பங்கு



பிச்சைக்காரர்கள் வரிசையாக அமர்ந்திருக்கும் இடத்தில் அன்னதானம் செய்தார்கள். அங்கு சென்று பிச்சை கேட்டான் அவன்.‘‘எருமை மாடு மாதிரி இருக்கே, வேலை செய்து பிழைக்கிறதுதானே!’’ - ஏகமாக அவனைத் திட்டிவிட்டு கடந்தார்கள் மக்கள். யாரும் அன்னதானம் தரவில்லை.

பிச்சையும் கேட்டுப் பார்த்தான். யாரும் போடவில்லை. கூன், குருடு, நொண்டி, நோயாளி, வயதானவர்கள் கிண்ணத்தில் ஏகப்பட்ட பணம் விழுந்தது. அது அவன் கண்களை உறுத்தியது. பிச்சை கிடைக்கவில்லை என்றால் என்ன... இயலாதவர்கள்தானே... அடித்துப் பிடுங்கிவிடலாம். மனம் சாத்தான் ஆனது.இரவு 8 மணி...

கூட்டம் ஓய்ந்ததும் அவர்களை கவனித்தான்.பிச்சைக்காரர்கள் பணத்தை ஒன்றாகச் சேர்த்து பல பங்குகளாகப் பிரித்தார்கள்.‘‘அய்யா, எட்டு பங்குதானே பிரிக்கணும். ஏன் ஒன்பது பங்கு?’’ - ஒருவன் கேட்டான்.

‘‘நம் சங்கத்தோட தீர்மானப்படி புது ஆளு நம்ம கூட ஒருநாள் உக்கார்ந்துட்டா அவருக்கும் ஒரு பங்கு தரணும். அந்த தம்பி காலையிலே இருந்து ஏச்சும் பேச்சும் வாங்கிக்கிட்டு இருந்தார், பாவம். தம்பி இங்கே வாப்பா...’’ - சங்கத் தலைவர் அழைத்தார்.கல்மனம் கரைந்து கண்ணில் நீர் பெருகி சிலையாக நின்றான் அவன்.            

பெ.கிருஷ்ணன்