கூப்பிட்டான் காடு



‘பொன்னு புழுகாண்டி’ கோயிலுக்கு ‘கழு’ கொடுப்பதற்காக தான் வளர்த்த கருஞ்சேவலை இரவே பிடித்து பஞ்சாரக் கூடையில் கவுத்தியிருந்தாள் கமலம். நடுச்சாமமான கட்ட கட்ட உச்சி நேரத்தில் புறப்படக் கூடாதென்பதற்காக கொஞ்சமாய் சாமம் விலகிய பிறகு கோயிலுக்குப் போவதற்காக ஆறு வண்டிகள் புறப்பட்டு தயாராக மந்தையில் நின்றன. ஊருக்குள் இருக்கும் ஆண்களும், பெண்களும் பொங்கல் கொண்டாடும் சந்தோசத்தில் கலகலவென்று சிரித்துப் பேசியவாறு வண்டியை நோக்கி நடந்தார்கள்.

கமலம் கூடைக்குள்ளிருந்த சேவலை கையில் எடுக்க, அது தன் கொண்டை குலுங்க ‘கொக்கரக்கோ’ என்று நீட்டி முழங்கியது. கமலம் திடுக்கிட்டுப் போனாள். ‘கழு’ போடும் சேவல்கள் கைப்பிடியில் இருக்கும்போது கூவக்கூடாதென்றும், அப்படிக் கூவினால் ஏதோ கெட்டது நடக்கப் போவதாக அர்த்தம் என்றும் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறாள். ‘‘ச்சீ, சனியன்! உனக்கு கூவறது க்கு வேற நேரமே கிடைக்கலயாக்கும்?’’ என்று வஞ்சிவிட்டு வண்டிக்காக நடந்தாள்.

முதல் வண்டியை ஓட்டுவதற்குத் தயாராக உட்கார்ந்திருந்த சீனியிடம், ‘‘எய்யா! என் சாவல ‘களு’ போடணுமின்னு கையில எடுக்கேன்... அப்ப பாத்து அது கூவிருச்சி. எனக்கு நெஞ்சு படபடத்துப் போச்சு. அப்படிக் கூவக்கூடாதுனு சொல்லுவாகள்லயா? இப்ப நானு இத புடிச்சிட்டு வரட்டுமா? இல்ல, அடுத்த தடவ போகையில இந்த ‘களு’வ போட்டுக்கிடுவமா?’’ என்றாள்.‘‘நடுச்சாமத்துல அதப்புடிச்சா சாவ(ல்) கூவத்தான செய்யும். நீ பேசாம வண்டியில ஏறு!’’ என்றார் சீனி. கமலமும் சேவலை வண்டியின் முன்னால் தலை குப்புறக் கட்டி தொங்க விட்டு வண்டியில் ஏறினாள்.

கடைசி வண்டியில் ஏறி உட்கார்ந்த ராமசாமி, ‘‘அப்ப எல்லாரும் வந்தாச்சா? வண்டியப் பத்தட்டுமா?’’ என்று கேட்க, ‘‘எண்ணே! கொஞ்சம் பொறு. சின்ன ரச்சுமியும், பெரிய ரச்சுமியும் இன்னும் வந்து சேரல’’ என்றதும் ராமசாமி கடுகடுத்தார்.‘‘ஆமா, அவுகளுக்கு இன்னும் தீரலயாக்கும். புருசனுமில்ல, புள்ளயுமில்ல... இம்புட்டு நேரமும் என்னதேன் செய்யிதாக? அவுகளுக்கு இதே வேலயாப் போச்சி... எங்க புறப்பட்டாலும் தாமசப்படுத்திக்கிட்டு... அவுக வந்தா வாராக, வராட்டிப் போறாக!’’ என்றவர், ‘‘சீனி... நீ வண்டிய பத்துப்பா’’ என்று ஓங்கி குரல் கொடுத்தார்.

