நினைவோ ஒரு பறவைதையல்

சட்டென சில்லிட்டதென் தேகம்
நடந்த என் பாதத்திற்குக் கீழே
இறந்த மனைவியின் சீப்பு
- ஜப்பானிய கவிஞர் இசா

திரும்பத் திரும்ப அம்மாவிடமிருந்துதான் தொடங்க வேண்டியிருக்கிறது.
எத்தனையோ பற்றுகளை அறுத்த பட்டினத்தாரால் கூட
அன்னை மீது கொண்ட பற்றை அறுக்க முடியவில்லை. அதனால்தான்,
‘வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ?

வீற்றிருந்தாள் அன்னை வீதி
தனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள்’
என்று இடுகாட்டில் நின்று புலம்புகிறார்.

இன்னும் எத்தனை முட்களைத்தான் என் தொண்டைக் குழியிலிருந்து நான் எடுத்துக்கொண்டே இருப்பது? உள்ளேயும் போகாமல், வெளியேயும் வராமல் அலைக்கழித்துக் கொண்டே இருப்பதுதான் கடந்த காலமோ? இந்த நதி தன் பிறவிக் கடலை அடைவதற்குள் எத்தனை எத்தனை படித்துறை
களையும், வனாந்திரங்களையும் கடக்க வேண்டியிருக்கிறதோ?

‘‘திரும்பிப் பார்க்காமல் நேராக நடந்து போ’’ என்று சுடுகாட்டிலிருந்து கிளம்புபவர்களிடம் சொல்வதைப் போல, பலமுறை வாழ்க்கை என்னிடம் சொன்னாலும், வலுக்கட்டாயமாக மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்க்கிறேன். நேராக நடந்து செல்ல நான் எறும்பு இல்லை; சின்னஞ்சிறு மனிதன்.எங்கள் கிராமத்துக்கு வந்த முதல் தையல் இயந்திரம், அம்மா தன் கல்யாணத்திற்கு சீதனமாய்க் கொண்டு வந்த உஷா தையல் மிஷின். அதற்கு முன்பு எங்கள் கிராமத்து ஆட்கள் துணி தைக்க வேண்டுமென்றால் கிழக்கே மூன்று மைல் தள்ளியிருக்கும் அய்யம்பேட்டைக்கோ, அல்லது நவீன மோஸ்தருடன் தைக்க வேண்டுமென்றால் மேற்கே ஐந்து மைல் தள்ளியிருக்கும் காஞ்சிபுரத்துக்கோ செல்ல வேண்டும்.

அம்மா தையல் மிஷின் கொண்டு வந்தது கடை வைக்க அல்ல. அவ்வப்போது ஓய்வு நேரத்தில் தான் தைக்கிற துணிகளிடம் தன் கதைகளைச் சொல்வதற்காக.
தையல் எந்திரங்களிடம் தனியாகப் பேசிக் கொண்டிருக்கும் பெண்களை நீங்கள் பார்த்ததுண்டா? உண்மையில் தையல் எந்திரங்கள் பெண்களுக்கு சொந்த சகோதரியைப் போல.சிரிப்புடன் சிதறும் துணிகளின் துணுக்கை; வேகமாய்ச் சுற்றும் விரல்களின் கோபத்தை; கொலுசுக் கால்களின் உஷ்ண உரசலை... தனக்குள் சேமித்து வைத்திருக்கும் தையல் எந்திரங்கள் வெறும் எந்திரங்கள் மட்டுமா? அவை நம் சித்தியோ அல்லது பெரியம்மாவோ அல்லவா?

அம்மா சிரித்தாள், அழுதாள், கோபப்பட்டாள். அவ்வப்போது அம்மாவின் கிராமத்து தோழிகளும் சிரித்தார்கள், அழுதார்கள், கோபப்பட்டார்கள். அத்தனைக்கும் சாட்சியாக அந்த தையல் எந்திரம் நின்று கொண்டிருந்தது.யாருமில்லா தனிமைகளில், அந்த எந்திரத்தின் கால் மிதிக்கும் பகுதியில், சின்னஞ்சிறு பாலகனான நான் தவழ்ந்து போய் படுத்துக் கொள்வேன். இடம் வலம் என்று என் எடை காரணமாக, அது அசைகையில் அம்மா தாலாட்டுவது போலவே இருக்கும். ஒவ்வொரு முறையும் எங்கிருந்தோ வரும் அம்மாவின் குரல், ‘‘சுவத்துல போய் இடிச்சுக்கப் போற’’ என்று என்னை வெளியே இழுக்கும். இன்று அந்தக் குரல் இல்லை. பல சுவர்களில் நான் முட்டி மோதிக் கொண்டிருக்கிறேன்.

