ஐந்தும் மூன்றும் ஒன்பது



மர்மத் தொடர் 43

‘‘ஆக மொத்தத்தில் அமானுஷ்ய அனுபவம் ஒன்றுக்கு நான் ஆளாக வேண்டுமென்றால், ஒரு உண்மையான சித்தரின் தொடர்பும் அவர் உதவியும் தேவை என்று ேஜாசப் சந்திரன் கூறியதை நான் ஏற்றுக்கொண்டேன். அமானுஷ்ய அனுபவத்துக்கான என் விருப்பத்தையும் தேடலையும் என் பணிசார்ந்த ஒன்றாகக் கருத முடியாது. அது என் தனிப்பட்ட விருப்பம்.

இதற்கு நடுவே பணி சார்ந்த தேடல்கள், ஆய்வுகள் ஒருபுறம் தொடர்ந்து கொண்டே இருந்தன. அந்த வகையில் மதுரையைச் சுற்றியும் புதுக்கோட்டையைச் சுற்றியும் உள்ள மலைகளில் சமணத் துறவிகள் வாழ்ந்திருந்ததோடு, அவர்கள் அங்கே மனிதன் நிம்மதியாக வாழ்ந்திட பின்பற்றிய முறைகள் எல்லாமும் ஒவ்வொன்றாகத் தெரிய வந்தன.

குறிப்பாக சமணக் கல்வெட்டுகள் காணப்பட்ட அவ்வளவு மலைப்பகுதியிலும் வலிமையான நீராதாரம் கொண்ட குளங்கள் இருந்தன. அடுத்து, பாம்பு நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் சிரியாநங்கை மூலிகைச் செடிகள் வளர்க்கப்பட்டிருந்தன. வேகமாகவும் தானாகவும் உதிர்ந்துவிழும் நந்தியாவட்டை பூச்செடிகள், பன்னீர் மரங்கள் என்று வெண்ணிறப் பூக்கள் பூக்கும் தாவரங்களே மிகுதியாகக் காணப்பட்டன.

எங்கள் தேடலில் ஆடித் தொட்டி என்கிற அம்சம் குறிப்பிடத்தகுந்தது. நின்றிருக்கும் நிலையில் கீழே பார்த்தால் வட்டமாய் தண்ணீர் தேங்கி
யிருக்கும். அதில் பாசி பூத்த  நிலையில், தண்ணீரின் மேற்பரப்பில் நம் முகம் பளிச்சென்று தெரியும். அந்தத் தொட்டியைக் கண்ணாடியாகக் கருதி தலைமுடியை ‘வபனம்’ எனும் முடி நீக்குதலை சமணர்கள் செய்துகொண்டதை யூகிக்க முடிந்தது.

அடுத்து, அவர்களது கல் படுக்கைகள்... அதன் மேல் படுத்தபோது ஜில்லென்று இருந்தது. காற்றும் நன்கு வீசியது. மிகுந்த பூகோள அறிவோடும், விஞ்ஞான அறிவோடும் அவர்கள் அங்கே வாழ்ந்துள்ளனர். அவர்கள் வாழ்ந்த  மலைப்பகுதிகளில் எண்ணெய்க்குழிகளும் காணப்பட்டன. இரவு நேரங்களில் தீப்பந்தங்களுக்குத் தேவையான எண்ணெய்க்காக எண்ணெய்க்குழிகள் உருவாக்கப்பட்டு, அதில் எண்ணெய் சேமித்து வைத்திருந்தனர். தாவர எண்ணெய்களைப் பயன்படுத்தியே அவர்கள் இரவுப் பொழுதைக் கழித்ததும் தெரிந்தது.

அப்படி வாழ்ந்த ஒரு சமூகம் இப்போது சுத்தமாக இல்லை. தடயங்களோ பல செய்திகளைச் சொல்லிக்கொண்டு இருக்கின்றன.எனது தொல்பொருள் ஆய்வில் மிக ரசமான ஒரு சம்பவத்தையும் நான் குறிப்பிட வேண்டும். வடகரை என்று ஒரு கிராமம். இந்த கிராமத்தில் வயலை ஒருவர் உழுதபோது கலப்பைக்் கொழுமுனை தட்டி பெரும் புதையல் பானை ஒன்று கிடைத்தது.

