கஜா புயல் நிவாரணப் பணிகளில் ஆசிரியர்கள்!



கஜா புயலினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்ககளுக்கு அரசு உதவிக்கரம் நீட்டாவிட்டாலும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பலரிடமிருந்து உதவிகள் கிடைத்து வருகின்றது. இவற்றில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சேவையும் கவனிக்கத்தக்க வகையில் அமைந்திருந்தது. திருவாரூர், நாகை மாவட்டங்களில் களப்பணி ஆற்றி உதவி வருகிறார்கள் ஆசிரியர்கள். இவர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து வருகை புரிந்துள்ளனர். அவர்களிடம் பேசியபோது கிடைத்த தகவல்களைப் பார்ப்போம்...

செ.மணிமாறன், மாற்றுக்கல்விக்கான செயல்பாட்டாளர், அரசுப் பள்ளி ஆசிரியர். மேலராதாநல்லூர், திருவாரூர்.

நாங்கள் நிவாரணப் பணிக்காக தெரிவு செய்த பகுதிகள் முழுமையாக ஆசிரியர்களின் மேற்கோள்களில் தான். பயணத்தின்போது செல்லும் வழிகள்தோறும் பிஸ்கட், சால்வைகள் மற்றும் மெழுகுவர்த்திகள் தருவதை வழக்கமாக கொண்டுள்ளோம். குக்கிராமங்களில் செல்லும்போதும் மக்கள் ‘‘எங்க சார் வந்து மெழுகுவர்த்திகள், கொசுவர்த்தி, பசங்களுக்கு பிஸ்கட்லாம் தருவாங்க’’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கும்போதும், ஆசிரியர் என்றவுடன் அந்த மக்களிடம் கிடைக்கும் ஒரு பாசமும் கண்டிப்பாக பெருமையுடன் சொல்ல வேண்டும்.

பள்ளிக்குழந்தைகளுடன் முகாமிலேயே தங்கிய ஆசிரியர், பள்ளிகளை சுத்தப்படுத்தியவர்கள், தங்களது வீடுகளுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று தங்க வைத்தவர்கள் என்று பட்டியல் நீளும்... சில சம்பவங்களை இங்கு பகிர்ந்துகொள்ள கடமைப்பட்டுள்ளேன். ஒரு ஆசிரியர் அவரது வீட்டில் தினமும் உணவு சமைத்து பொட்டலங்களாக கட்டிக்கொண்டு அவரது வாகனத்தில் வைத்துக்கொண்டு ஏதோ ஒரு திசையில் பயணித்து பாதிப்படைந்த மக்களுக்கு அந்த 100 பொட்டலங்களைக் கொடுத்துவிட்டு வீட்டிற்கு திரும்புகிறார்.

திரும்பும்போது மாலைக்கான உணவுப் பொட்டலம் தயார். அதையும் எடுத்துக்கொண்டு மாலை நேரப் பயணம். அவரால் 200 பேர் உணவு உண்கின்றனர்.
கல்வித்துறையால் தண்டிக்கப்பட்டு அடிக்கடி இடமாற்றம் செய்யப்படும் ஆசிரியர் ஒருவரை சுற்றி உள்ள கிராமங்களே கொண்டாடுகிறது. தமது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தினமும் மாலையில் சுற்றியுள்ள கிராமங்களுக்கு முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, உணவு, தண்ணீர் என அனைத்தையும் சுமார் 20 கிராமங்களுக்கு கொண்டு சேர்த்துள்ளார்.

நிவாரணப் பொருட்களுடன் செல்லும் எங்களை வரவேற்பதில் தொடங்கி, உரத்த குரலில் பெயர்களை வாசிக்கின்றார். பெரிய அளவு கொண்ட குறிப்பேட்டில் குடும்பங்களின் பெயர்களுக்கு குறி இடுகிறார். அடுத்த பக்கத்தில் வயதானவர்கள் பட்டியல், குழந்தைகள் பட்டியல் என வைத்துக்கொண்டு அவர்களுக்கான உதவியை தனியாக பிரித்து வழங்குகிறார். உணவு சமைக்க பொருட்களை மேற்பார்வையிட்டு வழங்குகிறார். பெண் ஆசிரியர்கள் குறித்து சொல்லியாக வேண்டும். பேருந்து, மின்வசதி இல்லை என்றாலும் எப்படியோ பயணம் செய்து வழக்கமான உற்சாகத்துடன் களத்தில் உதவுகின்றனர்.

பள்ளி விடுமுறை யென்றாலும், இவர்களது பணிகளுக்கு விடுமுறை இல்லை. சமையல் பணிக்கு உதவுகிறார்கள், நகரத்திற்குச் சென்று தேவையான பொருட்களை வாங்குகின்றனர். தமது நண்பர்களின் மூலமாக திரட்டிய பொருட்கள், நிதியைக் கொண்டு அவர்களது பணிப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் உதவுகின்றனர். வெளியிலிருந்து செல்லும் அனைவருக்கும் வழிகாட்டுகின்றனர். இவை புயல் பாதித்த இடங்களில் உள்ள ஆசிரியர்கள் பற்றியது மட்டுமே.. வெளியில் உள்ள ஆசிரியர்களின் பணி இன்னும் சிறப்பு.

