சண்டை



பிறந்த வீட்டுக்கு ஆட்டோவில் வந்து இறங்கினாள் விதுலா. வாசலிலேயே அவள் அம்மா விசாலாட்சி கையில் ஒரு பெரிய பையுடன் தயாராக இருப்பதைப் பார்த்து அவளுக்குக் குழப்பம்.“விதுலா, உன் வீட்டுக்கு வரத்தான் புறப்பட்டுக்கிட்டு இருக்கேன். வா, கிளம்பலாம். வீட்டுல உன் அப்பா இல்ல... இப்பவே போயிடலாம்!”

- விசும்பலுடன் சொன்னாள் விசாலாட்சி.“என்னம்மா பிரச்னை?” ஆதரவாய் கேட்டாள் விதுலா.“உன் அப்பா ரொம்பவே மாறிட்டாரு. இப்போல்லாம் ஃபேஸ்புக்கே கதின்னு கிடக்கறாரு. கண்ட கண்ட பொண்ணுங்ககூட சாட்டிங் பண்றதும், அவங்க போட்டோவையே பார்த்துக்கிட்டு இருக்குறதும்... ச்சே! இதனால எங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வந்து கோவத்துல அவர் லேப்டாப்பை உடைச்சுட்டேன்.

ஆத்திரத்துல அவர் என் கன்னத்துல அறைஞ்சுட்டு வெளியே கிளம்பிப் போயிட்டார். வயசான காலத்துல இந்த மனுஷனுக்கு இப்படியா புத்தி கெட்டுப் போகணும்? என்னால இவர் கூட இனி வாழ முடியாது. அதான் கொஞ்ச நாள் உன் வீட்டுல தங்கிடலாம்னு புறப்பட்டேன்!’’ - விசாலாட்சி சொல்லி முடித்தபோது விதுலாவுக்குப் பரிதாபமாக இருந்தது.

அம்மாவை சமாதானப்படுத்தி வீட்டுக்குள் அழைத்துச் சென்றவள், அப்பாவுக்கு போன் செய்து அவரையும் வரவழைத்தாள். இருவரையும் இணைத்து வைத்துவிட்ட பிறகே தன் வீட்டுக்கு விரைந்தாள்... காலையில் கணவனோடு கோபித்துக்கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டு வந்த விதுலா.              

ஐரேனிபுரம் பால்ராசய்யா