கிரகங்கள் தரும் யோகங்கள் 11மேஷ லக்னத்துக்கு செவ்வாயும் கேதுவும் தரும் யோகங்கள்

‘சனியைப் போல் ராகு, செவ்வாயைப் போல் கேது’ என்று பிருஹத் சம்ஹிதை உள்ளிட்ட பழைய நூல்கள் உரத்துக் கூறுகின்றன. செவ்வாயின் சிஷ்யர், செவ்வாயின் சாயல், செவ்வாயின் பிம்பம் என்றே கேதுவைச் சொல்லலாம். செவ்வாயோடு ராகுவோ அல்லது சனியோ சேர்ந்திருந்தால் அது கொஞ்சம் கடுமையான பலன்களைக் கொடுக்க வல்லது. ஆனால், செவ்வாயும் கேதுவும் சேர்ந்தால் அதை சுகமான சுமை என்று கூறலாம்.

வேக கிரகம் செவ்வாய் எனில் விவேக கிரகமே கேதுவாகும். கருநாகம் ராகு எனில் செந்நாகமே கேதுவாகும். செவ்வாய் பூமியெனில், கேது மண்ணின் வளமையை அதிகரிக்கும் உயிர்ச் சத்தாக விளங்குகிறது. மண்ணின் வளத்தையும் வீரியத்தையும் தீர்மானிப்பதே கேதுதான். ‘‘அந்த ரெண்டு நிமிஷம் அமைதியா இருந்திருந்தா எங்கேயோ போயிருப்போம்’’ என்று செவ்வாயின் உணர்ச்சி வேகத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதே கேதுவின் நிதான ஞானமாகும்.

செவ்வாய் எப்போதுமே உடலியல் உணர்ச்சிக் கிரகம்; கேது மனவியல் உணர்ச்சிக் கிரகம். செவ்வாய் என்பது கண்ணுக்கு எதிரே நடக்கும் அக்கிரமத்திற்கு எதிராக ஆயுதத்தை ஏந்தக் கூடிய கிரகம். கேது என்பது கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் நடத்தும் கிரகம். செவ்வாய் என்பது தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு என்றிருக்கும் கிரகம். ஆனால், கேது அதையும் தாண்டி தன் வீதி, ஊர், தாய்நாடு என்று இருக்க வைக்கும் கிரகம். இதையும் தாண்டி தன் மகள், தன் மகன் என எதுவும் மரணத்திற்குப் பிறகு  தன்னோடு வராது என்கிற ஞானப் பாதையைக் காட்டும் கிரகம் கேது.

முடி முதல் நகம் வரை மூச்சுக்காற்றை உள்ளனுப்பி மும்மூர்த்தியைத் தேட வைப்பதும் கேதுதான். பழனி தைப்பூச விழாவில் அதிக எடைகொண்ட தேரை இழுக்க வைக்கும், காவடியை சுமக்க வைக்கும் கிரகம் செவ்வாய். உடையாலும் மனதாலும் உள்ளத்தாலும் ஒருமுகமாகி பச்சைத் தண்ணீர் பல்லில் படாமல், உமிழ்நீரை உள்ளனுப்பாமல், உதிரத்திலெல்லாம் ஓங்கார ஓட்டத்தை உருட்டியபடி இருப்பவர் கேது ஆவார். இப்படி உடலால் செவ்வாயும், உள்ளத்தால் கேதுவும் இணைந்தால் அங்கொரு மகத்தான ரசவாதம் நிச்சயம் நிகழத்தான் செய்யும். டிரான்ஸ்பார்மர் செவ்வாய் எனில் அதிலுள்ள மின்னோட்டமே கேது.