விரல் அளவு பருமன் உள்ள ஐம்பொன்னால் ஆன பானைக்குள் ஏராளமான பொற்காசுகளும், நகைகளும் இருந்தன. அதில் ஒரு செப்புப் பட்டயமும் இருந்தது. அந்தப் பட்டயத்தில், ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதியை ஆட்சி செய்த அரசன் ஒருவன் அந்தக் குடும்பத்துக்கு அந்த கிராமத்தையே சொந்தமாக எழுதிக் கொடுத்திருந்தான்.

‘நான்கு மால் எனப்படும் நான்கு திசைகளிலும் உள்ள ஈட்டி எறியப்படும் அளவிலான தூரம் வரை அவன் குடும்பத்துக்கு 1000 ஆண்டுகளுக்குச் சொந்தம் என்றும், மையமானது அந்த ஊர் சிவன் கோயில் கோபுரத்தின் உச்சி’ எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது கோபுர உச்சியில் நின்றுகொண்டு ஈட்டியை எறிய வேண்டும். நான்கு புறமும் இப்படி ஈட்டி எறிந்து, அது விழும் தொலைவைக் குறியிட்டு அளந்து கொடுப்பதோடு, அவன் குடும்பத்தின் விருப்பத்துக்கேற்பவே ஊர்த் தலையாரி நடக்க வேண்டும் என்று இருந்தது.

அதன்படி பார்த்தால் இன்றுகூட அந்த ஊர் முழுக்க அந்தக் குடும்பத்துக்கே சொந்தம். கிட்டத்தட்ட பதினைந்து ஏக்கர் பரப்பளவு வருகிறது. இன்றோ உள்ளபடியே நிலத்தைப் பயன்படுத்தி உழுது பிழைக்கவேண்டிய ஒரு அவல நிலை அந்தக் குடும்பத்துக்கு! அந்த நபர் புதையல் தங்கத்தை தாசில்தாரிடம் ஒப்படைத்துவிட்டு, ‘பட்டயப்படி ஊரைத் தங்கள் குடும்பத்துக்குச் சொந்தமாக்கித் தர வேண்டும்’ என்று கூறி உண்ணாவிரதமெல்லாம் இருக்கத் தொடங்கிவிட்டார்.

அப்போது அந்தப் பட்டயத்தைப் படித்து பொருள் சொன்னது நான்தான். அந்தப் பட்டயம் இன்றுள்ள ஜனநாயக நடைமுறைச் சட்டங்களுக்கு
செல்லுபடியாகாது என்று தெரிந்தும் அந்த நபர் விடாமல் முயற்சி செய்தார்!”- கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...வள்ளுவரின் சிரிப்பு வர்ஷனையும் ப்ரியாவையும் கூர்மையாக்கியது.‘‘அய்யா... தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கும் இந்த சந்தேகம் உண்டு. இப்ப இந்த ஏடு நமக்கு மட்டும் வழிகாட்ற ஒண்ணாதான் எனக்குப் படுது. அப்படி இருக்க, இது எப்படி பொதுவாகும்?’’ - வர்ஷனும் கேட்டான்.

‘‘சரியான கேள்வியைத்தான் கேட்டிருக்கீங்க! ஒரு விஷயத்த நல்லா புரிஞ்சிக்குங்க. எந்த ஒரு விஷயத்துக்கும் பார்வை ரொம்ப முக்கியம். பார்வைன்னா கண்ணால பாக்கறத மட்டும் நான் சொல்லல. மனசால பாக்கறதுங்கறதுதான் இங்க ரொம்ப முக்கியம். இதையே கொஞ்சம் மாத்தி ‘ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கோணத்துல பாக்கறது’ன்னும் சொல்லலாம். இந்தக் கோணமெல்லாம் தரைல நின்னு பாக்கும்போதுதான். அதேசமயம் பூமியில நாம் வசிக்கும்போது பார்க்கும் பார்வைக்கு பாதி பார்வைன்னுதான் பேர்! அது ஏன்னு தெரியுமா உங்களுக்கு?’’

