சுலபமாக செய்யலாம் சுயதொழில்



தேனீ வளர்த்தால் காசு குவியும்

தேன் என்று சொன்னதும் இனிக்கும் என பதில் வரும். நாவின் உமிழ்நீர் சுரப்பிகள் சுறுசுறுப்பாகிவிடும். துளித்தேனை விரலால் தொட்டு நுனி நாக்கில் வைத்து சுவைப்பது அலாதி அனுபவம். இந்த தேன் மகத்தான மருத்துவ குணங்களைக் கொண்டது. நாட்டு வைத்தியம் தொடங்கி அழகுசாதன பொருட்கள் தயாரிப்பு வரை அனைத்திலும் தேனின் பங்களிப்பு அதிகம். ஆனால் சுத்தமான தேன் கிடைப்பதுதான் அரிதாய் இருக்கிறது. அதனால் தேனின் விலையும் தேன்கூடு போலவே உச்சாணிக் கொம்பில் இருக்கிறது.
 ஆக, மக்களின் அவசியத் தேவைப் பட்டியலில் இருக்கும் தேனை நாமே தயாரித்து விற்க முடியுமென்றால்... அதற்கு வரவேற்பு எப்படி இருக்கும்?

‘‘அற்புதமாக இருக்கும். பணம் குவிக்கலாம்’’ என்கிறார், வில்லியம் ஜேம்ஸ். தேனீ வளர்ப்பில் இவர் ஸ்பெஷலிஸ்ட் (தொடர்புக்கு: 9789860119).
‘‘எனக்கு சொந்த ஊர் ராஜபாளையம். தாம்பரம் எம்.சி.சி. கல்லூரியில் எம்.எஸ்சி பிளான்ட் பயாலஜி அண்டு பயோடெக்னாலஜி முடித்துவிட்டு அதே கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினேன். பூச்சியியல் பற்றி இரண்டு வருட ஆராய்ச்சி படிப்பும் முடித்தேன்.  சென்னை லயோலா கல்லூரியில்  தாவரவியலில் ஆராய்ச்சி படிப்பு முடித்தேன்.

நான் படித்த படிப்பு தொடர்பாக ஏதாவது ஒரு தொழிலைச் செய்ய விரும்பினேன். அது மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பது என் திட்டம். நீண்ட யோசனைக்குப் பிறகு தேனீக்கள் வளர்ப்பு, வண்ண மீன் வளர்ப்பு, காளான் வளர்ப்பு ஆகியவற்றை செய்து பார்த்தேன். இந்தத் தொழில்களில் மக்களுக்கு ஆர்வம் இருப்பதையும் ஆனால் அதற்கு சரியான வழிகாட்டுதல் இல்லை என்பதையும் உணர்ந்தேன். இதற்காகவே 2003 முதல் தேனீ வளர்ப்பு பயிற்சிகளை வழங்க துவங்கினேன். பல கல்லூரிகளிலும் சென்று மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளேன். இது சான்றிதழ் படிப்பாகக் கூட சில பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகிறது.

தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் விவசாயிகள், இல்லத்தரசிகள், இளைஞர்கள் என பலரும் தேனீக்கள் வளர்ப்பு பற்றி அறிய ஆர்வமாக தேடி வருகிறார்கள். பல பகுதிகளுக்கு நானும் சென்று தேனீ வளர்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறேன். அதேபோல வண்ண மீன்கள், காளான் வளர்ப்பு தொடர்பான பயிற்சி வகுப்புகளையும் நடத்துகிறேன். மற்றும் அது தொடர்பான அடிப்படை வசதிகளையும், சந்தைப்படுத்தும் முறையையும் அவர்களுக்கு சொல்லித் தருகிறேன்.