மேஷ லக்னத்திலேயே செவ்வாயும் கேதுவும் அமர்ந்திருந்தால் அது வித்தியாசமான நடத்தை கோலத்தைக் கொடுக்கும். ‘அனைத்தையும் அனுபவிக்க வேண்டும், அனைத்தையும் ஆட்சி செய்ய வேண்டும்’ என்கிற லக்னாதிபதி கிரகமான செவ்வாயுடன் நிழல் கிரகமான கேது அமர்கிறார். எனவே எல்லாவற்றிலும் ஒரு தயக்கம் இருந்து கொண்டேயிருக்கும். ஆன்மிகமெனில் ‘‘உடையில் என்ன இருக்கிறது. எல்லாம் மனதைப் பொறுத்தது’’ என்று ஜீன்ஸ் போட்ட சாமியாராக வளைய வருவார்கள். எல்லாவற்றையும் அடைந்தும்கூட எதிலும் நிறைவுறாமல் எதையோ தேடிக்கொண்டே இருப்பார்கள்.

சின்னச் சின்ன விஷயத்தைக் கூட தள்ளிப்போட்டபடியே இருப்பார்கள். நெருக்கடி கொடுத்தால்தான் செய்து முடிப்பார்கள். கொஞ்சம் தடுமாற்றத்திற்கிடையேயும் விழித்துக் கொண்டு செயல்படுவார்கள். அடுத்ததாக ரிஷப ராசியில் இந்த அமைப்பு இருந்தால் தடாலடியாகவும் பேசுவார்கள்; தத்துவமாகவும் பேசுவார்கள். இவர்களுக்கு இடதுகண் பாதிப்பு கொஞ்சம் இருக்கும். எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் காசு தங்காது. அதிக செலவாளியாக இருப்பார்கள். தான் செய்யும் தவறுகளை கால, நேர சூழலுக்கேற்ப நியாயப்படுத்திப் பேசத் தயங்க மாட்டார்கள்.

‘‘இந்தக் காலத்துல இப்படியெல்லாம் இருந்தாதான் சரிவரும். எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லைன்னா அதுவொண்ணும் பெரிய பெருமை இல்லை’’ என்று பேசுவார்கள். ‘‘ஒரு திராட்சை ரசத்தை குடிச்சா என்ன தப்பு வந்துடப் போகுது’’ என்று பேசுவார்கள். இவர்களுக்கு நண்பர்கள் அதிகம் இருக்க மாட்டார்கள். கல்லூரிக் காலகட்டத்தில் கோர்ஸை செலக்ட் செய்வதில் குழப்பம் இருக்கும். கவுன்சிலிங் செய்வது மிகவும் பிடித்தமான செயலாக இவர்களுக்கு இருக்கும். குடும்பத்தின் மீது தான் பாசமாக இருப்பதுபோல, தன் மீது அவர்களுக்கு பாசமும் அன்பும் இல்லையே என்று ஆதங்கப்படுவார்கள். தெற்றுப்பல் அமைப்பு சிலருக்கு உண்டு. பகட்டுக்காக பணத்தை செலவழிப்பார்கள். எனவே, கொஞ்சம் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டிய அமைப்பு இது.

மிதுன ராசியான மூன்றாமிடத்தில் இந்த அமைப்பு இருந்தால் பிரபலங்களின் தொடர்பு கிடைத்தபடி இருக்கும். பேச்சிலும் நடவடிக்கைகளிலும் முதிர்ச்சி வெளிப்படும். ‘மருந்தை உட்கொள்வது நோயாளியின் கடமை. மருந்தைக் கொடுப்பது மருத்துவரின் கடமை. ஆனால், நோய் குணமாவதும் ஆகாமல் போவதும் மகேசன் கைகளில்’ என்று ஆழமான நம்பிக்கையோடு இருப்பார்கள்.

என்ன செயல் செய்தாலும் தன்னை மீறிய சக்தி ஒன்று செய்ய வைக்கிறது என்றே நம்புவார்கள். இவர்களில் சிலர் ஆரம்ப காலத்தில் சம்பிரதாயத்தைப் பழிப்பவர்களாக இருந்தாலும், மத்திம வயதில் சமயச் சடங்குகளை நியாயப்படுத்திப் பேசுவார்கள். சிலருக்கு உடனடி சகோதரர் இருப்பதில்லை. போகத்திலும் சுவையான உணவிலும் நாட்டம் அதிகமிருக்கும். போகப் போக ஆன்மிக வாழ்க்கையில் ஈடுபட்டு நிறைய புத்தகங்கள் எழுதுவார்கள்; சொற்பொழிவுகள் ஆற்றுவார்கள்.

