நியூஸ் வே



பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷராப்பின் மகள் கிருஷ்ணா ஷராப், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது டாப்லெஸ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுவிட, பரபரப்பில் பற்றிக்கொண்டது பாலிவுட். ‘சினிமா ஆசைக்கு முன்னோட்டம்தான் இது’ என்கிறார்கள் ஜாக்கியின் ரசிகர்கள்.

‘‘ ‘கபாலி’யில் கமிட் ஆனது பத்தி சொன்னதும் எங்க அப்பா, அம்மா ரெண்டு பேருமே பயங்கர ஹேப்பி. ‘உன் முழு முயற்சியோடு வொர்க் பண்ணு’னு எங்க அப்பா ஆசீர்வாதம் பண்ணினது மெமரபிள் மொமன்ட்!’’ என வியக்கிறார் ராதிகா ஆப்தே! 

டில்லி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நவ்ஜோத் சிங் சித்துவை சந்திக்கச் சென்றார் முன்னாள் கேப்டன் அசாருதீன். இருவரும் சேர்ந்து செஃல்பி எடுத்துக்கொண்டனர். அதனைப் பதிவேற்றி, ‘பழைய தங்கம், பழைய ஒயின், பழைய நண்பர்கள்... எப்போதும் பெஸ்ட்தான்’ என சிலிர்த்திருக்கிறார் சித்து.

‘‘நீங்க டேட்டிங் போவீங்களா?’’ என ரகுல் ப்ரீத்சிங்கிடம் கேட்டால், கோபமே வருவதில்லை. ‘‘எங்கங்க... தொடர்ந்து ஷூட்டிங் இருக்கறதால ஃப்ரீ டைமே கிடைக்கறதில்லை. மசாஜ் பண்றதுக்கு கூட ஸ்பா போக முடியலை!’’ என ஃபீல் ஆகுது பொண்ணு!

அலிகார் சிறையில், பெண்களுக்கும் சேர்த்து சமையல் செய்கிறார்கள் ஆண் சிறைவாசிகள். காரணம், பெண்கள் கிச்சனில் வீணான குடுமிப்பிடி சண்டை ஏற்பட்டு ஒருவரையொருவர் கொலை செய்யும் அளவிற்கு சென்றுவிட்டதுதான்!

 ‘ஜஸ்பா’ இந்திப் படத்தில் அவநம்பிக்கை கொண்ட அம்மாவாக நடித்தார் ஐஸ்வர்யா ராய். ஆனால், அது பாக்ஸ் ஆபீசில் பெரியதாக ஹிட் அடிக்கவில்லை என்கிறார்கள்!

‘போக்கிரிராஜா’ ஷூட்டிங் ஸ்பாட்டில், ஹன்சிகா தன் அம்மா மோனாவுக்கு ரசித்து ரசித்து தலை வாரிப் பின்னி விட்டிருக்கிறார். ‘தாய்ப்பாசத்துல நம்மளை மிஞ்சுடுச்சேப்பா’ என கலகல கலாய் பறந்திருக்கிறது யூனிட்டில்!

‘‘ஒருவேளை தோனி, தனது திறனை இழந்துவிட்டதாக நினைத்தால், ‘தோழர்களே... என் பணி முடிந்துவிட்டது’ எனக் கை தூக்குகிற முதல் ஆளாக இருப்பார்!’’ - பத்திரிகை பேட்டி ஒன்றில் இப்படி குறிப்பிட்டுள்ளார் முன்னாள் இந்திய கேப்டன் அஜய் ஜடேஜா!

‘வேதாளம்’ படத்தில் அஜித்தின் அப்பாவாக வருகிறார் தம்பி ராமைய்யா. இதை யாரைப் பார்த்தாலும் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார் தம்பி.

இந்தியில் ‘அகிரா’வை முடித்துவிட்டு, மகேஷ்பாபுவை இயக்கவிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ‘ஏழாம்
அறிவு’ படத்திற்குப் பின் மீண்டும்
அவரது டைரக்‌ஷனில் நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன்.  இதில் ஹாரிஸ் வெகு நாளைக்குப் பிறகு இசை அமைக்கிறார்.

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பட ஷூட்டிங் கோவாவில் நடக்கிறது. இடையே தனது பர்த் டே வந்துவிட, கோவாவில் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் கீர்த்தி.

