கும் இங்கேயிருக்கிற ஹீரோயின்ஸ்கிட்ட அரிதுதானே! எக்கச்சக்க ட்விஸ்ட்... திருப்பங்கள் எதுவுமே வலிய வச்சி திணிச்சதில்லை. கதையே அப்படிப் போறதுதான் இதில் அழகு. சினிமான்னா அது அதிகம் விஷுவல்னு சொல்வாங்க இல்லையா... அதை கவனத்தில் வச்சு செய்திருக்கேன். நீட்டி முழக்கக் கூடாது. முகத்துக்கு நேரே நீதி சொல்லக் கூடாது. பட்பட்னு கதையும், ட்விஸ்ட்டும் சேர்ந்தே வரணும். இதெல்லாம் வேணும்னா ‘காத்தாடி’யில் அப்படியே இருக்கு!’’‘‘ஆமா, ‘காத்தாடி’ன்னா என்னங்க?’’

‘‘ ‘காத்தாடி’, நமக்கு நேரா உயரத்தில் பறக்கிற மாதிரிதான் இருக்கும். ஆனா காத்தை தள்ளிட்டு, எதிர்த் திசையில்தான் பறக்கும். நூல் கையை விட்டுப்போயிட்டா, அது எங்கே எப்படிப் போகும்னு அனுமானித்துச் சொல்லவே முடியாது. அப்படி ஒரு வாழ்க்கை இந்த சினிமாவில் இருக்கு. அதைத்தான் குறியீடா ‘காத்தாடி’ன்னு சொல்றோம். ஜெமின் ஜாம் ஐயானெத்னு அருமையான இளைஞன்தான் கேமரா.

படத்தைப் பார்த்த சில பேர் சொல்லிச் சொல்லியே பிரபலமாகி கேரளாவுக்குக் கொண்டு போயிட்டாங்க. அங்க மூணு படம் பண்றாரு. ‘பெட்போர்டு’ன்னு ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த காரை ஒரு கேரக்டராவே இதில் உருவாக்கியிருக்கோம்.

இசைக்கு பவன். அருமையான, அவசியமான ரெண்டு பாடல்களில் தெரிவார். பரபரக்கிற பின்னணி இசைக்கு தீபன் சக்ரவர்த்தி பொறுப்பு. சுவாரஸ்யமான சினிமா கொடுத்தால் ஒரு மரியாதையான இடத்தைத் தர தமிழ் சினிமா தவறியதே இல்லை. அப்படி ஒரு மரியாதை என் தயாரிப்பாளர் சீனிவாஸ் சம்பந்தனுக்கு கண்டிப்பாகக் கிடைக்கும்!’’

- நா.கதிர்வேலன்