அதிகம் படிக்காதவர்களுக்கு அரிய வாய்ப்பு!



தேசிய திறந்தவெளிப் பள்ளியில் தொழிற்கல்வி


National Institute of open School (NIOS) எனப்படும் தேசிய திறந்தவெளி பள்ளி, மத்திய அரசின்  மனித வளத்துறையின் கீழ் செயல்படும் ஒரு கல்வி நிறுவனமாகும். பொருளாதாரப் பின்னடைவு, குடும்பச்சூழல் காரணமாக முறையான பள்ளிகளில் படிக்க இயலாத அல்லது பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்ட மாணவர்களுக்காக இந்தக் கல்வி நிறுவனம் செயல்படுகிறது.   Open Distance Learning (ODL) எனப்படும் தொலைதூரக் கல்வி முறை மூலம் இங்கு தொழிற்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய  தருணம் இது.

அதுபற்றிய விவரங்களை விரிவாகத் தருகிறார் கல்வியாளரும், ‘ஸ்டூடண்ட்ஸ் விஷன் அகாடமி’யின் இயக்குநருமான ஆர்.ராஜராஜன்.உலகம் முழுவதும் உள்ள திறந்தநிலைக் கல்வி நிறுவனங்களில் இந்தியாவில் உள்ள தேசிய திறந்தவெளிப் பள்ளியே மிகப்பெரியதாகும். இக்கல்வி நிறுவனம் வழங்கும்  சான்றிதழ், பிற அரசுக் கல்வி நிறுவனங்களின் சான்றிதழுக்கு இணையானதாக கருதப்படும். இக்கல்வி நிறுவனத்தில் பல்வேறு தொழிற்படிப்புகள்  வழங்கப்படுகின்றன.

ஹோம் சயின்ஸ் அண்ட் ஹாஸ்பிடாலிட்டி, கம்ப்யூட்டர் கம்யூனிகேஷன், ஃபேக்டரி சேஃப்டி, காமர்ஸ் அண்ட் பிசினஸ், ஹெல்த் அண்ட் மெடிசின், லைப்ரரி சயின்ஸ், அக்ரிகல்ச்சர் அண்ட் வெட்ரினரி மெயிண்டனன்ஸ், எஞ்சினியரிங் அண்ட் டெக்னாலஜி போன்ற துறைகளில் பல்வேறு உட்பிரிவுகளுக்கான
பட்டயம் மற்றும் சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையில் காளான் உற்பத்தி, தேனீ வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, சணல் உற்பத்தி போன்ற ஆறுமாத படிப்புகள் வழங்கப்படுகிறது. இப்படிப்புகளில் சேர 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. தாவர பாதுகாப்பு மற்றும் பயிர் உற்பத்திக்கான நீர் மேலாண்மை, சிப்பிக்காளான் உற்பத்தி, கோழிப்பண்ணை, மண் மற்றும் உரம் மேலாண்மை ஆகிய ஒரு வருடப் படிப்புகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வணிகம் மற்றும் வர்த்தகத் துறையில் தற்கால நவீன செயலாளர் பயிற்சி, காப்பீடு சேவைப்பயிற்சி ஆகிய ஒரு ஆண்டு படிப்புகள் உண்டு. இவற்றில் சேர +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இ-தட்டச்சு, ஷார்ட் ஹேண்ட் உள்ளடக்கிய ஒரு ஆண்டு செயலாளர் படிப்பிற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம், ஹிந்தி, உருது மொழிகளில் ஒரு ஆண்டு இ-தட்டச்சு பயிற்சிகளும் உண்டு.

கம்ப்யூட்டர் தொடர்பான படிப்புகளில் 6 மாத கால அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சிக்கு கல்வித்தகுதி அவசியமில்லை. எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும்.  6 மாத கால DTP., Web Designing, hardware  படிப்புகளுக்கு 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் மற்றும் அலுவலக நிர்வாகப் படிப்பு, அட்வான்ஸ் வெப் டிசைனிங் படிப்புக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும்.

