தண்டனை எனப்படுவது



தண்டனைகள் அளிப்பதில் இரண்டு நோக்கங்கள் இருக்கின்றன. ஒன்று, தவறு செய்தவர் வருந்த வேண்டும் என்பது. இன்னொன்று, அவருக்கு அளிக்கும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்து குற்றங்கள் குறைய வேண்டும் என்பது. ஆன்மிகத்திலும் ஏறக்குறைய அனைத்துக் கடவுளர்களும் தவறு செய்தவர்களுக்குத் தண்டனை வழங்கியிருப்பதைப் பார்க்கலாம். தவறு செய்தால் நரகம் போக வேண்டும் என்பது பல மதங்களிலும் சுட்டிக்காட்டப்படும் அல்டிமேட் தண்டனை.பள்ளிகளிலே முட்டி போடுதல், ஸ்கேலால் அடித்தல், பெஞ்சு மீது நிற்க வைத்தல் போன்றவை தண்டனைகளாக வழங்கப்பட்டு வந்தன. எங்கோ சில முரட்டு ஆசிரியர்கள் இன்னும் தொடர்ந்தாலும், இவை இப்போது சட்டபூர்வமாக தடை செய்யப்பட்ட தண்டனைகள். ஒரே வார்த்தை அல்லது வாக்கியத்தைப் பலமுறை எழுத வைக்கும் இம்போஸிஷன் என்னும் தண்டனையும் இப்போது அருகி வருகிறது.  

என்.சி.சி, ராணுவத்தில் கிரவுண்டைச் சுற்றித் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு ஓடுவது தண்டனைகளில் ஒன்று. ஒவ்வொரு நாடும் தனக்கெனச் சட்டங்கள் வகுத்துத் தண்டனைகளை நிறைவேற்றுகிறது. ஒரே குற்றத்துக்கு வேறு வேறு நாடுகளில் வேறு வேறு தண்டனை. அவ்வளவு ஏன்? இரு தார மணம் ஒரு காலத்தில் இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றம் அல்ல; இப்போதோ கையில் காப்பு ஏறிவிடும்.

தண்டனைகளிலேயே அதிகபட்சம் மரண தண்டனைதான். மனித உரிமை அமைப்புகளின் நீண்ட நெடிய போராட்டங்களின் முயற்சியாக, பல நாடுகளில் மரண தண்டனை அடியோடு ரத்து செய்யப்பட்டு விட்டது. இந்தியாவிலும் rare among the rarest  குற்றங்களுக்கே மரண தண்டனை வழங்கப்படுகிறது. மரண தண்டனையை நிறைவேற்றுவதிலும் நாட்டுக்கு நாடு வேறு வேறு முறைகள் பின்பற்றப்படுகின்றன. உலோக நாற்காலியில் உட்கார வைத்து மின்சாரம் பாய்ச்சுவது, விஷவாயு அறையில் தள்ளிக் கொல்வது, விஷம் அருந்தச் செய்வது, துப்பாக்கியால் சுடுவது, கழுத்தை வெட்டுவது, உயிரோடு எரிப்பது, தூக்கிலிடுவது, இப்படி நிறைய...

முன்பெல்லாம் கொலைக் குற்றத்துக்காக ஒருவருக்கு ஆயுள்  தண்டனை வழங்கப்பட்டுவிட்டால் அவர் சாகும்வரை சிறையிலேயே கழிக்க வேண்டும். அதிலும் அந்தமானில் இருக்கும் ‘செல்லுலர் ஜெயில்’ என்ற ஆயுள் தண்டனைச் சிறைச்சாலை குறிப்பிடத்தக்கது. இப்போது ஆயுள் தண்டனை என்பது குறிப்பிட்ட வருடங்கள் என நிர்ணயிக்கப்பட்டு விட்டது.

உலகப் போர்கள் நடந்தபோது வதை முகாம்களில் அதிகபட்சம் எவ்வளவு தண்டனைகளை ஒரு மனிதனால் தாங்க முடியும் என்பதைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் கூட்டமே ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்ததாம்.

கல்லால் அடித்தல், கசையடி கொடுத்தல், பின்புறத்தில் பிரம்பால் விளாசுதல், கையைத் துண்டித்தல் போன்ற தண்டனைகள் இன்றும் சில நாடுகளில் பின்பற்றப்படுகின்றன.
மன்னர்கள் காலத்தில் பாதாள அறையில் அடைப்பது ஒரு முக்கியமான தண்டனை. பழைய கால ராஜா&ராணி படங்களில்  பாதாளச் சிறைக் காட்சி நிச்சயம் இருக்கும்.
ஏசு பிரானின், ‘பாவம் செய்யாதவர்கள் முதல் கல்லை வீசுங்கள்’ என்னும் வாக்கியம் புகழ்பெற்றதாகும். ஆரம்பகால தண்டனைகளில், ‘பல்லுக்குப் பல்; கண்ணுக்குக் கண்’ என்பது ஒரு கோட்பாடாகவே இருந்திருக்கிறது.