 - வள்ளுவர் எங்கோ ஆரம்பித்து எங்கோ வந்தார்.‘‘பாதி பார்வையா... என்னய்யா சொல்றீங்க?’’ - என்று மேற்கு நோக்கிய பாதையில் காரைச் செலுத்தியபடியே கேட்டான் வர்ஷன்.‘‘ஆமாம்! பாதி பார்வைதான்... பாதி பார்வைகூட கிடையாது. ஒரு நேர்க்கோட்டுல பாக்கற அளவுக்கான பார்வைதான் உண்மைல மனிதப் பார்வை. இருந்தாலும் எதிர்ல ஒருவரைப் பார்க்கும்போது இட வலமா இரண்டு புறமும் உள்ளதும் தெரியும். நாம் அதை கவனிக்காம கவனிப்போம். நாம் எதை பாக்க விரும்பறோமோ, அதைத்தான் கூர்மையா பார்ப்போம். இப்ப நீ கூட ரோட்டை பாத்துக்கிட்டேதான்  கார் ஓட்றே... அதேசமயம் இரண்டு பக்கமும் மரங்கள் இருக்கறதும் உனக்கு தெரியத்தானே செய்யுது...?’’

‘‘அய்யா, நான் கேட்ட கேள்விக்கும் உங்க பதிலுக்கும் என்னய்யா சம்மந்தம்?’’
‘‘நிறைய இருக்கு தம்பி... என் கேள்விக்கு நீ பதில் சொல்லிக்கிட்டே வா.’’
‘‘சரி, கேளுங்க...’’

‘‘இப்ப நீ எதிர்லதானே பாக்கறே?’’
‘‘ஆமா...’’‘‘பின்னால பாக்கலதானே?’’

‘‘முன்ன பாக்கும்போது பின்னால எப்படிய்யா பாக்க முடியும்?’’‘‘கரெக்ட்... இதைத்தான் நான் அரைப்பார்வைன்னு சொன்னேன். எப்பவும் பூமியில நாம் இருக்கும்போது இந்த அரைப்பார்வைங்கற அரை வட்டப் பார்வைதான் பார்க்க முடியும். பின்பக்கம் திரும்பிப் பார்க்கும்போது, நாம ஏற்கனவே பாத்துக்கிட்டிருந்த முன்பக்கம் மறைஞ்சிடும்...’’‘‘இதுல நாம் புதுசா யோசிக்க என்ன இருக்கு?’’

‘‘என்ன தம்பி அப்படி கேட்டுட்டே... இதுக்குள்ள யோசிக்க எவ்வளவு விஷயங்கள் இருக்கு தெரியுமா?’’
‘‘என்னய்யா சொல்றீங்க?’’‘‘நல்லா யோசி தம்பி... நாம பாக்கற பார்வையும் பாக்கற கோணமும் சரியான விதத்துல இருக்கணும்!’’
‘‘அய்யா... இந்த அரைப்பார்வை... சரியான கோணம்னு நீங்க சொல்றதெல்லாம் எதுக்குய்யா? புரியல எனக்கு!’’

‘‘அவசரப்படறியே தம்பி... இந்த சரியான கோணம்னா என்னங்கறத முதல்ல தெளிவுபடுத்திக்கோ... உன்னை நேருக்கு நேரா - குறிப்பா, முகத்துக்கு நேரா பாக்கும்போதுதான் நீ வர்ஷன். நான் உன்னை பின்பக்கமா பார்க்கும்போது - குறிப்பா தூரத்துல இருந்து பார்க்கும்போது - நீ வேற யாரா கூட இருக்கலாம்னு ஒரு தயக்கம் எனக்கு இருக்கும். உன் முகத்தை பாக்கறவரை அது தொடரும். இல்லையா?’’‘‘அய்யா, இதெல்லாம் தெரிஞ்ச விஷயம். நீங்க பாயின்ட்டுக்கு வாங்க...’’
‘‘வரேன்... பாக்கறதெல்லாம் பார்வை ஆயிடாது. சரியான கோணத்துல பாக்கணும். அப்படியும் பூமியில யாரா இருந்தாலும் அரைவட்டப் பார்வைதான்.’’
‘‘அதனால...’’

‘‘ஆகாயப் பார்வைன்னு ஒண்ணு இருக்கு... இதை பறவைப் பார்வைன்னும் சொல்லலாம்...’’
‘‘அப்ப பறவைப் பார்வை வேணுமா?’’‘‘இந்த மாதிரி புதிரான, ஒளிஞ்சிருக்கற விஷயங்களுக்கு பறவைப் பார்வை பார்க்கணும். பறவை பறந்துக்கிட்டே கீழே பார்க்கும்போது அதுக்கு பூமியோட எல்லா பாகமும் தெரியும். அதுல பாக்க வேண்டியத துல்லியமா பாக்க அதனால முடியும்...’’
‘‘பறவைக்கு அது சாத்தியம்... நமக்கு எந்த வகையில சாத்தியம்?’’

