நயன்தாரா விஷயம் என் பர்சனல்!



டைரக்டர் விக்னேஷ் சிவன்

‘போடா போடி’க்குப் பிறகு இன்னும் பக்குவமாக, பரபரப்பாக இருக்கிறார் டைரக்டர் விக்னேஷ் சிவன். ‘நானும் ரவுடிதான்’ படத்தில் முழு ஈடுபாட்டோடு உழைக்கிற தாகம், ஆர்வம் கண்ணில் தெரிகிறது. நயன்தாரா நட்பைத் தவிர வேறு எதைக் கேட்டாலும் பளீர்... பளீர்... பதில்கள்தான்!

‘‘விஜய்சேதுபதி-நயன்தாரா... இந்தக் காம்பினேஷன்தான் எல்லோரையும் கவர்ந்திருக்கு...’’‘‘காதலை பல வகையிலும் பார்த்துட்டோம். நிறைய ஜாடை மாறியிருக்கணும்னு நினைச்சேன். அப்படியே தரமா வந்திருக்கிறதுதான் எனக்கு சந்தோஷம். எமோஷனல் கதையில் காமெடி ட்ரீட்மென்ட். ஒரு சினிமா அழ வச்சா சிரிக்க முடியாது, சிரிக்க வச்சா அழ முடியாது.

ஆனா, இதில் மொத்தமும் காமெடி கோட்டிங். விஜய்சேதுபதி, ‘நானும் ரவுடிதான்’னு நெஞ்சை நிமிர்த்தி சொல்லும்போதே சிரிப்பு வரும். இப்போல்லாம் பேயே காமெடி பண்ணும்போது, ரவுடி ஏன் காமெடி பண்ணக் கூடாது? ஒரு பொண்ணு நமக்குப் பிடிச்சிருந்தா, எதையும் செய்யலாம்னு இறங்கி அடிக்கத் துணிவோம் இல்லையா,

அப்படி ஒரு கேரக்டரில் விஜய்சேதுபதி வர்றார். அவர்கிட்ட கதை சொல்றதுக்கு முன்னாடியே ‘நான் இதுக்கு சரியா வருவேன்னு நம்புறீங்களா’ன்னு கேட்டார். ‘ஓகே’ன்னு சொன்னதும், சடசடன்னு எடையைக் குறைச்சு மீசை, தாடியை எடுத்து இன்னும் இளைஞன் ஆகி வந்தார்!’’

‘‘கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் சேதுபதி, ‘நயன்தாராவோட நடிக்க ஆசை’ன்னு சொன்னார்..?’’‘‘நானே இதை அப்புறம்தான் கேட்டேன். முதல்ல இந்தப் படத்தில் வந்தவர் நயன்தாராதான். அப்புறம்தான் விஜய்சேதுபதி கமிட்டானார். இந்தக் கதைக்குத் தேவையான அத்தனை அழகையும் அவங்க ரெண்டு பேரும் கொண்டு வந்து சேர்த்திருக்காங்க.

யார் கூட சேர்ந்து நடிச்சாலும் அவங்ககூட சினிமாவில் ஒரு கெமிஸ்ட்ரி உருவாக்குவதில் நயன்தாரா சிறப்பா இருப்பார். கணிசமா எடை குறைச்சு, வுமன்ல இருந்து ஒரு கேர்ள் தோற்றத்திற்கு அவரால் வரமுடிஞ்சது.

சேதுபதி ஒரு ஷாட்டுக்கும் அடுத்த ஷாட்க்கும் இடையில் கூட வேறுபட்ட நடிப்பைக் கொடுப்பார். அவருடைய சில படங்கள் சரியா போகாமல் இருந்ததற்கு தப்பா செலக்ட் பண்றார்னு சொன்னாங்க. எனக்கு அதில் கொஞ்சமும் உடன்பாடில்லை. பலரும் ‘எது பாதுகாப்பு’ன்னு பார்த்து, அதை மட்டுமே செய்து ஜெயிக்கறதுல குறியா இருக்காங்க.

ஆனால் அவர் பிடிச்சதை தைரியமா செலக்ட் பண்றார். 55 வயது கேரக்டரை எடுத்துப் பண்ண இங்கே நிறைய பேர் தயங்குவாங்க. அவர் எப்படி நடிச்சாலும் அதில் ஒரு தரம் பார்க்கறார். அவருக்கு வருகிற காமெடி ரொம்ப வித்தியாசம். இன்னும் ஆர்.ஜே. பாலாஜி, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன்னு பெரிய செட் இருக்கு!’’