கடகத்தில் செவ்வாய் நீசமாகிறது. ஆனாலும், கேதுவின் சக்திதான் அதிகம் ஓங்கியிருக்கும். ஆக, தன் குருநாதரான செவ்வாயை கலங்காமல், காயப்படுத்தாமல் கேது கொண்டு போவார். ஒன்றும் தெரியாதவர்கள் அதிகம் பேசமாட்டார்கள். அதேசமயம் அதிகம் தெரிந்தவர்களும் பேசமாட்டார்கள். இந்த வித்தியாசத்தை உணரச் செய்வதே கேதுதான். ஏனெனில், சொல்லும் சில வார்த்தைகளிலேயே ஞானம் வெளிப்படச் செய்வார் அவர். இவர்கள் இம்மாதிரிதான் இருப்பார்கள். ஆனால், செவ்வாய் நீசமாவதால் சுறுசுறுப்பு இருக்காது. இந்த இடத்தில் கேது, லக்னாதிபதியின் குறைகளை வெளியில் தெரியாத அளவுக்கு மூடி மறைத்துக் கொண்டு போவார்.

எல்லாவற்றிலும் தங்களை முன்னிலைப்படுத்த முயற்சி செய்வார்கள். இது சுக ஸ்தானமாக இருப்பதால் மனதை சுகமாக இருக்க வைப்பார் கேது. விரததாரியாக இருந்து நிறைய விரதங்களைக் கடைப்பிடிக்கச் செய்வார். கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்க்கும் மனோபாவம் இருக்கும். அடுத்தவர்களைப் பார்த்துப் பார்த்து தன்னை திருத்திக் கொள்வார்கள். தாயின் சாயலும் குணமும் தாக்கமும் அதிகமிருக்கும். சிலருக்கு தாயை சிறுவயதிலேயே பிரிய வேண்டியிருக்கும். வாகனம், சொத்து போன்ற எல்லா விஷயங்களிலும் எந்தக் குறையும் இருக்காது.

சிம்மத்தில் இந்த அமைப்பு சற்றே வித்தியாசமான பலனைக் கொடுக்கும். ஒரே ஓட்டுக்குள் இருந்து கொண்டு வெள்ளைக் கரு, மஞ்சள் கரு என்று மெல்லிய நூற்கோடாக பிரிந்திருப்பதுபோல இருக்கும் அமைப்பு இது. ‘லௌகீகம் எது? தெய்வீகம் எது?’ என்று தனித்தனியே பிரித்து வைத்திருப்பார்கள். இவர்கள் லௌகீகவாதியா ஆன்மிகவாதியா என்று பிரித்துணர முடியாது.

இவர்களிடம் மெல்லியதாக தலைக்கனம் இருந்தபடி இருக்கும். இவரைப் பற்றி, ‘‘பார்த்துப்பா! அவருக்குக் கொஞ்சம் கரிநாக்கு. ஏதாவது சொல்லிடப் போறாரு. எதுக்கு அவரு வாயில விழுந்து எந்திரிக்கற’’ என்று எச்சரிப்பார்கள். அந்த அளவுக்கு வாக்கில் வீரியமும் கடுமையும் இருக்கும். பெற்ற பிள்ளையாக இருந்தாலும், தத்துப் பிள்ளையாக இருந்தாலும் தப்பென்றால் தப்புதான். இரண்டு கருச்சிதைவுக்குப் பின்னரோ அல்லது நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரோதான் குழந்தை பாக்கியம் கிட்டும். வழக்காடித்தான் பூர்வீகச் சொத்தை மீட்பார்கள்.    

