தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலின் மறுசீரமைப்பு முயற்சி!



சீர்திருத்தம்

எழுபது வயதை தாண்டிய சீனியர் மருத்துவர்கள், ஜனவரி 31ஆம் தேதிக்குள் தங்களது சான்றிதழ்களை தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யவேண்டும். தவறினால், அவர்கள் தம் மருத்துவ சேவையை தொடர முடியாது என தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. மாநில மருத்துவப் பதிவை (State medical registery) மறுசீரமைப்பு செய்யும் முயற்சிகளின் ஒரு அங்கமாக இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மருத்துவ கவுன்சில். இது தொடர்பாக ஒரு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் பிரசிடெண்ட் டாக்டர் கே.செந்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் சுமார் 1.4 லட்சம் மருத்துவப் பயிற்சியாளர்கள் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். அவர்களில் 70 வயதை தாண்டிய சுமார் 15 ஆயிரம் சீனியர் மருத்துவர்களும் மருத்துவ சேவை செய்துவருகின்றனர். இவர்கள் தற்போதும் மருத்துவ சேவை செய்கின்றனரா என்பதை அறியவும், வயதுமூப்பின் காரணமாக மரணமடைந்தவர்களின் பெயரும் உறுப்பினர்கள் பட்டியலில் நீடிப்பதை நீக்கவும் மாநில மருத்துவப் பதிவை மறுசீரமைப்பு செய்யவும் இம்முயற்சி எடுக்கப்படுவதாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் பிரசிடெண்ட் டாக்டர் கே.செந்தில் தெரிவித்திருக்கிறார்.

பயிற்சியில் இருக்கும் சீனியர் மருத்துவர்கள் என்றால் தங்கள் பதிவு சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் பணியாற்றியதற்கான சான்று, மரணமடைந்தவர்களின் உறவினர்கள்  இறப்புச் சான்றிதழ்களை இணைத்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் ஜனவரி 31ம் தேதி 2019க்குள் இ-மெயில் அல்லது தபால் மூலம் பதிவு செய்யவேண்டும். அவ்வாறு பதிவு செய்ய தவறினால் அவர்கள் பிப்ரவரி 1ம் தேதி முதல் தங்கள் மருத்துவப் பயிற்சியைத் தொடர இயலாது எனவும் கூறியுள்ளார்.

மேலும், மாவட்டவாரியாக மருத்துவர், நோயாளிகள் விகிதாசாரங்களைக் கணக்கிட்டு, அவசர காலங்களில் சிறப்பாக செயல்படுவதற்கும் இப்பதிவு உபயோகமாக இருக்கும் என்கிறார் டாக்டர் செந்தில். கவுன்சிலால் நடத்தப்படும் மருத்துவ கல்வித் திட்டங்களில் இளம் மருத்துவர்கள் பங்குபெற்று 90 மணி நேர வருகைப் பதிவு பெற்றிருப்பது அவசியமாகும். வருகைப்பதிவு குறையும் பட்சத்தில் அபராதம் வசூலிக்கப்படும். மூத்த மருத்துவர்களுக்கு வருகைப் பதிவில் விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
            
- வெங்கட்