மாணவர்களின் மகத்தான கண்டுபிடிப்பு



பள்ளி மாணவன் பலே!

சோலார் வீடு...  திருடனே ஓடு!


கல்லூரி மாணவர்களின் ப்ராஜெக்டாகத்தான் கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டுமா? ‘ஆர்வமிருந்தால் பள்ளி மாணவர்களும் ஐன்ஸ்டீன் ஆகலாம்’ எனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஆகாஷ். சென்னை, வண்ணாரப்பேட்டை கே.சி.எஸ்.சங்கரலிங்க நாடார் பள்ளியின் 8ம் வகுப்பு மாணவர் இவர்! முழுக்க முழுக்க சூரிய சக்தியில் ஒளிரும் வீடு... அதில் திருட்டைத் தடுக்கும் செக்யூரிட்டி சிஸ்டம்... இதுதான் ஆகாஷின் ‘அடடா’ கண்டுபிடிப்பு!


ஆகாஷிடமே கேட்டோம்...

‘‘இப்போ, எங்க பார்த்தாலும் கொலை கொள்ளைன்னுதான் நியூஸ் வருது. அதிலிருந்து நம்ம வீடு பாதுகாப்பா இருக்கணும்னு எல்லாரும் விரும்புறோம். அதுக்காகத்தான் இப்படி ஒரு மினியேச்சர் வீட்டை உருவாக்கினேன். இது ஒரு டெமோ பீஸ். இதில் இருக்குற செட்டப்பை அப்படியே நம்ம வீட்டுலயும்  ரொம்ப ஈஸியா பொருத்திக்கலாம்’’ என்ற ஆகாஷ், தன் சோலார் வீட்டில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்பத்தையும் பகிர்ந்தார்...

‘‘வீட்டின் கூரை மேல சோலார் பேனல் இருக்கு. அது சூரிய ஒளியை மின்சாரமாக்கி பேட்டரியில் சேமிக்குது. பேட்டரி ஒரு இன்வெர்ட்டர்ல இணைக்கப்பட்டிருக்கு. ஸோ, கரன்ட் கட்டானாலும் இந்த சோலார் இன்வெர்டர் தடையில்லாத மின்சாரத்தைக் கொடுக்கும். கரன்ட் இருக்கும் போது அந்த இன்வெர்டர் பேட்டரி ஏன் சும்மா இருக்கணும்னுதான் அதுக்கு ஒரு செக்யூரிட்டி வேலை கொடுத்திருக்கேன். அதாவது, கதவுகள்ல ஒரு மேக்னட்டிக் சென்சார் பொருத்தியிருக்கேன். அதை யாராவது அசைச்சா அந்த சிக்னல் ஒரு கன்ட்ரோல் யூனிட்டுக்குப் போகும். அந்த கன்ட்ரோல் யூனிட் உடனடியா கரன்ட்டை கட் பண்ணிட்டு, சைரன் சத்தத்தைக் கொடுக்க ஆரம்பிச்சுடும்.

 கன்ட்ரோல் யூனிட்ல ஒரு ஜி.எஸ்.எம் மாட்யூலும் சிம்கார்டும் இணைக்கப்பட்டிருக்கு. நம்ம நம்பர், பக்கத்து போலீஸ் ஸ்டேஷன் நம்பர்னு அதுல நாம கொடுத்திருக்குற நம்பர் எல்லாத்துக்கும் அது ஒரு அலர்ட் எஸ்.எம்.எஸ்-ம் அனுப்பிடும். அதனால திருடன் கதவைத் தொட்டதுமே சிக்கிடுவான்!’’ - ஆர்வம் படபடக்க நமக்கு டெமோ காட்டி முடித்தார் ஆகாஷ்.மொத்தத்தில் சிக்கனமும் பாதுகாப்பும் ஒரே பேக்கேஜில்!

- எம்.நாகமணி
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்