முதல் வண்டி மெல்ல நகர அப்போதுதான் அவையலும், துவையலுமாக ‘‘எண்ணே! கோவிச்சிக்கிடாத... சத்த கண் அசந்துட்டோம்’’ என்றவாறு இரண்டு ரச்சுமிகளும் ஓடி வந்தார்கள்.‘‘பத்து மைல் தொலவில கோயிலு கெடக்கு. காலாகாலத்தில போனாத்தான பொழுதுருக்கு முன்னமே திரும்பி வரலாம். இல்லாட்டி அந்த இருண்ட வனத்துக்குள்ள கெடந்து சாவ வேண்டியதுதேன்!’’ என்று ராமசாமி சொல்ல, ‘‘உனக்கு மூக்கு முனியில இருக்கும் கோவமின்னு ஊர்க்காரக சொல்லறதும் சரித்தேன்... கோயிலுக்குப் போறயில இப்படியா பேசுவாக?’’ என்று செல்லமாக கோபித்துக்கொண்டே மூத்த ரச்சுமி வண்டியில் ஏற, பின்னாலேயே அவள் தங்கை சின்ன ரச்சுமியும் ஏறினாள்.

அக்காளும், தங்கையுமான இந்த இரண்டு ரச்சுமிகளும் பின்னிப் பிணைந்து அவ்வளவு ஒற்றுமையாக இருந்தார்கள். அது தெரிந்தோ, என்னமோ... இரண்டு பேருக்கும் ஒரே பெயரை இட்டிருந்தார்கள் அவர்களின் பெற்றோர்கள். சிறு வயதிலிருந்தே பிரியாமல் ஒன்றாகவே இருந்ததால் கல்யாணத்தின்போது இருவரும் ஒருவனுக்குத்தான் வாக்குப்படுவோம் என்று பிடிவாதம் பிடித்தார்கள். அதன்படியே அவர்களின் மாமன் மகனான திருமனுக்கே அவர்களைக் கட்டி வைத்தார்கள்.

‘வீட்டுக்கொரு பொண்டாட்டி, காட்டுக்கொரு பொண்டாட்டி’ என்று பவுசாக நினைத்திருந்த திருமன், கல்யாணமான மூன்று மாதத்திலேயே வெறுத்துப் போனான். ஏனென்றால் அக்காவும் தங்கச்சியும் எப்போதும் பிரியாமல் பகல் முழுக்க காட்டில் வேலை செய்வார்கள். இருட்டிய பிறகு வீட்டுக்கு வந்து இரவு முழுக்க குத்தவும், புடைக்கவும், சோறு காச்சவும் என்று ஒரே வேலைதான். வேலை செய்து முடித்தபின் இவனுக்காக ஒரு வட்டிலில் கஞ்சியை ஊத்தி வைத்துவிட்டு ஒன்றாகவே
படுத்துவிடுவார்கள்.

இந்த இரண்டு ரச்சுமிகளும் எந்த நேரமும் இரவு பகல் என்று பார்க்காமல் அப்படி உழைக்க, புருசனும் தங்களைப் போலவே உழைக்க வேண்டுமென்று நச்சரிக்க, திருமனுக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. இனியும் இவர்களோடு இருந்தால் எந்த சுகமுமே அறியாமல் செத்துப் போவோம் என்று நினைத்தவன், ஒரு நாள் இரவு யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போனான்.

அவன் ஓடிப்போய் பத்து வருசங்கள் ஆகிவிட்டன. புருசன் காணாமல் போனதைப் பற்றி இரண்டு ரச்சுமிகளுக்கும் கவலையே இல்லை. ‘துன்பம் தொலைந்தது, சோத்துப் பானை மிச்சம்’ என்று சந்தோசம் கொண்டார்கள். அதோடு இரண்டு பேரும் சலிக்காமல் வேலை வேலை என்று செய்து ஒரு கலயம் நிறைய துட்டு சேர்த்து மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்தார்கள். இப்போது கூட நிலா வெளிச்சத்தில் ஒருத்தி குத்தவும், ஒருத்தி புடைக்கவுமாக இருந்ததினால்தான் கோவிலுக்குப் போக
நேரமாகிவிட்டது.

