பிளாஸ்டிக் நல்லது!



வீடு கட்ட கல்லாகும் பிளாஸ்டிக்

பிளாஸ்டிக் ஒழிப்புப் போராட்டம் நடத்தும் எத்தனையோ இயற்கை ஆர்வலர்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், பிளாஸ்டிக்கை கொண்டாடுகிறவர் ேபராசிரியர் வாசுதேவன்... எல்லாருக்கும் செல்லமாக, ‘பிளாஸ்டிக் மனிதர்’! ஏற்கனவே, பிளாஸ்டிக் தார் சாலைகளைப் போட்டு உலகத்துக்கு அறிமுகமானவர்தான்.

இப்போது, ‘பிளாஸ்டோன்’ என்கிற புதிய  டெக்னாலஜியோடு வந்திருக்கிறார். ‘பிளாஸ்டிக் நல்லது’ என பாசிட்டிவ் எனர்ஜி கொடுக்கும் கண்டுபிடிப்புகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி கையால் ‘சஃபாய்கிரி’ விருது வாங்கியிருக்கிறார் வாசுதேவன். கூடவே, இந்தியாவின் ‘டெக் ஐகான்’ என்றும் போற்றப்படுகிறார் இவர்.

‘‘பிளாஸ்டிக்கையும் கல்லையும் இணைச்சு பண்றதுதான் பிளாஸ்டோன். இதுக்காக, கல்லை புதுசா வாங்கணும்னு அவசியமில்ல. வீடு இடிச்ச பிறகு கிடைக்கிற கழிவுகள், குவாரியில வீணாகிற கற்கள், செராமிக் வேஸ்ட்னு எல்லாத்தையும் பிளாஸ்டிக் கோட்டிங்கோடு சேர்க்க வேண்டியதுதான்!’’ என பிளாஸ்டோனுக்கு இன்ட்ரோ கொடுக்கும் வாசுதேவன், மதுரை தியாகராஜா என்ஜினியரிங் கல்லூரியின் வேதியியல் துறை டீன்.

‘‘கடந்த 2001ம் வருஷம்னு நினைக்கிறேன். பிளாஸ்டிக் தடை பத்தி நிறைய பேர் பேசிட்டு இருந்தாங்க. பிளாஸ்டிக்கால சுற்றுச்சூழல் பாதிக்கப்படுது... அதை எரிக்கிறதால பூமி வெப்பம் அதிகரிக்குதுனு வாதங்கள் போச்சு. நான் ஒரு கெமிஸ்ட்ரி புரொபசர்ங்கிறதால இதப் பத்தி நிறைய ஆய்வுக் கட்டுரைகளை வாசிச்சேன்.

பெட்ரோலியத்துல இருந்து கிடைக்கிற ஒரு பொருள்தான் பிளாஸ்டிக். இதுக்கு தடை போட்டாலும் மக்கள் பயன்பாட்டை அவ்வளவு ஈஸியா நிறுத்த முடியாது. ஸோ, பிளாஸ்டிக்கை எப்படியெல்லாம் உபயோகமா மறு சுழற்சி பண்ணலாம்னு யோசிச்சேன். பிளாஸ்டிக் ரோடு ஐடியா அப்பதான் தோணிச்சு.

பொதுவா, மழை பெய்யும்போது தண்ணீரை உறிஞ்சறதாலதான் தார் ரோடு பெயர்ந்துடுது. ஆனா, பிளாஸ்டிக் கலந்திருக்கும் ரோடு தண்ணீரை உறிஞ்ச முடியாது. இந்த ஐடியாதான் ரோட்டை நீண்ட காலம் தக்க வைக்குது. இந்த டிசைன் முடிஞ்சப்போ, ஒரு விழாவுக்காக எங்க கல்லூரிக்கு வந்திருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்கிட்ட விஷயத்தைச் சொன்னேன். ரொம்ப ஊக்கப்படுத்தினார்.

அதுதான் என்னை இன்னும் நிறைய ஆய்வுகளை செய்ய வச்சது. இதுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் பல இடங்கள்ல பிளாஸ்டிக் தார்ச்சாலை போட்டாங்க. சிம்லா, ஷில்லாங்னு மலைப்பகுதியில கூட போட்டிருக்காங்க.

