இந்த ஆண்டு நிச்சயம் நல்ல மழை பெய்யும்!



வானிலை ஆர்வலர்கள் ஹேப்பி

‘‘மழை எங்களை ஒன்று சேர்த்தது!’’ - இப்படி கவிதையாய் அறிமுகம் தர காதலர்களுக்கு தகுதி இருக்கிறதோ இல்லையோ... இந்த டீமுக்கு இருக்கிறது. 20 பேர் கொண்ட அந்தக் குழுவில் 13 வயது சுட்டிகளும் உண்டு...

 60 ப்ளஸ் கெட்டிகளும் உண்டு. ஏதோ சீரியல் கதை பேசப் போகிறார்கள் என்று பார்த்தால் பருவ மழை அளவு, வெப்ப சலனம், எல் நினோ மாற்றம் என ஆளுக்கு ஆள் ரமணன் ரேஞ்சுக்கு வானிலையை அலசுகிறார்கள். சென்னை செம்மொழிப் பூங்காவில் களை கட்டியிருந்தது இவர்களின் செம்ம ஹாட் மழை மீட்டிங்!

‘‘ `Keaweather’னு ஒரு பிளாக் சார்... முழுக்க முழுக்க வானிலை பற்றி விவாதிக்கிற வலைப்பதிவு. நாங்க எல்லாரும் அதுல உறுப்பினர்கள். உலகத்தில் எந்த மூலையில எவ்வளவு மேகக் கூட்டம் நின்னுக்கிட்டு இருக்கு... எவ்வளவு மழையை அது தரும்னு அப்டேட்டா இருக்குற ஆர்வலர்கள் நாங்க!’’ - திருத்தமாக விளக்குகிறார் பதிவர்களில் ஒருவரான வேலாயுதம். ஓகே... மைக்கை அவர்கிட்ட கொடுங்க!

‘‘பாட்டு, டான்ஸ்னு ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ஹாபி... எங்களுக்கு அது மாதிரி வானிலை. ‘இன்னிக்கு எத்தனை டிகிரி வெயில்’ங்கிறதுல ஆரம்பிச்சு, நம்ம ஊருக்கு மழை எந்தத் தேதியில வரும், எவ்வளவு பெய்யும்ங்கிற வரைக்கும் ஒவ்வொருத்தருமே தனித்தனியா ஆராய்ச்சி பண்ணுவோம்.

பிளாக்ல அதை ஒருத்தருக்கு ஒருத்தர் விவாதிச்சு கடைசியா ஒரு முடிவுக்கு வருவோம். அது 90 சதவீதம் கரெக்டா இருக்கும்!’’ என்கிற வேலாயுதத்தைத் தொடர்கிறார் இந்த வலைப்
பதிவைத் தொடங்கியவரான இசான் அகமது.

‘‘அமெரிக்காவுல நான் பிசினஸ் ஸ்டடீஸ்ல இருந்தேன். அப்போ, என்னோட பிறந்தநாளுக்கு என் நண்பன் ஒரு வானிலைக் கருவியை பரிசா கொடுத்தான். அன்னைக்கு ஆரம்பிச்சது ஆர்வம். சென்னைக்கு திரும்பினதும் வீட்டு மாடியில அந்தக் கருவியை மாட்டி வானிலையைக் கண்காணிச்சேன்.

இன்னிக்கு மழை பெய்யும்... பெய்யாது... இவ்வளவுதான் வானிலை நிலையங்கள் நமக்கு சொல்லும். ஆனா, ஏன் பெய்யும், ஏன் பெய்யாதுனு பல விளக்கங்களை நான் இணையத்துல தேடி எடுத்தேன்.

 அதையெல்லாம் பகிர்ந்துக்கத்தான் இந்த ப்ளாக்கை தொடங்கினேன். என்னை மாதிரியே எக்கச்சக்க வானிலை ஆர்வலர்கள் உலகம் முழுக்க இருக்குறது அப்புறம்தான் தெரிஞ்சுது. இப்ப இந்த ப்ளாக்குக்கு உலகம் முழுக்க சுமார் 400 உறுப்பினர்கள் இருக்காங்க’’ என்கிறார் அவர் மெல்லிய புன்னகையோடு!

‘‘பொதுவா நாங்க, பிளாக், வாட்ஸ்அப் வழியா பேசிக்கறதுதான் வழக்கம். ஆனா, மழைக்காலம் நெருங்கிட்டா மழைக்கு முன்னால ஒரு முறையும், பின்னால ஒரு முறையும் நேரடியா சந்திச்சிடுவோம். அப்படியொரு சந்திப்புதான் இது!

எங்களுக்கு மழைன்னா உயிர். அது தென்மேற்குப் பருவமழையா இருந்தாலும் சரி... வடகிழக்குப் பருவமழையானாலும் சரி... அந்த மழைக்காலம் எப்படியிருக்கும், எவ்வளவு பெய்யும்னு ஒரு குட்டி விவாதமே நடத்திடுவோம்!’’ என உற்சாகம் கூட்டுகிறார் மற்றொரு உறுப்பினரான சம்பத்.

