கேம்பஸ் நியூஸ்



செய்தித் தொகுப்பு

கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ் வளர்ச்சி கருதி, தமிழ்மொழியை கம்ப்யூட்டரில் அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தும் வகையில், சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குவோருக்கு, 2013 முதல் ‘முதல்வர் கணினி தமிழ் விருது’ வழங்கப்பட்டுவருகிறது. விருது பெறுவோருக்கு 1 லட்சம் ரூபாய், 1 சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு, தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து, தமிழ் மென்பொருட்கள் வரவேற்கப்படுகின்றன.

போட்டிக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருட்கள், 2015, 2016, 2017ல் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இதற்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை, www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில், இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விருதுக்கான விண்ணப்பம் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு 31.12.2018-க்குள் வந்தடைய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 - 2819 0412, 2819 0413 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

அரசு அலுவலகங்களில் புகையிலைக்கு தடை!

மத்திய சுகாதாரத் துறை செயலர், பிரித்தி சுதன், அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ‘மாநில அரசின் கீழ் செயல்படும், அனைத்து பொதுத் துறை அலுவலக வளாகங்களில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ தடை விதிக்க வேண்டும். புகையிலை தடை, மத்திய அரசின், ‘நிர்மான் பவன்’ அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி வரை பெண்களுக்கு இலவச கல்வி!

கர்நாடகாவில் கல்லூரி படிப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கவுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஏற்கனவே 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வியினை அரசு வழங்கிவருகிறது. இந்நிலையில் கல்லூரிப் படிப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் திட்டத்திற்கு மந்திரிசபை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல கிராமங்களில் பெண்களுக்கான கல்வி மறுக்கப்பட்டுவரும் நிலையில் கர்நாடக முதலமைச்சரின் இந்த அதிரடியான அறிவிப்பு பலரது வரவேற்பைப் பெற்றுள்ளது.

கர்நாடகத்தில் கல்லூரி படிப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பி.யூ. கல்லூரி, முதல்நிலை கல்லூரி மற்றும் உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவிகளின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும். இந்தத் திட்டமானது நடப்பு கல்வி ஆண்டு (2017-18) முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ.95 கோடி செலவாகும். இதன் மூலம் மாநிலத்தில் 3.70 லட்சம் பேர் பயன் பெறுவார்கள். இந்தக் கல்வியாண்டு முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும். இந்தத் திட்டத்தின் மூலம் வருடத்திற்கு ரூ.95 கோடி அரசுக்குச் செலவாகும்.

பள்ளிகளுக்கு மழை விடுமுறை விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்!

மழை பெய்யும் நாட்களில், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்ற எதிர்பார்ப்பு, பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் தற்போது அதிகரித்துள்ளது. சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில் 10 செ.மீ.-க்கு மேல் மழை பெய்தாலும், வழக்கம் போல பள்ளி, கல்லுாரிகள் இயங்குகின்றன. ஆனால், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறு துாறல் விழுந்தாலே, பள்ளிக்கு விடுமுறை கேட்டு சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்புகின்றனர். இந்தப் பருவமழை காலத்தில் மட்டும், சாதாரண துாறலுக்கு விடுமுறை அறிவித்து, மூன்று நாட்கள், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளிகள் தரப்பில், அரசுக்கு புகார் அளித்ததால், மழைக்கால விடுமுறைக்கு என விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன இந்நிலையில் மழை குறித்த விழிப்புணர்வை பெற்றோருக்கும், மாணவர்களுக்கும், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மனநல ஆலோசகர்கள், சுற்றுச்சூழல் அறிஞர்கள் வாயிலாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. மழையின் அவசியம், மழை நீர் சேகரிப்பின் முக்கியத்துவம், மழைக் காலங்களில் நடந்துகொள்ள வேண்டிய முறைகள்,

குழந்தைகள் மற்றும் மாணவர்களை மழைக் காலங்களில், பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வழிமுறைகள் குறித்து, பெற்றோருக்கு விளக்க உள்ளனர். தேவையற்ற விடுமுறைகளால் பாடங்கள் பாதிக்கப்படுவது குறித்தும் விளக்கப்பட உள்ளது. மாவட்ட வாரியாக, பள்ளி தலைமை ஆசிரியர்களின் விருப்பப்படி, நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மழைக்காலங்களில், பள்ளிகளுக்கு செல்லும் வழியிலோ, பள்ளியிலோ பிரச்னைகள் இருந்தால், அதை உள்ளாட்சி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவும், பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட உள்ளது.