தமிழ்நாட்டுல மட்டும் 16 ஆயிரம் கி.மீ சாலை! இதுக்கிடையில, அமெரிக்க நிறுவனம் ஒண்ணு, 300 மில்லியன் டாலருக்கு இந்த கான்செப்ட்டைக் கேட்டாங்க. நான் மறுத்துட்டேன். நம்ம நாட்டுக்குப் பயன்படணும்னு டிசைனுக்கு மட்டும் காப்புரிமை வாங்கிட்டு ஃப்ரீயாவே கொடுத்துட்டேன்!’’ என்கிற வாசுதேவன், பிளாஸ்டோன் பற்றி விவரிக்கிறார்...

‘‘என் ஆராய்ச்சிகளோட தொடர்ச்சியாதான் இப்போ பிளாஸ்டோனை கண்டுபிடிச்சிருக்கேன். பிளாஸ்டிக்கையும் சின்னச் சின்ன கற்களையும் வெப்பத்துல ஒண்ணு சேர்த்து எந்த வடிவத்துல வேணும்னாலும் திடப் பொருளா கொண்டு வரலாம். இதுக்காகவே நான் ஒரு மெஷினை உருவாக்கியிருக்கேன்.

செங்கல்லுக்கு பதிலா, டைல்ஸுக்கு பதிலா கட்டுமானத்துல இதைப் பயன்படுத்தலாம். இந்த பிளாஸ்டோன் மேல ஐம்பது யானைகள் நடந்து போனாலும் தாங்கும். அதாவது முந்நூறு டன் எடையை வச்சாலும் ஒண்ணும் ஆகாது. இதை வச்சு சுவர்கள் எழுப்பலாம், கால்வாய்கள் அமைக்கலாம், மலைப்பகுதி ஹேர்பின் பெண்ட் விளிம்புகளை அமைக்கலாம்... அவ்வளவு வலிமையுடையது!’’ என்கிறார் உற்சாகமான குரலில்!

‘‘இதுமட்டுமல்ல... இன்னும், புதுப்புது தொழில்நுட்பங்களை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர்றதுதான் என் நோக்கம். இப்ப நம்ம வீடுகள்ல கேஸ் எரிக்கும்போது பாதிக்குப் பாதி வேஸ்ட்டாகுறது யாருக்காவது தெரியுமா? பெரிய நிறுவனங்கள்ல இந்த மாதிரி கேஸ் பயன்படுத்தும்போது வேஸ்ட்டே ஆகாது. காரணம், அதுக்குனு சில டெக்னாலஜிகளை யூஸ் பண்ணுவாங்க.

அதை வீடுகள்லயும் பயன்படுத்துற நிலைக்குக் கொண்டு வரணும்னு ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கிட்டு இருக்கேன். அது வந்திருச்சுன்னா, வீடுகள்ல கேஸ் ரொம்ப மிச்சமாகும். நிறைய நாட்கள் பயன்படுத்த முடியும். அடுத்து, சர்க்கரை நோயாளிகளின் ஆறாத புண்களை ஆறவைக்க ஒரு மூலிகை மருந்து கண்டுபிடிச்சிருக்கோம். சீக்கிரமே அதையும் அறிமுகப்படுத்தலாம்னு இருக்கேன்.

இன்னைக்கு சிக்கலாயிருக்கிற பல விஷயங்களுக்கு சயின்ஸ் வழியா தீர்வு கொடுக்க முடியும். இதுல, என்னாலான பங்கை தொடர்ந்து பண்ணிட்டே இருப்பேன்!’’ - நம்பிக்கையாக முடிக்கிறார் எழுபது வயதான பேராசிரியர் வாசுதேவன். பிளாஸ்டோன் கற்களை வச்சு சுவர்கள் எழுப்பலாம், கால்வாய்கள் அமைக்கலாம், மலைப்பகுதி ஹேர்பின் பெண்ட் விளிம்புகளை அமைக்கலாம்...

- பேராச்சி கண்ணன்
படங்கள்: பி.பாலமுத்துகிருஷ்ணன்