கன்னி ராசியில் இந்த அமைப்பு இருந்ததெனில் அழுத்தம் திருத்தமாக தன் கருத்தை வெளிப்படுத்துவார்கள். மிகச் சாதாரணமாக பெரிய கௌரவ பதவியில் அமர்வார்கள். தலைமைப் பண்பு மிகுந்திருக்கும். சித்தா டாக்டர், உப்பு தயாரித்தல் போன்ற தொழில்களை மேற்கொள்வார்கள். பொதுவாகவே இவர்கள் எதையும் எதிர்த்து சமாளிக்கும் திறனைப் பெற்றிருப்பார்கள். திடீரென்று யோக காலம் அமையும். கடன் வாங்கிக்கொண்டே இருப்பார்கள். அதுவும் அடைந்து கொண்டே இருக்கும். அதேசமயம் சொத்தின் பொருட்டு ஏதேனும் கடன் வாங்கினால் கூட பரவாயில்லை.

துலாம் ராசியில் செவ்வாயும் கேதுவும் இருப்பதை சர்ப்ப தோஷமென்று சொல்வார்கள். ஆனால், கேது செவ்வாயோடு சேர்ந்திருப்பதால் கொஞ்சம் தோஷம் குறையும். வாழ்க்கைத் துணை மிகுந்த ஆளுமையுள்ள நபராக இருப்பார். இந்த அமைப்பில் ஆண்கள் பிறந்தால் மனைவிக்குத் தெரியாமல் எந்தவித பணப்பட்டுவாடாவும் செய்யக் கூடாது. வேறு யாருடனும் அந்தரங்க நட்பெல்லாம் இருக்கக் கூடாது. திருமணம் நிச்சயமாகி நிச்சயதார்த்தத்திற்கும் திருமணத்திற்குமிடையே அதிக இடைவெளி கொடுக்கக் கூடாது.

விருச்சிகத்தில் செவ்வாயும் கேதுவும் சேர்ந்திருந்தால் விஷ ஜந்துக்களிடம் கவனம் தேவை. வளர்ப்புப் பிராணிகளை தவிர்க்க வேண்டும். உடன்பிறந்தவர்களை திருமணம் முடிந்தபின்னர் தனிக் குடித்தனம் வைப்பது உங்களின் வருங்கால நீண்ட உறவுமுறைக்கு நல்லதாகும். இவர்களுக்கு கனவைக் குறித்த ஆராய்ச்சி மிகுதியாக இருக்கும். அதனால் எல்லாக் கனவுகளையும் ஏதேனும் ஒருவிதத்தில் ஆராய்ந்த வண்ணம் இருப்பார்கள். சிறுவயதிலேயே மூல நோயால் அவதிப்படுவார்கள். இவர்கள் யாருக்குப் பணம் கொடுத்தாலும் கவனமாக பணத்தைத் திரும்ப வாங்க வேண்டும்.

தனுசு ராசியில் இந்த அமைப்பை உடையவர்களின் தந்தையார் குடும்பத்தில் பற்றில்லாதவராக இருப்பார். காலத்தாலும் சூழ்நிலையாலும் எல்லா சொத்துக்களையும் இழந்து மீண்டும் பெறுவார்கள்.  தகப்பனுக்கு ஏற்ற இறக்கங்கள் கொடுக்கும் ஒரு அமைப்பாகும். சிலருடைய தந்தை ஜோதிடராக இருப்பார். எப்போதும் தர்ம சிந்தனை ஓங்கியிருக்கும். மற்றவர்களின் தவறுகளைச் சட்டென்று சுட்டிக் காட்டிப் பேசுவதால் நிறைய எதிர்ப்பை சந்திப்பார்கள். வார வழிபாட்டு மன்றங்கள் வைத்து நடத்துவார்கள்.

