கபாலி ஒரு போராளி!ரஜினி சீக்ரட் சொல்லும் பா.இரஞ்சித்

‘‘என்னங்கண்ணா, வாங்கண்ணா... ‘கபாலி’யைப் பத்தி கொஞ்சம் பகிர்ந்துக்கலாம். ஆனால், அதே சமயம் நம்ம படத்தைப் பத்தி நாமளே ரொம்பப் பேசக் கூடாதுங்ணா!’’ - ரஜினி படம் செய்கிற எந்த பயமும் அதிகாரமும் பந்தாவும் இல்லாமல் படு இயல்பாகப் பேசுகிறார் பா.இரஞ்சித். இரண்டே படங்களில் தமிழ் சினிமாவின் கவனம் ஈர்த்த இளைஞன், கண்களில் தொக்கி நிற்கும் ட்ரேட் மார்க் புன்னகைடன் உரையாடலைத் தொடங்குகிறார்.

‘‘ரஜினி சாரைப் பத்தி சொல்லவே வேண்டாம். அனுபவ நடிகர். அவரை வச்சுப் படம் பண்ண யாருக்கும் இயல்பா பயம் வந்துடும். அந்த மாதிரி எந்த பயமும் இல்லாமல் அவரே பார்த்துக்கறார். நாங்க கொஞ்சம் யங்ஸ்டர்ஸ்... அவர் சீனியர். அவர் ஆரம்பத்தில் தனியா இருக்கிற மாதிரிதான் இருப்பார். கொஞ்ச நேரத்தில் அவரால் எங்ககூட எவ்வளவு சந்தோஷமா கலந்துட முடியுமோ, அந்த அளவு கலந்துடுவார்.

ராத்திரி வரச் சொன்னாலும் வந்துடுவார். ‘தளபதி’க்குப் பிறகு இப்ப, ‘கபாலி’க்காகத்தான் நைட் ஷூட்டிங் வந்தார். மூணு நாள் இரவு எடுக்க வேண்டியிருந்தது. முதல்நாள் கேட்டதும் என்னால் ராத்திரி 12 மணி வரைதான் பண்ண முடியும்னு சொன்னார். இந்த செட், ஆட்கள், உழைப்பு எல்லாத்தையும் பார்த்துட்டு 2 மணி வரைக்கும் இருந்தார்.

நேத்தெல்லாம் காலையில் நாலரை மணி வரை இருந்தார். நம்ம பசங்களுக்காக இப்படி ஒரு படம் பண்ணியாகணும்னு சந்தோஷத்தில் பண்றார். நாங்களே இரவுக் காட்சியை தவிர்க்கலாம்னு நினைச்சா கூட கதைக்கு தேவைப்படுது. ஸ்பாட்டில் டிரெஸ் போட்டுட்டு வந்து உட்கார்ந்துட்டா, ‘போங்க கூப்பிடுறேன்’னு சொன்னாலும் சின்ன புன்னகையோடு மறுதலித்து, ஸ்பாட்லயே உட்கார்ந்திருப்பார். அவர் அப்படித்தான். எங்களுக்கு அது புது அனுபவம்.

நான் ஷூட் பண்ணும்போது கொஞ்சம் வரிசையா எடுப்பேன். எமோஷனல் ஒரே சீராக தொடரணும்னு எண்ணம். அப்படி எடுக்கும்போது முதல் ரெண்டு ஷாட்ஸ் அவருக்கு இருக்கும். அடுத்த ரெண்டு ஷாட்ஸ் அவருக்கு இருக்காது.

வேறு யாரையாவது வச்சு எடுப்பேன். சப்போர்ட்டிவ்வா ஸ்பாட்ல உட்காருவார். எங்க ஒர்க் அவருக்குப் பிடிச்சிருக்கு. எங்க தயாரிப்பாளர் தாணுகிட்ட பாஸிடிவ்வா பேசியிருக்கார். நாங்க அவர் கொடுக்கிற சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்தி படம் எடுக்கிறோம்னு நினைக்கிறேன்.

என் படங்கள் எளிய மனிதர்களின் மனித மாண்பை மீட்டெடுக்க முயற்சிக்கிற படங்கள்தான். எமோஷன், உணர்வுகள் வகையிலானவை என் படைப்புகள். ‘கபாலி’யும் முன்னேறத் துடிக்கிற, தன்னோடு சேர்த்து அனைவரையும் முன்னுக்கு வர அழைக்கிற மனிதனின் கதைதான். ‘மெட்ராஸ்’ பூர்வ குடி மக்களின் வாழ்க்கையைச் சொன்னது. இதில் கதைக் களம்தான் வேறு. பின்னணியும் வேறு. ரஜினி சார் ‘மெட்ராஸ்’ படம் பார்த்து பிடிச்சுதான் என்னைக் கூப்பிட்டார்.