‘‘சாத்தியப்படுத்திக்கணும். பறவைப் பார்வை பார்க்க இப்ப பாக்கற பார்வையைப் பற்றின தெளிவு ரொம்ப முக்கியம்.’’
‘‘அப்ப இந்த ஒரு விஷயத்தை பறவைப் பார்வை பார்த்தா புரியுமா?’’‘‘இப்பவே ெதளிவா புரியறதாலதான் மேற்கு நோக்கி போய்க்கிட்டிருக்கோம். நீ கேட்ட கேள்விக்கும் பறவைப் பார்வைலதான் விடை இருக்கு.’’‘‘நீங்களே அதைச் சொல்லிடுங்களேன்.’’

‘‘இந்த ஏடு மாறாத ஒண்ணு... இந்தக் குறிப்பை நாம எந்த இடத்துல இருந்து படிச்சாலும் இதுல உள்ள குறிப்பு காலப்பலகணி உள்ள இடம் நோக்கிதான் கூட்டிக்கிட்டு போகும். எப்ப இதை எப்படியாவது அடைய நினைக்கறவங்க விபத்துக்கு ஆளாகி இறந்து போறாங்களோ அப்பவே ஒரு சக்தி வழிநடத்துதுங்கறது உங்களுக்குத் தெரியலையா?’’

‘‘அதுதான் வியப்பா இருக்கு... வழி நடத்தற அந்த சக்தி எதுக்கு இப்படி நம்மை அலைய விடணும்? பேச விடணும்? அந்த காலப்பலகணியை தூக்கி நம்ம கைல கொடுத்துடலாமே? இல்ல, இடத்தை பளிச்னு காட்டிடலாமே...?’’‘‘இப்படியெல்லாம்தான் பகுத்தறிவு கேட்கச் சொல்லும். தப்பு இல்லை. உன் கேள்விப்படி பார்த்தா, ஒரு தாய் பத்து மாசம் வயித்துல குழந்தையை சுமக்கத் தேவையே இல்லை. வயல்ல நெல் நாற்றும் வளரத் தேவையில்லை. முடிவான பயன் உடனே கிடைச்சா நல்லா இருக்குமேன்னு மனசு நினைக்கும். அதனால அப்படி எல்லாம் நடந்துடுமா?’’

- வள்ளுவர் கேள்விக்கு என்ன பதில் சொல்லறது என்று தெரியாமல் வர்ஷன் காரைச் செலுத்த, அவன் பாக்கெட்டில் இருந்த செல்போன் அதிர்ந்தது. அது காலை சுகுமார் வசம் இருந்து ரயில்வே ட்ராக்கில் தெறித்து விழுந்த அந்த செல்போன். ஒரு கையால் காரை டிரைவ் செய்தபடியே செல்போனை எடுத்து திரையைப் பார்த்தான். ‘சாவ்லா’ என்று இதற்கு முன்பு பார்த்த அதே பெயர். காரை வேகமாக ஓரம் கட்டினான். தீர்க்கமாய் பார்த்தவன், அதை கட் செய்துவிட்டு மெஸேஜ் பாக்ஸ் வழியாக சாவ்லாவுக்கு தகவல் தரத் தொடங்கினான்.

‘நானாக அழைக்கும் வரை என்னை அழைக்காதே. எல்லாம் நல்லபடி போய்க் கொண்டிருக்கிறது’ என்று ஆங்கிலத்தில் செய்தி அனுப்பியவன், செய்தி சென்றது தெரிந்த நொடி போனை ஸ்விட்ச் ஆஃப் செய்தான்.‘‘இது அந்த சுகுமார் போன் இல்ல?’’‘‘ஆமா... நடுவுல இந்த போன் பத்தின ஞாபகமே இல்லாம போயிடுச்சு. இப்ப போன் வரவும்தான் ஞாபகமே வந்தது...’’‘‘சுகுமார்தான் செத்துட்டானே... அப்புறம் எப்படி போன் வருது?’’