வீட்டு வயரிங், எலக்ட்ரிக்கல் பழுது பார்த்தல், மோட்டார் டிரான்ஸ்ஃபார்மர், ரேடியோ-டேப் ரெக்கார்டர் பழுது பார்த்தல், நான்கு சக்கர வாகன எஞ்சின், சேசிஸ் மெக்கானிக் போன்ற ஆறு மாத படிப்புகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட அனுபவம் இருந்தால் போதும். கட்டுமான மேற்பார்வை டிப்ளமோ படிப்பிற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.

எலக்ட்ரிக்கல் டெக்னீஷியன், ரேடியோ மற்றும் T.V டெக்னீஷியன், குளிர்பதனம் மற்றும் ஏர் கண்டிஷன் மெக்கானிக், 4வீலர் மெக்கானிசம் போன்ற ஓராண்டு படிப்புகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அத்துறையில் 2 வருட அனுபவம் வேண்டும். டூவீலர் மெக்கானிக் படிப்புக்கு 5ம் வகுப்பு தேர்ச்சி  போதுமானது.

இவை தவிர, தச்சுத்தொழில், சோலார் தொழில்நுட்பம், இயற்கை வாயு தொழில்நுட்பம், வெல்டிங் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் பாரா மெடிக்கல் படிப்புகள், கட்டிங், டெயிலரிங், உடை தயாரிப்பு, எம்ப்ராய்டரி, ஹேர் கட்டிங், ஹவுஸ் கீப்பிங், கேட்டரிங், குழந்தைகள் பராமரிப்பு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படிப்புகள் இங்கே வழங்கப்படுகின்றன.

இப்படிப்புகளில் ஆண்டில் எந்த மாதத்தில் வேண்டுமானாலும் சேரலாம். தேர்வுகள் ஆண்டுக்கு இருமுறை நடைபெறும். அதிகபட்சம் 5 ஆண்டுகளில் 9  முயற்சிகளுக்குள் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுவிட வேண்டும். வேலைவாய்ப்புகளை பெறும் வகையிலும், சொந்த வாழ்க்கையில் பயன்படுத்தும் வகையிலும், சுயதொழில் செய்யும் வகையிலும் பாடங்கள் வடிவமைக்கப்படுகின்றன. படிப்புகளின் தன்மைக்குத் தகுந்தவாறு குறைந்தபட்சம் 14 வயது முதல் அதிகபட்சம் 18 வயது வரை உள்ளவர்கள் இப்படிப்புகளில் சேரலாம். ஒரு மாணவர் ஒருமுறையில் ஒரு படிப்பை மட்டுமே படிக்க இயலும்.

பாடத்துக்கான புத்தகங்களை நிறுவனமே அனுப்பி வைக்கும். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இக்கல்வி நிறுவனத்துக்கு மையங்கள் உண்டு. அந்த  மையங்களில் அவ்வப்போது பயிற்சி வகுப்புகளும், செய்முறை வகுப்புகளும் நடைபெறும். தூர்தர்ஷன் சேனலில் ஒவ்வொரு வெள்ளியன்றும் காலை 5 மணிக்கு பாடவாரியாக செயல்முறை பயிற்சி வழங்கப்படும்.

படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.nios.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழகத்தில், அகஸ்தியசாமி ஐ.டி.ஐ, மதுராந்தகம் (தொலைபேசி எண்: 23660921), ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆப் தமிழ்நாடு, தரமணி (தொலைபேசி எண்: 22541651), சென்னை கார்ப்பரேஷன் கம்யூனிட்டி, சேம்பாக்கம் (தொலைபேசி எண்: 25384510), சி.பி.ராமஸ்வாமி அய்யர் ஃபவுண்டேஷன், ஆழ்வார்பேட்டை (தொலைபேசி எண்: 24353176), மார்க் அகாடமி, அரும்பாக்கம் (தொலைபேசி எண்: 23632601) ஆகிய நிறுவனங்கள் தேசிய திறந்தவெளிப் பள்ளியால் அங்கீகரிக்கப்பட்ட மையங்கள். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆல்பா அண்ட் ஒமேகா லேர்னிங் சென்டர் (தொலைபேசி எண்: 23622601) சிறப்பு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொகுப்பு: வெ.நீலகண்டன்