தொல்லை



‘‘டேய் ப்ளீஸ்டா... ரெண்டு மாசமா எங்க கம்பெனியில சம்பளம் போடலடா. ஒரு பத்தாயிரம் இருந்தா ரெடி பண்ண முடியுமா?’’ - தன் நண்பர்கள் சரவணன், வேலு இருவருக்கும் போன் போட்டு இதையேதான் கேட்டான் கண்ணன். வழக்கம் போலவே அவர்கள் இல்லை என்று கைவிரித்தார்கள்.

‘‘என்னங்க, மாசம் பொறந்தா சம்பளம் எல்லாம் சரியா வருது. கை நிறைய சம்பாதிக்கிறீங்க! அது இல்லாம ஊர்ல இருந்து வாடகைப் பணம் வேற வருது. அப்புறம் எதுக்கு இந்த பஞ்ச வேஷம்?’’  - அவன் மனைவி கயல்விழி கேட்டாள். ‘‘அடிப் போடி! நாம நல்லாயிருக்கோம்னு தெரிஞ்சா அவனுங்க பணம் கேட்டு தொல்லை பண்ணுவானுங்க. நாம முந்திக்கணும். புரியுதா?’’ அன்று இரவு... கண்ணனுக்கு திடீர் நெஞ்சு வலி!

‘‘வேர்த்துக் கொட்டுது... எந்திரிக்க முடியல... சரவணன், இல்லன்னா வேலுவ வரச் சொல்லேன்!’’ - கண்ணன் கதறினான்.கயல்விழி அந்த இருவர் நம்பரையும் அழுத்தினாள்... ‘‘சே... இவனுக்கு வேற வேலையே இல்ல.  எப்ப பார்த்தாலும்  கடன் கேட்டுக்கிட்டு. பேசாம இந்த போனை...’’ - இருவருமே அடுத்து அழைப்பதற்குள் ஸ்விட்ச் ஆஃப் ஆனார்கள்.       

பெருமாள்   நல்லமுத்து