‘‘இவனுக்கு சுகுமார் சாவு பத்தி தெரியல... போலீசுக்கே அது சுகுமார்ங்கறது தெரிய வருமாங்கறது சந்தேகம். முகம் அந்த அளவு சிதைஞ்சு போயிருந்தது. அனேகமா அன்க்ளைம்டு பாடியா அதை அடக்கம் பண்ணத்தான் வாய்ப்பு அதிகம்!’’‘‘அதனாலதான் இப்ப சுகுமார் உயிரோட இருக்கற மாதிரியே செய்தி அனுப்பினியா?’’
‘‘ஆமாம். நம்மை ஃபாலோ பண்றவங்க யார்... அவங்க எப்படிப்பட்டவங்கன்னு நமக்குத் தெரியறவரை சுகுமார் உயிரோட இருக்கற மாதிரியே காட்டிக்கணும்.’’
‘‘இந்த போன் மூலம் அது சாத்தியமா?’’

‘‘இன்னிக்கு செல்போன் ஒருத்தன்கிட்ட இருந்தா போதும். அவனை ட்ரேஸ் பண்றது மட்டுமல்ல, அவன் எப்ப என்ன செஞ்சாங்கறது வரை கண்டுபிடிச்சிடலாம். கடவுள் குடியிருக்கற கோயில் கோபுரங்களை விட, செல்போன் டவர் இரும்பு கோபுரத்துக்குத்தான் இப்ப பூமியில மதிப்பும் சக்தியும் அதிகம் ப்ரியா. நமக்கு இப்ப தேவை செல்போனுக்குள்ள புகுந்து வெளிய வரத் தெரிஞ்ச ஒரு மேதை.’’‘‘வர்ஷன்... இந்த சாவ்லா குரூப்பை தெரிஞ்சு என்ன செய்யப் போறோம்?’’
‘‘நம்மைப் பின்தொடர்ந்து வந்து நம்ம திறமையாலயும் உழைப்பாலயும் நாம கண்டுபிடிக்கப்போற ஒரு உலக அதிச யத்தை தன்வசப்படுத்திக்க நினைக்கற ஒரு குரூப்பை நீ அலட்சியப்படுத்தச் சொல்றியா ப்ரியா..?’’

‘‘அப்படிச் சொல்லலை நான். அவங்கள தெரிஞ்சுக்கிட்டு என்ன செய்யப் போறோம்ங்கறதுதான் என் கேள்வி.’’‘‘அதுக்கு முந்தி காலப்பலகணியைக் கண்டுபிடிச்சு என்ன செய்யப் போறோம்ங்கறதும் முக்கியமில்லையா?’’‘‘சரியா சொன்னே தம்பி... பலகணியை நாம இப்ப தேடி புறப்பட்டிருக்கறது பணத்துக்காகவோ... இல்ல, நம்ம தேவைக்காகவோ இல்லை. அது ஒரு அதிசயம். அதுக்குள்ள நாளைக்கு நடக்கப் போற சம்பவங்கள் எல்லாம் ரகசியமா புதைஞ்சு கிடக்குது. அதை நாம தெரிஞ்சுக்கிட்டு என்ன செய்யப் போறோம்ங்கறதுதான் உண்மைல நம் முன்னால் உள்ள ேகள்வி...’’

- வள்ளுவர் வர்ஷன் கேட்ட கேள்வியை கூர்மைப்படுத்தினார்.‘‘அய்யா... நம்மை ஒரு சக்தி வழி நடத்துதுன்னு சொன்னீங்க. அப்ப அந்த சக்தி நம் மூலமா காலப்பலகணியைக் கொண்டு இந்த உலகத்துக்கு ஏதாவது சொல்ல விரும்பலாம் இல்லையா?’’

‘‘வாஸ்தவம்தான்... காலப்பலகணி பத்தி நமக்கு தாக்கம் ஏற்பட்டு நாம இவ்வளவு தூரம் அதை நோக்கி வந்துட்டோம். எங்கோ மறைவா இருக்கற அது, ஒரு புதையல் போல மறைவாவே இருந்திருந்தா நம்மகிட்ட இந்த கேள்விக்கெல்லாம் இடமேயில்லை. எப்ப நாம ஒண்ணா சேர்ந்து நம்மைப் பின்தொடர்ந்து வர்றவங்களுக்குக்கூட தெரியாம இவ்வளவு தூரம் வந்துட்டோமோ, அப்ப நம்மை வழிநடத்தற சக்தியோட விருப்பப்படிதான் எதுவும் நடக்க முடியும். அது என்னன்னு போகப் போகத்தான் நமக்கே கூட தெரிய வரும். ஆகையால நாம தொட்டுத் தொட்டு போய்க்கிட்டு இருப்போம்...’’