வண்ண மீன் வளர்ப்புக்கு இன்றைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பெரிய வணிக நிறுவனங்கள், நட்சத்திர ஓட்டல்கள், சிறிய, பெரிய கடைகள், வீடுகளில் கூட  வாஸ்துக்காகவும், அழகுக்காகவும் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. ஆர்வத்துடன் வருபவர்களுக்கு, வளர்க்கும் முறைகளை கற்றுத் தந்து, மீன் குஞ்சுகளையும்  வழங்குகிறோம். தேனீ வளர்ப்பில் நகர்ப்புற மக்களும் ஈடுபடுகின்றனர். ஆனால் கிராமப்புற மக்களுக்கு இது சுற்றுச்சூழல் ரீதியாகவும் மிகவும் பொருத்தமான சுயதொழில்.
 கிராமங்களில் குறைந்த உழைப்பில் அதிக லாபம் கிடைக்கும். தேனீ வளர்ப்புக்கு தேனீ வளர்ப்புப் பெட்டி, தேனெடுக்கும் கருவி, புகைப்பான், முகமூடி தலைக்கவசம், கத்தி, ஸ்டாண்ட், கையுறைகள் போன்றவை அவசியம். தேன் வளர்ப்புப் பெட்டிகளை மரத்தால்தான் செய்யவேண்டும். குறிப்பாக புன்னை மரத்தில் செய்வது நல்லது. நம் நாட்டில் மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத் தேனீ, கொசுத் தேனீ,  இத்தாலியத் தேனீ என ஐந்து வகை தேனீக்கள் உள்ளன. இதில் இந்தியத் தேனீ, இத்தாலியத் தேனீ மற்றும் கொசுத் தேனீ மட்டுமே மனிதர்கள் பராமரித்து வளர்க்கக்கூடியவை.

இதிலும் கொசுத் தேனீ தரும் தேனை பெரும்பாலும் மருத்துவத்துக்கே பயன்படுத்துவார்கள். இந்த தேன் கொஞ்சம் புளிப்புச் சுவையோடு இருக்கும்.
பொதுவாக மரத்தில் தேனீக்கள் வட்ட வடிவிலும், பலாப்பழம் போல நீள்வட்ட வடிவிலும் அடை கட்டும். அடையில் உள்ள கூட்டு அறைகள் அறுங்கோண  வடிவில் இருக்கும். தேன் வழிந்து விடாதபடி, சற்று மேல்நோக்கி இருக்கும். காலனி பிரிக்கும்போது நாமே இதுபோன்ற அடை வடிவமைப்பை  பயன்படுத்தலாம். அதன்மூலம் தேனீக்கள் (honey bees) விரைவாக கூடு மற்றும் அடை வைக்கும்.

தேனீ வளர்ப்பில் நஷ்டம் ஏற்படுத்தும் முக்கியமாக எதிரிகள் சிலந்தி, பல்லி, எறும்புகள்தான். இவை தேனை சேதம் செய்துவிடும். இதைத் தடுக்க தேனீ வளர்ப்புப் பெட்டியை ஒரு தொட்டி போன்ற அமைப்பில் தூண் போல அமைத்து அதன் மீது பொருத்த வேண்டும். தொட்டியில் தண்ணீர் விட்டு வைக்க வேண்டும். அப்போது பூச்சிகள் அண்டாது. மழையிலிருந்து பாதுகாக்க பிளாஸ்டிக் ஷீட்டை கட்டி வைக்கலாம்.  ஒரு தேன் பெட்டியிலிருந்து மாதந்தோறும் சராசரியாக ஒன்றிலிருந்து  ஒன்றரை கிலோ தேன் கிடைக்கும். ஒரு ஏக்கரில் 50 பெட்டிகள் வைத்தால் சராசரியாக 60 கிலோவுக்கு மேல் தேன் கிடைக்கும். இதன்மூலம் மாதம்  ரூ.20 ஆயிரம் வரை லாபம் பெறலாம்.

தேன் மட்டுமல்லாமல் தேன் மெழுகு, தேன்பால், தேன் பிசின் என தேனீ வளர்ப்பில் பணம் குவிக்க முடியும். ஓரளவு படித்த ஆண்கள் பெண்கள் என எல்லோரும் செய்ய ஏற்ற தொழில் இது’’ என நம்பிக்கை விதைக்கிறார், ஜேம்ஸ்!

- எம்.நாகமணி
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்