எழப் போகும் புதிய நடிகர் சங்கக் கட்டிடத்தில் ஆச்சி மனோரமாவுக்கு சிறு சிலை வைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. கூடவே எம்.ஜி.ஆர், சிவாஜி சிலைகளும் வைக்கப்படுமாம்!

அனிருத்தும் அஜித்தும் நெருங்கிவிட்டார்கள். அனிருத்தையும் கூட்டிக் கொண்டுதான் வெளியே புறப்படுகிறார் தல. இசை பற்றி அனிருத்திடம் நிறையக் கேட்டு இன்புறுகிறாராம்.

தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ‘பிரம்மோற்சவம்’ படத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால். இந்தப் படத்தில் ரேவதியும், ஜெயசுதாவும் உண்டு. அவர்களுடனான காம்பினேஷன் ஷாட்டில் இருவரின் நடிப்பையும் பார்த்து பிரமித்துவிட்டாராம் காஜல்.

‘‘சாகித்ய அகடமி விருதைத் திருப்பிக் கொடுப்பதிலும், கொடுக்காமல் இருப்பதிலும் அரசியல் இருக்கிறது’’ - எழுத்தாளர் கல்பர்கி படுகொலை, தாத்ரி சம்பவம் போன்றவற்றுக்காக தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படி விமர்சித்திருக்கிறார் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி!

கோயில்களைப் பாதுகாக்கும் அமைப்புடன் இணைந்திருக்கிறார்  ‘தூங்காவனம்’ மதுஷாலினி. ஆனால் இங்கே அல்ல, ஹைதராபாத்தில். ‘ஐ லவ் டெம்பிள்ஸ்... பொதுமக்கள்கிட்ட நிதி திரட்டி அந்தப் பணத்தை கோயில் பராமரிப்பு, சீரமைப்பு பணிகளுக்கு கொடுக்குற வேலையை ஆரம்பிச்சிருக்கேன்!’’ என்கிறார் மது.

40 நாட்களுக்கு மேல் மேக்கப் போடாமல் இருந்தார் விஷால். இப்போது ‘கதகளி’ ஷூட்டிங்கில் கலந்துகொள்ளப் போகிறார். வெளியூரில் இல்லாமல் சென்னையில் ஷூட்டிங் நடத்துவதாக திட்டம் மாறியிருக்கிறது.

முன்னாள் கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு 92 வயதாகிவிட்டது. ஆனாலும், அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் கேரள சட்டசபைத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணிக்கு தலைமையேற்க அவரை அழைக்கிறார்கள். காரணம், பி.ஜே.பியின் மூன்றாவது கூட்டணியோடு ஈழவ சமூக அமைப்பு சேர்ந்திருப்பதுதான். சி.பி.எம். கட்சியின் மிகப்பெரிய சமூக அடித்தளம் ஈழவ மக்கள். அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர் அச்சுதானந்தன் என்பதால் இந்த அழைப்பு!

தீபாவளி முடிந்ததும் ஷங்கர் அமெரிக்கா போகிறார். அங்கு அர்னால்டைச் சந்தித்து சில ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்துவிட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி வருகிறார். அப்புறம் லண்டன் போய் தயாரிப்பாளர் லைக்கா அதிபரை முதல் தடவையாக பார்த்துவிட்டு வருகிறார்.

அமலாபால், விஜயலட்சுமி இருவரும் சினிமா தயாரிக்கப் போவதை அடுத்து ஸ்ருதிஹாசனும் படத் தயாரிப்பில் இறங்குகிறார். எல்லாம் சின்ன பட்ஜெட் படங்கள் என்றும், 4 கோடிக்கு மேல் செலவு இருக்காது என்றும் திட்டம் இருக்கிறதாம்.

சமிபத்தில் திகார் ஜெயிலில் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து, ஒரு டஜனுக்கும் மேலான எலக்ட்ரிக் ஷாக் துப்பாக்கிகளை வாங்கியிருக்கிறது உள்துறை அமைச்சகம். சிறைவாசிகளைக் கட்டுபடுத்த இப்படியொரு ‘டேசர்’ துப்பாக்கிகள் வாங்கியிருப்பது நாட்டில் இதுதான் முதல்முறை என்கிறார்கள்.

நடிகர் வடிவேலு இனி படங்களில் நடிப்பதற்கு எந்த இடையூறும் இல்லாமல் இருக்க, தயாரிப்பாளர்களுக்கு ஒரு வேண்டு கோள் வரப்போகிறது. புதிய நடிகர் சங்கம் இதைச் செய்யப் போகிறதாம்.