‘‘அப்ப நாம இப்ப தேடற பலகணியை நம்ம மூலமா அபகரிக்கப் பாக்கற கோஷ்டி யாருன்னு நாம தெரிஞ்சுக்கத்  தேவையில்லையா?’’
‘‘தெரிஞ்சிக்குவோம்... நாம தெரிஞ்சிக்கணும்ங்கறதாலதான் அந்த செல்போன் நம்ம கைல கிடைச்சிருக்கு...’’‘‘அவங்க யாருங்கறது மட்டுமல்ல... அவங்களுக்கு எப்படி காலப்பலகணி பத்தி தெரிய வந்தது... இதைக் கொண்டு அவங்க எதை தெரிஞ்சுக்க விரும்பறாங்கன்னும் நாம தெரிஞ்சிக்கணும்!’’

‘‘அப்ப ஒரே வழிதான் இருக்கு... எனக்கு ரஞ்சித்னு ஒரு ஃபிரெண்ட் இருக்கான். செல்போன், கம்ப்யூட்டர்னு சகலத்துலயும் அவன் ஒரு எமன். அவனை நாம கூட்டு சேர்த்துக்கிட்டு செயல்படணும். இந்த செல்லை அவன்கிட்ட கொடுத்தா, அவன் இதோட மெமரிக்கு போய் சுகுமார் கான்டாக்ட் பண்ண நம்பர்களையும், அந்த நம்பர்களுக்குரிய அட்ரஸையும் கண்டுபிடிச்சிடுவான். ஒருபடி மேல போய், என்ன பேசிக்கிட்டாங்கன்னும் கண்டுபிடிச்சிடுவான். அவன் போலீஸ் இன்
ஃபார்மராவும் இருக்கறவன்.

குறிப்பா சைபர் க்ரைமுக்கு வர்ற சவாலான பிரச்னைகளை சைபர் க்ரைம் ஆபீசர்ஸ் ரஞ்சித்தை வெச்சுதான் தீர்த்துக்கறாங்க.’’
‘‘தம்பி... நமக்கு இப்ப அந்தத் தம்பியைப் பாக்க எல்லாம் நேரமில்ல. நாம இப்ப நூல் பிடிச்ச மாதிரி போய்க்கிட்டிருக்கோம். நடுவுல திசை திரும்பக் கூடாது. திசை திரும்பவும் முடியாது. அவரை வேணும்னா நம்மள வந்து பாக்க சொல்லுங்க. அப்புறம் அவர் எந்த அளவு நம்பகமா நமக்கு உண்மையா இருப்பார்னும் யோசிச்சிக்குங்க...’’- வள்ளவர் சொன்னதைக் கேட்டபடியே ரஞ்சித்துக்கு போன் செய்யத் தொடங்கினான் வர்ஷன்!

 ‘‘அதென்ன பார்லிமென்ட் வெடி?’’‘‘பயங்கர கூச்சலோட வெடிச்சு வெளிநடப்பு செய்துடும்!’’

கடவுள் குடியிருக்கற கோயில் கோபுரங்களை விட, செல்போன் டவர் இரும்பு கோபுரத்துக்குத்தான் இப்ப பூமியில மதிப்பும் சக்தியும் அதிகம்!

‘‘நம்ம வீட்ல பத்த வச்சா பக்கத்து வீட்டுல போய் வெடிக்குமா... என்ன வெடி அது?’’
‘‘புதுசா வந்திருக்கற கட்சி தாவல் வெடி இது தலைவரே!’’

‘‘தீபாவளிக்கு நீ செஞ்ச பலகாரத்தை வீடு வீடா நான் கொண்டுபோய் கொடுத்திருக்கக் கூடாது...’’‘‘ஏன்... ஏன்னாச்சுங்க?’’‘‘பயங்கரவாதத்துக்குத் துணை போனதா என்னைப் பற்றி பேசிக்கறாங்க!’’

- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

- தொடரும்...

இந்திரா சௌந்தர்ராஜன்

ஓவியம்: ஸ்யாம்