இந்தக் கதையில் ரஜினிக்கு டெய்லர் மேட் ரோல். இது எனக்கு மட்டும் பிடிச்ச கதையல்ல. அவருக்கும் பிடிச்சதுதான். எங்க ரெண்டு பேருக்குமே தீனி போடுற படமாத்தான் ‘கபாலி’ இருக்கும். ஸ்க்ரீன் ப்ளே செய்யும்போதே, தெரிஞ்சது. என் கதையில் ரஜினி மாதிரியான பவர்ஃபுல் நடிகர் நடிக்கும்போது இயல்பா அதுக்கு வேறொரு பரிமாணம் தானா வந்து சேர்ந்துடும். இந்தக் கதையோட தன்மையே அதுதான்.

ஒரு தனிமனிதனின் போராட்டமே இந்தக் கதை. ஒரு போராளியாக அவர் தன்னந்தனியாக போகிற பயணம்தான் ‘கபாலி’. மக்கள் எதிர்பார்க்கிற ரஜினி படமாகவும், அதே நேரத்தில் நான் ஒரு படைப்பாளியா நிறுவிக்கொள்கிற படமாகவும் இது இருக்கும். எங்க ரெண்டு பேரின் எண்ணங்களும் நிறைய இடங்களில் ஒண்ணா வந்திருக்கு.

ரஜினிக்கு இளைஞர்களோடு பணிபுரியணும்னு மிகப் பெரிய தீராத ஆசையிருக்கு. அவர் தமிழ் சினிமாவை தொடர்ந்து கவனிச்சுக்கிட்டே வர்றார். ‘குற்றம் கடிதல்’ பற்றிக் கூட என்கிட்ட சமீபத்துல பேசினார். ஒரு படத்தின் நல்ல அம்சங்களை அவர் குறைவான வார்த்தைகள்ல குறிப்பிட்டு பேசுற விதம்தான் ஆச்சரியம். காட்சிகளைப் படமாக்கும்போது அவருக்குப் பிடிச்சிட்டா மனமுவந்து பாராட்டுறார். படத்துல அவரோட தலையீடுனு ஒரு விஷயமும் இல்லை. கேரக்டர்களுக்கு நான் தேர்வு செய்கிற நடிகர்களை அவருக்கு அதிகம் பிடிக்குது.

அவரா ஒருத்தரையாவது சிபாரிசு செய்வார்னு எதிர்பார்த்தேன்... அது நடக்கவே இல்லை. குழந்தைகளை அரவணைக்கிற அப்பா மாதிரிதான் அவரை எங்களால பார்க்க முடியுது. அவர் பசங்களை அரவணைத்து, உற்சாகப்படுத்தி தயார்படுத்தும் போது அப்படித்தான் நினைக்கத் தோணும். ரித்விகா ஒரு சீன்ல நடிச்சாங்க. அது அவரை ரொம்பவே கவர்ந்துடுச்சு. எல்லாரையும் கூப்பிட்டுக் கூப்பிட்டு அதைப் பாராட்டிப் பேசினார்.

சமீபத்துல ‘விசாரணை’ பார்த்துட்டு தினேஷ் புராணம்தான். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ‘தினேஷ் என்னமா செய்திருக்கார்’னு புகழ்ந்து தள்ளிட்டார். ஸ்பாட்ல நல்லா நடிக்கிற ஒவ்வொருத்தரையும் ‘சூப்பர்... கலக்கிட்டீங்க’னு சொல்றதோட மட்டுமில்ல... இப்படி இருந்ததுனு அவங்க நடிப்பை இவரே ஒருதரம் சொல்லிக்காட்டுகிறார். நடிக்கிறவங்களுக்கு கண்ணீரே வந்துடுது.

இந்தப் படத்துல ஹீரோயின் வேஷத்திற்கு எனக்கு நிறைய பேர் அலைபேசினார்கள். ‘உங்க கேரக்டருக்கு தகுந்த மாதிரி என்னை மாத்திக்க முடியும்’ என்பது பிரபல ஹீரோயின்களின் விருப்பமாகவே இருந்தது. நான் என் மனசில் இருக்கிற கேரக்டர்களா ராதிகா ஆப்தே, தன்ஷிகாவை மட்டுமே தேர்ந்தெடுக்க முடிஞ்சது.

எல்லா வகையிலும் என் கதைக்கு நேர்மையா உழைச்சிருக்கேன். ரஜினி படமாகவும், தரமான படமாகவும், மக்களுக்குப் பிடிக்கிற படமாகவும், என் படமாகவும் சேர்ந்து வரும் ‘கபாலி’. என் முயற்சி கைகூடுமென நம்புகிறேன்!’’மக்கள் எதிர்பார்க்கிற ரஜினி படமாகவும், அதே நேரத்தில் நான் ஒரு படைப்பாளியா நிறுவிக்கொள்கிற படமாகவும் இது இருக்கும்.

- நா.கதிர்வேலன்