ஆஹா, அந்தக் காலங்கள்! ஒரு தேவதையை அலங்கரிப்பது போல, அம்மா அந்த தையல் மிஷினை எண்ணெய் தேய்த்து, துடைத்து, ஆங்காங்கே விபூதிப் பட்டைகள் பூசி ேபாஷிக்கும்போதெல்லாம், பிஞ்சு விழிகளால் பார்த்த பரவசம், கடவுளைக் கண்ட தரிசனம்! பெண்களுக்கும், தையல் எந்திரத்துக்கும் ‘தையல்’ என்று பெயர் வைத்தவனின் காலில் விழுந்து கும்பிட இப்போது தோன்றுகிறது.

காற்று எப்போதும் வீசிக்கொண்டே இருப்பதில்லை. காற்று நின்றுபோன ஒரு காலத்தில் அம்மா செத்துப் போனாள். தையல் மிஷினும் நானும் தனிமையானோம். அப்போது எனக்கு நான்கு வயது. அந்த தையல் எந்திரத்தில் நான் என் தாயைப் பார்த்தேன். சித்தியைப் பார்த்தேன். பெரியம்மாவைப் பார்த்தேன்.
தையல் எந்திரங்களிடம் பெண்கள் மட்டும்தான் பேசுவார்களா? இதோ ஒரு நான்கு வயது குட்டிப் பையன் பேசுகிறான். சிரிக்கிறான். தன் கண்ணீர்த் துளிகளால் அதைக் குளிப்பாட்டுகிறான். அந்த எந்திரத்தைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்கு அம்மாவின் நினைவு வந்து விடுகிறது. அதன் பாதத்தில் படுத்துக் கொள்கிறான். எந்த சுவரும் தலையில் இடித்து விடாமல் அது அவனைப் பாதுகாக்கிறது.

அம்மா இறந்து ஆறு மாதம் கழித்து ஞானம் மாமா வீட்டிற்கு வந்தார். அம்மாவுடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரர்கள். ஞானம் மாமா, அம்மாவின் மூன்றாவது தம்பி. சென்னை அமைந்தகரையில் தையலகம் ஒன்றை நடத்தி வந்தார். மாமாவிடம் அப்பா சொன்னார்... ‘‘டேய் ஞானம், இந்த தையல் மிஷினை எடுத்துட்டுப் போய் உன் கடையில் வச்சிக்க. இதப் பாக்கும்போதெல்லாம் உங்க அக்கா ஞாபகம்தான் வருது.’’ மாமா தையல் மிஷினை எடுத்துச் சென்றார். தையல் எந்திரத்துடன் தனிமையில் பேசும் இன்னொரு ஆணை அப்பா மூலம் அன்று நான் அறிந்து கொண்டேன்.

ஆயிற்று முப்பத்தாறு வருடங்கள். நவீன தையல் எந்திரங்களும், எக்ஸ்போர்ட் நிறுவனங்களும் மாநகரெங்கும் பெருகி விட்டன. சமீபத்தில் ஞானம் மாமா தொலைபேசியில் அழைத்தார். ‘‘டேய் முத்து! தொழில் ரொம்ப டல்லாயிடுச்சு. ஸ்கூல் யூனிஃபார்ம் ஆர்டர் மட்டும்தான் வருது. உங்கம்மா தையல் மிஷினில்தான் தைச்சிட்டு இருக்கேன். முடிஞ்சா எனக்கு ஒரு புது தையல் மிஷின் வாங்கிக் குடு. சந்தோஷப்படுவேன்’’ என்று அவர் சொன்னதும் உடனே ஓடிப் போய் நவீன தையல் எந்திரம் வாங்கிக் கொடுத்தேன். அம்மாவின் தையல் எந்திரம் துருப்பிடித்து தேய்ந்து கிடந்தது.

‘அம்மாவின் ஞாபகமாக இதை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறேன்’ என்று கேட்க நினைத்த நொடியில் மாமா சொன்னார்... ‘‘இத்தனை வருஷம் இதத்தான்டா எங்கக்கா மாதிரி நெனைச்சிட்டு இருந்தேன். வித்தா ரெண்டாயிரம், மூவாயிரம் கெடைக்கும். ஆனா விக்க மனசில்ல. எங்கிட்டேயே விட்டுரு. சாமி படம் மாதிரி தெனமும் ரெண்டு பூப்போட்டு பூஜை பண்ணிக்கிறேன்.’’

சென்ற வாரம் ஏதோ எழுதிக் கொண்டிருக்கும்போது, என் மகன் என்னிடம் ஓடி வந்து ‘‘அப்பா! இந்த ஊசில நூலைக் கோர்த்துக் குடுங்க. அம்மா துணி தைக்கணுமாம்’’ என்றான். கண்களைக் சுருக்கி நீள் ஊசியின் சிறு துளை வழியாக நூலைக் கோர்த்தேன். நான் கோர்த்தது நூலை அல்ல... நினைவுகளை!

தையல் எந்திரங்களிடம்
தனியாகப் பேசிக்
கொண்டிருக்கும்
பெண்களை நீங்கள்
பார்த்ததுண்டா?
உண்மையில் தையல்
எந்திரங்கள் 
பெண்களுக்கு சொந்த
சகோதரியைப் போல.

(பறக்கலாம்)

நா.முத்துக்குமார்
ஓவியங்கள்: மனோகர்