ஆறு வண்டி நிறைய ஆட்கள் போக, மூன்று கிடாய்கள் கூடப் போயின. குளுகுளு என்று குளிர்காற்றில் இவர்கள் உடல் நடுக்கம் கொடுக்க, வனத்தை நெருங்கிவிட்டோம் என்று சீனிக்குத் தோன்றியது. அதோடு, மலை உச்சியிலிருந்து ‘சோ’வென்று கொட்டும் அருவியின் சத்தமும் கேட்டது. வனத்தின் கரை நெடுக வரிசையிட்டு இருந்த பனை மரங்களின் அடியில் தீயில் வாட்டிய ஆட்டு மண்டைகளாய் பனம் பழம் விழுந்து கிடந்த காட்சி, எல்லோரையும் வாயூறச் செய்தது. ஆனாலும் பனம் பழத்திற்கு ஆசைப்பட்டு இங்கே இறங்கினால் எவ்வளவு தூரம் கோயிலுக்கு நடக்க வேண்டுமோ? என்ற பயத்தில் பேசாமல் இருந்துவிட்டார்கள்.
ஆனால், இரண்டு ரச்சுமிகளுக்கும் ஆசை உள்ளடங்கவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று அவர்கள் ஒரு பெரிய கோணிச் சாக்கு ஒன்று கொண்டு வந்திருந்தார்கள்.
பக்கம் பக்கமாக உட்கார்ந்திருந்த சின்ன ரச்சுமியின் காதில் அக்கா குசுகுசுத்தாள்.

‘‘ஏ... ரச்சுமி! இங்கன கெடக்க பனம்பழத்தப் பாத்தா நாலு மூட்ட பழம் இருக்கும் பொலுக்கே... நம்ம ஒரு சாக்குதேன் கொண்டாந்திருக்கோம்... பேசாம இங்கன இறக்கிவிடச் சொல்லி ஒரு மூட்ட பழத்தப் பெறக்கி மூட்டயாக் கட்டி இந்த வண்டிப் பாதயோரம் போட்டு வச்சிட்டமின்னா, போறயில வண்டியில ஏத்தச்சொல்லி ஊருக்குள்ள கொண்டுபோயி சேத்திரலாம். ஒரு பழம் காலணானு வித்துட்டோமின்னா, எப்படியும் எட்டணா சம்பாரிச்சிரலாம்!’’சின்ன ரச்சுமியின் கண்களில் பயம்.

‘‘எக்கா, இங்க நம்ம எறங்குனமின்னா கோயிலுக்குப் போக உனக்கு வழி தெரியுமா?’’‘‘என்ன தாயீ இப்படி கேக்க? நம்ம எத்தன வாட்டி இந்தக் கோயிலுக்கு வந்துருக்கோம். அதுவுமில்லாம இந்தா அருவிச்சத்தம் கிட்டத்தில கேக்குது... காட்டுக்குள்ள பூக்கும் ‘தாழம்பூவு’ இங்கனயே எங்கயோ மணக்குது... அதோட, கண்ணு வலிபூவும், குறிஞ்சாம்பூவும் என்னமா பூத்துக் கெடக்கு பாரு. இங்கயிருந்து வண்டித்தடத்திலயே போனமின்னா அது கோயில்ல கொண்டுபோயி விடும்!’’

என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கையில் காட்டுக்கோழி ஒன்று தன் ஏழெட்டு குஞ்சுகளோடு வண்டியின் குறுக்கே போக, காட்டு முயல்கள் இரண்டு தாவிக் குதித்தவாறு ஓடின.சீனி, காளைகளை இழுத்துப் பிடித்து வண்டியை நிறுத்தினார். ‘‘எதுக்கு சீனி வண்டியை நிறுத்தினே?’’ என்று பின்னாலிருந்து ராமசாமி ேகட்க, ‘‘இந்தக் காட்டுக்கோழி ஏழெட்டு குஞ்சுகளோட போவுது. வண்டிய நிறுத்தாம பத்துனமின்னா ஒரு குடும்பத்த அழிச்ச பாவம் நம்மள வந்து சேந்திருமே!’’ என்று சொல்லி முடிக்கும் முன்பே இரண்டு ரச்சுமிகளும் வண்டியிலிருந்து இறங்கிவிட்டார்கள்.

