போஸ்டர்‘‘பாக்கியம்... அவசரமா நூறு போஸ்டர் ஒட்டணும். எப்பவும் கொடுக்கறதைவிட கூடுதலா காசு கொடுத்திருக்காங்க. ஆனா, வழக்கமா ஒட்ற பசங்களை பக்கத்து ஊருக்கு அனுப்பிட்டேன்! இப்ப என்ன பண்றதுன்னே தெரியலை! தீபாவளி சீஸன். வேலை நிறைய வருது. ஆள்தான் கிடைக்கல’’ - வீட்டில் புலம்பிக் கொண்டிருந்தார் போஸ்டர் மணி.அப்போது சரியாக அந்தப் பையன் வாசலில் வந்து நின்றான்.

‘‘சார்... வணக்கம்! என் பேரு சரவணன். காலேஜ் ஸ்டூடன்ட். பார்ட் டைம் வேலைக்காக உங்களைப் பார்க்கச் சொன்னாங்க. காலேஜ் ஃபீஸ் அவசரமா கட்டணும். போஸ்டர் ஒட்ற வேலை இருந்தா கொடுங்க சார்..!’’அவனை ஏற இறங்கப் பார்த்தார் மணி. ‘‘அடடா, இன்னைக்கு ஒண்ணும் வேலை இல்லைப்பா. நாளைக்கு வந்து பாரு... கண்டிப்பா வேலை தர்றேன். கவலைப்படாதே!’’ என்று சொல்லி அனுப்பினார்.

‘‘என்னங்க நீங்க? கும்பிடப் போன தெய்வம் குறுக்க வந்த மாதிரி அந்தப் பையன் வந்தான். இப்படிப் பண்ணிட்டீங்களே..!’’ - பாக்கியம் அங்கலாய்த்தாள்.
‘‘போஸ்டர் ஒட்ட நமக்கு கிடைச்ச தெய்வம்தான் அவன்! ஆனா, நாம அவனுக்கு சாத்தான் ஆகிடக்கூடாதில்லையா? இப்ப ஒட்ட வேண்டியது ஆபாசப் படப் போஸ்டர். அதனாலதான் அவனை நாளைக்கு வரச் சொன்னேன்!’’ என்றதும், பாக்கியத்தின் மனதில் கட்-அவுட்டாய் உயர்ந்து நின்றான் மணி. 

நா.கி.பிரசாத்