மகர ராசியில் செவ்வாயும் கேதுவும் சேர்ந்திருந்தால் டாக்டராகும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. இன்னும் வேறு பார்வையில் பார்த்தால் கிருமிகள், நோய்கள், வழக்குகள் என்று மனித சமுதாயத்தின் பிரச்னைகளுக்குரிய இடத்தினைத் தேர்ந்தெடுத்து அதில் தீர்வு சொல்பவர்களாக இருப்பார்கள். உடலாலும் மனதாலும் ஏற்படும் பாதிப்புகளுக்கு வழி கூறி சரி செய்வார்கள். ஆரம்ப காலங்களில் மருத்துவராக இருந்துவிட்டு பின்னர் வேலையில் சலிப்பு ஏற்பட்டு, ஊர் பொதுக் காரியங்களில் கவனம் செலுத்துவார்கள். டிரஸ்ட் ஒன்றைத் தொடங்கி நிறைய சேவை செய்வார்கள். இதேபோல கும்பத்தில் இந்த அமைப்பு இருந்தால் மூத்த சகோதரரால் பிரச்னைகள் வந்து நீங்கும். ஆனால், அதுவே சகோதரி எனில் நல்லது. ஷேர் மூலம் நிறைய பணம் சம்பாதிப்பார்கள்.

மீன ராசியில் லக்னாதிபதியான செவ்வாயோடு ஞானகாரகனான கேது சேர்வதால் இனி அடுத்த பிறவி இல்லை எனும் நிலை உண்டாகும். சின்னச் சின்ன விஷயங்களைக் கூட போராடி முடிப்பார்கள். யாருக்கு இவர்கள் நல்லது செய்தாலும், அவர்கள் அதை நினைத்துப் பார்ப்பார்களா என்பதே சந்தேகம்தான். ஆனாலும், இந்த அமைப்பு இருப்பவர்கள் தீவிர ஆன்மிகம் நோக்கி தங்களின் பயணத்தைத் தொடங்குவார்கள். எந்த செல்வம் இல்லையென்றாலும் நிம்மதி என்கிற நிலையான செல்வத்தோடு வாழ்வார்கள்.

இந்த செவ்வாய் - கேது சேர்க்கையானது கொஞ்சம் விசித்திரமான நல்ல மற்றும் தீய பலன்களைக் கொடுக்கக் கூடியதாகும். எனவே, இந்த சேர்க்கையின் எதிர்மறை கதிர்வீச்சின் பாதிப்பிலிருந்து விடுபட நீங்கள் நெல்லை மாவட்டம் தென்காசிக்கு அருகே இருக்கும் ஆய்க்குடி முருகனைத் தரிசித்து வாருங்கள். அருணகிரிநாதரால் பாடப்பெற்ற புகழுடையது ஆய்க்குடி பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில்.

முற்காலத்தில் மல்லபுரம் என்ற இடத்திலிருந்த குளத்தை தூர்வாரியபோது மூலவரான பாலசுப்ரமணிய சுவாமியின் திருவுருவம் கண்டெடுக்கப்பட்டது; பின்னர் அந்தச் சிலையானது முருக பக்தரான சித்தர் ஒருவரின் சமாதிக்கு மேலே வைக்கப்பட்டு தற்போதுள்ள கோயில் எழுப்பப்பட்டது என்கிறார்கள். சைவ, வைணவ ஒற்றுமை கருதி ராமபக்தர்களும் இத்தலத்து முருகனை வழிபட ஆரம்பித்ததால் இங்குள்ள பாலசுப்ரமணியர், ஹரிராம சுப்ரமணியர் என்றழைக்கப்பட்டார்.

இங்கு நெளிந்தோடும் நதி அனுமன் நதி என்றாயிற்று. இங்கு ராமபிரான் வந்து சென்றதாகக் கூறப்படுவதன் அடிப்படையில் மூலவரான பாலசுப்ரமணியருக்கு வைகானஸ ஆகம முறையிலும், உற்சவரான முத்துக்குமார சுவாமிக்கு சிவாகம முறையிலும் பூஜைகள் நடத்தப்படுகின்றன. நெல்லை, தென்காசியிலிருந்து ஆய்க்குடிக்கு பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உண்டு.

(கிரகங்கள் சுழலும்...)

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ஓவியம்: மணியம் செல்வன்