‘‘என்னத்தா, இங்கனயே எறங்கிட்ட?’’ என்று ராமசாமி கேட்கவும், ‘‘வண்டிக்குள்ள நெருசல்ல உக்காந்து உடம்பு ஒடுங்கிப் போச்சுண்ணே, அதேன். நாங்க நடந்து வாறோம். நீங்க வண்டியப் பத்திட்டுப் போங்க!’’ என்றாள் மூத்த ரச்சுமி பனங்காட்டைப் பார்த்துக்கொண்டே.‘‘இனி வாரதுக்கு உங்களுக்கு வழி தெரியுமா? இன்னும் கோயிலு கொள்ளத் தூரம் கெடக்கு!’’‘‘என்னண்ணே ரொம்ப பயமுறுத்துதே... இந்தக் கோயிலு திக்கமெல்லாம் நாங்க புளியம்பூவுக்கும், வெறவுக்கும் வந்தவகதான. அதுவுமில்லாம, இதே பாத வழியே வந்தா கோயில்ல கொண்டாந்து விட்டுருமில்ல?’’ என்று ரச்சுமி கேட்க, ‘‘அது என்னமோ பாத்துக்காத்தா’’ என்று சொல்ல... வண்டிகளும் புறப்பட்டு விட்டன.

அக்காவிற்கும், தங்கச்சிக்கும் சந்தோசம் பொறுக்க முடியவில்லை.‘‘வம்பா ரெண்டு சாக்க எடுத்துட்டு வராம ஒரு சாக்க எடுத்துட்டு வந்துட்டோம்!’’ என்று சின்ன ரச்சுமி சொல்ல, ‘‘இப்படி கூறுகெட்ட வேல செஞ்சிட்டமேன்னு நானும் அதத்தேன் நினைச்சிக்கிட்டு இருக்கேன்’’ என்றாள் பெரிய ரச்சுமி.பிறகு இருவரும் ஓடி ஓடி பனம்பழத்தை பெறக்கி சாக்கை நிரப்பியதோடு அதை மூட்டையாகக் கட்டி உருட்ட முடியாமல் உருட்டிக்கொண்டு வந்து வண்டி வரும் பாதையில் வைத்தார்கள். அவர்கள் முகத்தில் சந்தோசத்தின் வெளிச்சம் குப்பென்று பரவியது.

பிறகு ஆளுக்கு ஒரு பழத்தை உரித்துத் தின்றுகொண்டே வண்டி போன பாதையின் வழியே நடந்தார்கள். வழியோரமிருந்த புதரில் ஊளையிட்டுக்கொண்டிருந்த நரி ஒன்று, இவர்களை உறுத்துப் பார்த்துவிட்டு ஓடியது.‘‘நரிக்கு உண்டான தெம்பைப் பாரு! பாதையோரம் வந்து ஊளயிடுறத’’ என்று பெரிய ரச்சுமி சொல்ல, மயில் ஒன்று சடசடத்தவாறே இவர்களின் தலைக்கு மேல் பறந்து போனது. பாதையைத் தவிர்த்து இரு பக்கமும் பெரிய பெரிய மரங்கள் கிளை பரப்பி ஆகாயத்தின் நீலத்தை மறைத்து நின்றன. மரங்களை வளர்த்து ஆளாக்கிய வேர்கள், தண்ணீர் ஓடிய அரிப்புக்கு முண்டு முண்டாக வெளியேறி நிலம் பரப்பிக் கிடந்தன.

சிறு சிறு ஆறுகள் நீர் சலசலப்போடு சுழியிட்டு ஓட, அதனுள் கூழாங்கற்கள் பழுப்பு நிறம் கொண்டு மின்னின. மலைக்காற்றின் குளிருக்கு அக்காவும், தங்கையும் தங்கள் சேலைகளால் உடம்பை போர்த்திக்கொண்டு நடந்தார்கள். கோயில் தெரிகிறதா? என்று நிமிர்ந்து பார்த்தபோதெல்லாம் வனத்தின் அடர்ந்த இருட்டுதான் தெரிந்தது.