‘‘என்னோடது விவசாயக் குடும்பம். மழை எப்போ வரும், அதிகமா பெய்யுமா, பயிர் போடலாமானு தெரியாம இருப்போம். மழையில்லாம நஷ்டமெல்லாம் ஆகிருக்கு. இப்போ, அவங்களுக்கு நான் முன்னாடியே தகவல் சொல்லிடுவேன். என் ஃப்ரண்ட்ஸ் சிலர் திருப்பூர்ல பிசினஸ் பண்றாங்க. அவங்க துணிகளை வெயில்ல உலர்த்துவாங்க. அவங்களும் தினமும் வானிலையை எங்கிட்ட கேட்டுத் தெரிஞ்சிப்பாங்க. சிலர் வீட்டுல டிரஸ் காயப்போடுறதுக்குக் கூட மழை பெய்யுமானு கேட்குறாங்க!’’ எனச் சிரிக்கிறார் அந்தியூரைச் சேர்ந்த செந்தில்.

விவசாயத்திற்காகவே இந்த பிளாக்கில் இணைந்திருப்பவர் சூர்யா. இந்த ஆர்வலர் குழுவில் இருக்கும் வெகு சில பெண்களில் இவரும் ஒருவர். ‘‘பெரியபாளையம் பகுதியில இயற்கை விவசாயம் பண்ணிட்டு இருக்கேன்.

மழையை நம்பித்தான் பயிர் செய்யணும். ஆனா, கடந்த சில வருடங்களா போதிய மழையில்ல. ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். கூகுள்ல Weatherனு தட்டினாலே keaweather தளம்தான் முதல்ல வந்து நிக்கும். அப்படித்தான் இவங்க அறிமுகமானாங்க. இப்போ, வானிலை பற்றி நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டு, அதுக்குத் தகுந்த மாதிரி விவசாயம் பண்றேன்!’’ என்கிறார் அவர்.

பள்ளி மாணவர்கள் தீபக்கும் சாய்கிருஷ்ணனும் வானிலை அப்டேட்ஸில் வாய் பிளக்க வைக்கிறார்கள். ‘‘மழை மட்டுமில்ல... ஈரப்பதம், காற்றின் இயக்கம்னு நிறைய தேடுவோம் நாங்க. புயல் வர்ற மாதிரி இருந்தா யாருமே தூங்க மாட்ேடாம். எந்த இடத்தை நோக்கி நகருதுனு விடிய விடிய பார்த்துட்டு இருக்கிறதுதான் வேலையே!’’ என்கிறார்கள் இருவரும் கோரஸாக!

‘‘ஓகே... இந்த வருடம் மழை எப்படியிருக்கும்?’’ இதற்கு பதில் தருகிறார் இருபது வருடங்களாக வானிலையைக் கவனிக்கும் ப்ரதீப் ஜான். ‘‘இந்த வருஷத்தை ‘எல் நினோ’ ஆண்டுனு அறிவிச்சிருக்காங்க.

அதாவது, பசிபிக் பெருங்கடல்ல பூமத்திய ேரகை அருகே ஏற்படுற ஒரு மாற்றம், உலக வானிலையையே பாதிக்குது. இதனால, மழையளவு கூடலாம்; அல்லது குறையலாம். இப்போ, இந்தியாவுல வறட்சியான ராஜஸ்தான் மாநிலத்துல 50 சதவீதம் அதிக மழை பெய்திருக்கு. ஆனா, எப்பவும் அதிக மழை பெய்ற கேரளாவுல 33 சதவீதம் மழை குறைஞ்சிருக்கு.

தென்மேற்கு, வடகிழக்குனு ரெண்டு பருவமழையும் கிடைக்கிற மாநிலம் நம்மளோடது. இந்த வருஷம் நமக்கு நல்ல மழை கிடைக்கும். குறிப்பா, இப்போ கிழக்கு காற்றலையின் இயக்கம் நமக்கு சாதகமா இருக்கு. அதனால, காற்றழுத்தத் தாழ்வுநிலை நிறைய உருவாகும்.

நவம்பர்ல இருந்து நமக்கு தொடர் மழை ஆரம்பிக்குது. தமிழ்நாட்டின் சராசரி மழையளவு 438 மி.மீ. சென்னையின் சராசரி மழையளவு 850 மி.மீ. இந்த வருஷம் பத்துல இருந்து இருபது சதவீதம் வரை கூடுதலா எதிர்பார்க்கலாம். கடந்த 2012ல இருந்து மூணு வருஷமா மழையளவு குறைவுதான். இந்த முறை நிச்சயம் மழை நம்மை தாலாட்டிடும்!’’ என்கிறார் அவர் நம்பிக்கையான குரலில்! 

- பேராச்சி கண்ணன்
படம்: பரணி