மூர்த்தி, அரசுப் பள்ளி ஆசிரியர், தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் மூர்த்தி பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக சென்று பார்த்து அவர்களுக்கு உதவி செய்தார். வழிகளை மறைத்துக்கொண்டு விழுந்துகிடந்த மரங்கள், மின்கம்பங்களை நீக்கி வாகனங்களுக்கு வழியினை ஏற்படுத்தும் பணியில் பெரும் பங்காற்றினார்.

கவிதா, அரசுப் பள்ளி ஆசிரியை, காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மேல்மருவத்தூரிலிருந்து தனியாக வருகைபுரிந்திருந்த ஆசிரியை கவிதா இடிந்த வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களுடன் கலந்துரையாடல் செய்து ஆறுதல் அளித்து நம்பிக்கை அளித்ததோடு அவர்களுக்கான உதவி
களையும் வழங்கினார்.
 
அனிதா, அரசுப் பள்ளி ஆசிரியை, கோவை

கோயம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் அனிதா டெல்டா பகுதியைப் பாதுகாக்க முற்றிலும் பெண் ஆசிரியர்களைக் கொண்ட ஒரு குழுவினை ஏற்படுத்தி அதன் மூலமாக உதவிவருகிறார்.
 
சுரேஷ், அரசுப் பள்ளி ஆசிரியர், திண்டுக்கல்

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான பொருட்களைக் கொண்டு செல்வது மட்டுமின்றி, இரவு முழுவதுமாக அவற்றை சேகரித்து, உணவுப்பைகளை தயாரித்து சுமார் 1000 குடும்பங்களுக்கு உதவிட உறுதுணையாக இருந்தார்.

ரேணுகாதேவி, அரசுப் பள்ளி ஆசிரி்யை, சென்னை

சென்னையைச் சேர்ந்த ஆசிரியை ரேணுகாதேவி தங்களது பள்ளிக் குழந்தைகள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிக்குழந்தைகளுக்குத் தேவையான எழுதுபொருட்களான குறிப்பேடுகள், பென்சில், வண்ணங்கள், புத்தகப்பைகள் என வழங்கியுள்ளார். அத்துடன் ‘உதவ நாங்கள் இருக்கின்றோம்’ என்ற உணர்வை ஏற்படுத்தும் கடிதங்களும், பாதிக்கப்பட்ட பகுதி பள்ளிக் குழந்தைகளுக்கு அவர் பணிபுரியும் பள்ளிக் குழந்தைகளைக் கொண்டு எழுதவைத்துள்ளார்.

குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம்

முற்றிலும் ஆசிரியர்களைக் கொண்டுள்ள குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்க ஆசிரியர்கள் சுடரொளி, சாந்தி, ஸ்ரீதரன் குழுவினர் காலையில் பள்ளி, மாலையில் உணவுப் பொட்டலங்கள் தயார் செய்தல் என சுமார் 6 நாட்கள் உழைத்துள்ளனர். சென்னையிலிருந்து தினமும் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களைஅனுப்பி வைத்தனர்.
 
அன்பரசன், தனியார் பள்ளி ஆசிரியர், திருச்சி

திருச்சி சமயபுரம் தனியார் பள்ளி ஆசிரியர் அன்பரசன் வாகனங்கள் செல்ல வசதியற்ற பகுதிகளுக்கு பொருட்களை தோளில் சுமந்து கொண்டுபோய் சேர்த்தார். உணவிற்கான பொருட்கள் தயாரிப்பது, உணவு பரிமாறுதல் ஆகிய பணிகளில் முழுமையாக ஈடுபட்டார்.

பிரீத்தி, தனியார் பள்ளி ஆசிரியை, கும்பகோணம்

தினமும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உணவு அளிப்பதோடு, ஒருவருக்கு ஒரு போர்வை என்ற திட்டத்துடன் பலருக்கும் போர்வை மற்றும் குழந்தைகளுக்கு ஸ்கார்ஃப் வழங்கி உதவியுள்ளார். தியாகராஜன், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் புயல் பாதித்த மாவட்டங்களை தவிர மற்ற  பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம் ரூ.80 கோடி, கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்குகிறோம். கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு மூர்த்தி, திருவாரூர் அன்பழகன், நாடிமுத்து, அனிதா புளோசியா செய்யாறு விசாலி, உடுமலைப்பேட்டை கண்ணபிரான், வேலூர் தங்கம், திருப்பூர் தில்லை ஆகிய ஆசிரியர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தேடிச் சென்று உதவிகள் செய்தனர்.

ஆசிரியர் இயக்கங்கள், ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்றவற்றின் மூலமாகவும் பல ஆசிரியர்கள் உதவி செய்து களத்தில் நிற்கும் எங்களுக்கு உதவிக்கரம் நீட்டிக்கொண்டுள்ளனர். அடுத்த கட்டமாக பள்ளிக் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கித் தருதல், மாணவர்களின் இடிந்துபோன வீடுகளுக்கு பதிலாக வீடுகளைக் கட்டித்தருதல், புதிய உடைகளை வாங்கித் தருதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இச்செயல்பாடுகளின் மூலம் சமூகத் துடன் ஆசிரியர்களின் உறவினை இன்னும் அதிகமாக இணைத்து உள்ளது பெருமைகொள்ளச் செய்கிறது. ஆசிரிய பெருந்தகைகளுக்கு ஹானஸ்ட் சல்யூட்!

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்.