‘‘சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகான்னு பெரும் நடிகர்களை வரவழைச்சிட்டீங்க..?’’‘‘ ‘நானும் ரவுடிதான்’ மசாலா கிடையாது. எமோஷனல் ரொமான்டிக் காமெடின்னு ரத்தினச்சுருக்கமா சொல்லலாம். ராதிகா மேடம் போலீஸா வர்றாங்க.

எங்க அம்மா கூட போலீஸ் வுமன்தான். ஒரு சிங்கிள் மதரா, வீட்டுலயே ஒரு போலீஸைப் பார்த்து வளர்கிற சூழ்நிலை வேற மாதிரி இருக்கும். ராதிகா மேடம் சீக்கிரத்தில் ஒரு படத்தை ஏத்துக்கிறவங்க இல்லை. இந்தப் படத்தில் விசேஷம் என்னன்னா, ஒவ்வொருத்தரும் தங்களோட கேரக்டர் பிடிச்சு நடிக்க முன்வந்தாங்க. பார்த்திபன் இதில் வில்லன்.

அது ஹீரோ மாதிரியான வில்லன் கேரக்டர். அவரெல்லாம் என் ப்ராஜெக்ட்டில் இணைஞ்சதே எனக்கு பெரிய கௌரவம். இப்ப நயன்தாராவுக்கு நல்ல சீஸன். ஜாலியா, பாட்டு, டான்ஸ்னா அதுக்கும் அவங்க ரெடி. ‘ராஜா ராணி’, ‘மாயா’ மாதிரி வேறு விதமான படங்களுக்கும் அவங்க இன்புட்ஸ் ரொம்ப அதிகம். அவங்க இதில் காது கேட்காத கேரக்டரில் வர்றாங்க. அப்படிப்பட்டவங்களோட பிரச்னைகளை அறிஞ்சு செய்த கேரக்டர் அது!’’

‘‘தனுஷ் தயாரிப்பு... அவர் படமென்றால் அனிருத் அதிகம் மெனக்கெடுவாரே..?’’‘‘இதில் அவரது பாடல்கள் எல்லாமே இதயத்திலிருந்து நேரே வந்து பதிவாகியிருக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடலா வெளியிட்டு அதுக்கு செம ரெஸ்பான்ஸ்.

தாமரை ஒரு பாடலை எழுத, மற்ற பாடல்களை நானே எழுதியிருக்கேன். ஆறு பாடல்கள். மெலடி, குத்துப்பாட்டுனு தனியாக சொல்ல முடியாது. கமர்ஷியல் ஹிட்... அதுதான் என் டார்கெட். என்கூட எல்.கே.ஜியிலிருந்து படிச்ச நண்பன்  ஜார்ஜ் வில்லியம்ஸ்தான் ஒளிப்பதிவு. ‘ராஜா ராணி’க்குப் பின்னாடி அருமை  அருமையா இதைச் செய்திருக்கான்!’’

‘‘தனுஷ் ஷூட்டிங் ஸ்பாட் வந்து பார்த்தாரா..?’’‘‘அய்யோ... அவர் இன்னும் படத்தின் ஒரு ஃப்ரேம் பார்க்கலை. ஆரம்ப தினம் அன்னிக்கு வந்து கை குலுக்குகிறவர், அப்புறம் முதல் பிரதி பார்த்துட்டுத்தான் கை கொடுப்பாராம். அதுதான் அவர் ஸ்டைல். அதுகூட நல்லதுதான். கேள்வி கேட்டால் பதில் சொல்லலாம். பொறுப்பைக் கொடுத்தால் எப்படி தட்டிக் கழிக்க முடியும்?’’ ‘‘இந்தக் கேள்வி கேட்காம பேட்டி முடியாது! நயன்தாராவுக்கும் உங்களுக்குமான ரிலேஷன்ஷிப் எவ்வளவு உண்மை?’’

‘‘படம் முடிச்சு வெளிவர்ற சமயம் இதெல்லாம் வேண்டாமே... கவனம் அதில்தான் போகும். தவிர, இந்த விஷயம் என் ப்யூர் பர்சனல். அதோட, இது ஒருத்தர் விஷயமில்லை... இரண்டு பேர் சம்பந்தப்பட்டது. ஒண்ணு மட்டும் சொல்லியாகணும். என்னையும் அவங்களையும் இணைச்சுப் பேசுறப்ப, கேரளாக்காரன்னு என்னைச் சொல்றாங்க. நான் பக்கா மதுரைக்காரன். ஜெய்ஹிந்த்புரம்தான் நம்ம ஏரியா. மலையாளத்தில் ஒரு வார்த்தை கூட எனக்குத் தெரியாது. அதெல்லாம் எதுக்கு? இப்ப, ‘நானும் ரவுடிதான்’ மட்டும்தான் முதல் அட்ராக்‌ஷன் எனக்கு... ப்ளீஸ்!’’

- நா.கதிர்வேலன்