நபார்டு வங்கியின் பால்பண்ணை கடன் திட்டம்!



நிதி வழிகாட்டல்

தொழில் தொடங்க விரும்புவோருக்கு மத்திய/மாநில அரசுகள் பல்வேறு கடன் திட்டங்களை வழங்கிவருகிறது. இந்தக் கடன் திட்டங்கள் பல்வேறு பொதுத்துறை வங்கிகள் மூலமாகவும் நபார்டு வங்கி மூலமாகவும் கிடைப்பதற்கான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் பால்பண்ணை தொழில்முனைவோர் மேம்பாட்டுத்திட்டம் (Dairy Entrepreneurship Development Scheme - DEDS) குறித்து சென்னை நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் பத்மா ரகுநாதன் கூறும் தகவல்களைப் பார்ப்போம்.‘‘உலகின் பால் உற்பத்தியில் 18% இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

இந்தியாவில் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகம். உலகின் தனிநபர் பால் உற்பத்தியை விட இந்தியாவின் தனிநபர் பால் உற்பத்தி அதிகம். பால் பல உட்பொருட்களைக் கொண்ட ஓர் அமுதசுரபி, பாலிலிருந்து தான் வெண்ணெய், தயிர், நெய், பால் ஆடை மற்றும் பால் பவுடர் போன்ற பல பொருட்கள் தயாராகின்றன. இந்தியாவில் பால் உற்பத்தியை மேலும் அதிகரிக்க 2020 ஆம் ஆண்டில் இருமடங்காக உற்பத்தி செய்ய 2010-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திட்டம்தான் ‘பால்பண்ணை தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம்’.

இது சிறு விவசாயிகள், தொழில்முனைவோர், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் விவசாய சங்கங்கள் என அனைவருக்கும் மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம். பசு நமக்கு பால் மட்டும் தருவதில்லை. அதன் சாணம் சிறந்த உரமாகும். மேலும் இதிலிருந்து மண்புழு உரம் தயாரித்து விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.’’ என்று கூறும் பத்மா ரகுநாதன் கொடுக்கும் திட்ட விவரம், நபார்டு வங்கி வழங்கும் கடன் திட்டங்கள், விண்ணப்பிக்கும் காலம், யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பன போன்றவற்றை இனி பார்ப்போம்…  

இத்திட்டம் பற்றிய விவரம்

* இது மாட்டுப் பண்ணை வைக்க மானியம் வழங்கும் NABARD மத்திய அரசின் திட்டம்.
* இந்தத் திட்டத்தில் 2 முதல் 10 மாடுகள் வரை வளர்க்க கடன் பெறலாம்.
* இத்திட்டத்தில் ரூபாய் 7 லட்சம் வரை கடன் பெறலாம்.

நபார்டு வழங்கும் கடன் திட்டங்கள்

இந்த வகையில் பால்பண்ணை தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு தொழில்களுக்கும் மானியங்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில் யாரெல்லாம்

கடன் பெற முடியும்..?

விவசாயிகள், தனிநபர் தொழில் முனைவோர், சுயஉதவி குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள். இதில் குழுக்களானால் ஒவ்வொரு குழு உறுப்பினரும் 2 முதல் 10 மாடுகள் வரை வளர்க்க கடன் பெறலாம். ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்டோர் கூட இத்திட்டத்தில் கடன் பெறலாம். ஆனால், அவர்களின் பண்ணை 500 மீட்டருக்கு மேற்பட்ட தூரத்தில் தள்ளி இருக்க வேண்டும். பயனாளியின் பங்கு ரூபாய் 1 லட்சம் வரை கடன் பெற பயனாளியின் பங்குத்தொகை தேவையில்லை. அதற்கு மேற்பட்ட கடனுக்கு 10% பயனாளியின் பங்காக கொண்டுவர வேண்டும்.வங்கியில் கடன் ரிசர்வ் வங்கியின் நடைமுறைப்படி கொடுக்கப்படும்.

கடன் வழங்கும் வங்கிகள்

* வணிக வங்கிகள்
* கிராம மற்றும் நகர்ப்புற வங்கிகள்
* மாநில கூட்டுறவு வங்கிகள் & மாநில வேளாண் கூட்டுறவு வங்கிகள்
* நபார்டு வங்கியில் மறுசுழற்சி நிதி பெறும் நிதி நிறுவனங்கள்
* நபார்டு வங்கியில் கடன் பெறும் திட்டங்களுக்கே இது பொருந்தும்.

விண்ணப்பிக்கும் காலம்

2018-19ம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் மேலே குறிப்பிட்டுள்ள வங்கிகள் மூலமாக நபார்டு வங்கிக்கு 2018 ஏப்ரல் (April-2018) முதல் 2019 மார்ச் (March-2019) மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொழில்முனைவோர் தங்களின் திட்ட அறிக்கைகளை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். வங்கிகள் அதனை பரிசீலனை செய்து சரியாகும்பட்சத்தில் முதல் தவணை பணம் கொடுக்கப்பட்ட பின் பொதுத்துறை வங்கிகள் நபார்டு வங்கியை அணுகி மானியத்தைப் பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைன் மூலம் இந்த பரிவர்த்தனை நடைபெறும்.

நபார்டு வங்கி பொதுத்துறை வங்கி களிலிருந்து பெறப்படும் மானியதிற்கான ஆன்லைன் விண்ணப்பங்களைப் பெற்ற பின் ஒரு கமிட்டி அமைத்து விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து ஒரு மாதத்திற்குள் கடனுக்கான உத்தரவை பிறப்பிப்பார்கள். கடனுக்கான வட்டி விகிதம் ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின்படி விதிக்கப்படும். திரும்ப செலுத்தும் கால அவகாசம் 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை செலுத்தலாம். இந்த கடனுக்கான சொத்து பிணையம் ரிசர்வ் வங்கியின் பரிந்துரைபடி வங்கியால் கேட்கப்படும்.

நபார்டு வங்கியில் விண்ணப்பங்களைத் தேர்வு செய்ய குழு (Project Sanction Committee - PSC) மற்றும் துணைக் கண்காணிப்புக் குழு (Joint Management Committee - JMC) அமைத்து அவர்களும் கண்காணிப்பார்கள். மேலும் மாநில வங்கிகளின் குழுவும் (State Level Bankers' Committee - SLBC) கண்காணிப்பார்கள். திட்ட அறிக்கை தெளிவாகவும், சரியாகவும் புரியும்படியும் இருந்தால் தொழில் தொடங்க வங்கிகளும் எளிதில் கடன் கொடுப்பார்கள். மேலும் விவரங்களுக்கு www.nabard.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- திருவரசு