கழுவிலேற்றுவது என்பதும் அந்த நாள் தண்டனை. உடலுக்குள் நீளவாக்கில் ஈட்டியால் துளைத்து, அந்த ஈட்டி மற்றவர்கள் பார்வைக்காக நிலத்தில் நட்டு வைக்கப்படும். சுண்ணாம்புக் காளவாயில் உயிருடன் வைத்து எரிப்பதும் நடந்திருக்கிறது.மொகலாயர்கள் காலத்தில் வாரிசுப் போட்டிகளில் கண்களைக் குருடாக்குவது சர்வ சாதாரணமாக அளிக்கப்பட்ட தண்டனை.
ஒரு குற்றவாளிக்கு அந்தக் காலத்தில் அளிக்கப்பட்ட தண்டனையைப் பாருங்கள்... மாட்டு வண்டியின் பின்னால் கைதியின் கைகளைப் பிணைத்து, அவனது உடல் முழங்கையிலிருந்து தரையில் படுமாறு கட்டி, பயணம் ஆரம்பமாகும். பல மைல் தூரம் நீளும் பயணம் முடியும்போது வண்டியின் பின்னால் கட்டப்பட்ட முழங்கை வரையிலான பாகம் மட்டுமே எஞ்சியிருக்கும்.

ஜப்பானில் தேசத்துரோக குற்றங்களுக்கு அந்தக் காலத்தில் வழங்கப்பட்ட தண்டனை இன்னும் வித்தியாசமானது... கைதியின் இரு உள்ளங்கைகளிலும் உள்ள மேல் தோல் சீவப்படும். பின்னர் இரண்டும் இணைத்துக் கட்டுப் போடப்படும். காலக் கிரமத்தில் காயங்கள் ஆறி, இரு உள்ளங்கைகளும் ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்ளும். அப்போது கட்டு அவிழ்க்கப்படும். கால காலத்துக்கும் கூப்பிய கைகளுடனேயே கைதி வலம் வர வேண்டியிருக்கும். ஜப்பானிய மக்களில் சிலர் தங்கள் மன்னர் இறந்துவிட்டால் துக்கம் தாங்காமல் வயிற்றைக் கிழித்துக்கொண்டு மண்டியிட்ட நிலையில் அமைதியாக உயிர் துறப்பார்களாம். இதை ஹராக்கி என்பார்கள்.

சிலர் தங்களுக்குத் தாங்களே சுயதண்டனைகள் கொடுத்துக் கொள்வர். மகாத்மா காந்தி இதுபோல தமக்குத் தாமே தண்டனைகள் வழங்கிக் கொண்டதுண்டு.
விரதம் என்று சாப்பிடாமல் இருப்பதும் ஒரு வகையான சுய தண்டனைதான். சமணத் துறவிகள் சுடுபாறையில் கிடத்தல், தங்களது உரோமங்களைக் கையால் பிடுங்குதல் போன்றவையும் சுய தண்டனையின் வடிவங்களே!

சட்டமன்றத்தில் உரிமை மீறல் போன்ற தவறுகளுக்காக ஒருவரைத் தண்டிக்கும் முறை கொஞ்சம் சுவாரசியமானது. அங்கிருக்கும் கூண்டில் ஒருவரை ஏற்றுவதே தண்டனை!
அரசுப்பணிகளில் துறைரீதியான விசாரணை மேற்கொள்ளும்போது, குற்றம் நிரூபிக்கப்பட்டால், விசாரணை முடிவில் அளிக்கப் படும் குறைந்தபட்சத் தண்டனை சென்ஷ்யூர் என்பதாகும். அதாவது தவறிழைத்த அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டில், ‘கண்டனம் தெரிவிக்கப்படுகிறது’ எனப் பதியப்படும். அதிகபட்ச தண்டனை, டிஸ்மிஸ். ஒரு சிப்பந்தியை எந்த இடத்தில் பணிபுரியச் சொன்னாலும் ஏதாவது ஏடாகூடம் செய்துவிடுவாராம். அவரை மொட்டைக்கரடு ஒன்றுக்குக் காவல் பணியில் போட்டார்களாம். அங்கே போயும் நல்ல வளமாக இருந்தாராம். எப்படி என்கிறீர்களா? ஒரு பாறைக்கு மஞ்சள் குங்குமம் பூசி, ‘அருள்மிகு மொட்டைக் கரட்டுச்சாமி’ என்று பெயரும் கொடுத்து, உண்டியல் வைத்துத் தடபுடலாகக் காசு பார்த்தாராம்.

திருவள்ளுவர் கொடுக்கச் சொல்லும் தண்டனை கொஞ்சம் வித்தியாசமானது. ஆம்! தவறு செய்பவர்களுக்குக் கொடுக்கும் பெரிய தண்டனை அவர்களை மன்னிப்பது என்கிறார்.

‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.’
(அடுத்து...)