எத்தனை பனம்பழம் பெறக்கினோம். ஒரு பழத்திற்கு எத்தனை காசு கிடைக்கும்? என்று கணக்குப் பார்த்துக்கொண்டே பாதி தூரம் போனவர்கள், திகைத்து திக்குமுக்காடிப் போனார்கள். ஏனென்றால், அங்கே பாதை இரண்டாகப் பிரிந்து கிழக்குப் பக்கமாக ஒரு வண்டித்தடம் புழுதி மண்கோர்வையில் நீண்டு செல்ல, மேற்குப்பக்கம் இன்னொரு வண்டித்தடமும் இருந்தது. எந்தப் பக்கம் கோயில் இருக்கிறது? நாம் எந்தப் பக்கமாகப் போகவேண்டும் என்று இவர்களுக்குத் தெரியவில்லை.

இருவரும் உடம்பையே காதுகளாக்கி அருவி எந்தப் பக்கமாக விழுகிறது என்று உற்றுக் கேட்க, அருவி எல்லா திக்கத்திலும் ‘ஹோ’வென்று இரைந்து மாயாஜாலம் காட்டியது. சற்று நேரம் யோசித்த பெரிய ரச்சுமி சொன்னாள்.‘‘சரி... இந்த ரெண்டு பாதையில  ஏதோ ஒரு பாதையின் முடிவுலதேன் கோயில் இருக்கணும். நீ மேக்கு திக்கம் இருக்க பாதவழி போயி பாரு... நானு இந்த திக்கம் போயி பாக்கேன். முதல்ல கோயிலப் பாத்தவக இங்கன வந்து நின்னுக்கிட்டு ஒரு கொலவச் சத்தம் போடணும். கொலவச்சத்தம் உனக்கு கேட்டா நீ இங்கன வந்துரு... எனக்கு கேட்டா நா வந்து நின்னுருதேன்!’’

‘‘நல்ல ரோசனதேங்க்கா!’’ என்று சொல்லிவிட்டு சின்ன ரச்சுமி மேற்கு நோக்கி நடக்க, பெரிய ரச்சுமி கிழக்கு திக்கம் நோக்கி நடந்தாள்.அடர்ந்து, செறிந்து, இருண்டு கிடந்த வனத்திற்குள் போன இருவரும் பாதை மாறிப் போக... பயம் அவர்களைத் தொற்றிக்கொண்டது. கால் வைக்கும் இடமெல்லாம் சரசரப்புச் சத்தமும் உறுமல் சத்தமும் கேட்க சின்ன ரச்சுமி வனத்தினூடே ‘‘அக்கா, அக்கா’’ என்று கூப்பிட்டாள். அக்காவும் ‘‘ரச்சுமி, ரச்சுமி’’ என்று அலறினாள்.

அது கூப்பிட்டான் காடு! நாம் கூப்பிடுவதைப் போலவே அங்கேயிருக்கும் மலையும் எதிரொலிக்கும். அந்த எதிரொலிச் சத்தத்திற்கு அக்காதான் கூப்பிடுகிறாள் என்று தங்கை ஓட, தங்கைதான் கூப்பிடுகிறாள் என்று அக்கா ஓட, வனம் முழுக்க இவர்களின் குரல் கேட்க... பொழுது இருட்டிக்கொண்டு வந்தது. 

‘‘தலைவருக்கு
பட்டாசுன்னா ரொம்பபயம்!’’
‘‘அதுக்காக அவர்கிட்ட
பலூனைக் கொடுத்து
வெடிக்கச் சொல்றது
நல்லாயில்லை!’’

 ‘‘என்னய்யா இது?
திரி பூரா எரிஞ்சுடுச்சு.
கடைசிவரைக்கும்
வெடிக்கவே இல்லையே?’’
‘‘எப்படி தலைவரே
வெடிக்கும்? நீங்க பத்த
வச்சது சணல்
பந்துதானே!’’

‘‘தீபாவளி வந்தாலே எங்க வீட்ல கரண்டி, பூரிக்கட்டைக்கு வேலை இருக்காது!’’

‘‘அவ செய்யற பலகாரங்களையே ஆயுதங்களா பயன்படுத்த ஆரம்பிச்சுடுவா!’’

- மு.க.இப்ராஹிம், வேம்பார்.

இருவரும் உடம்பையே காதுகளாக்கி அருவி  எந்தப் பக்கமாக விழுகிறது என்று உற்றுக் கேட்க, அருவி எல்லா திக்கத்திலும்  ‘ஹோ’வென்று இரைந்து மாயாஜாலம் காட்டியது.

பாரததேவி