அண்ணா பல்கலை தரமான கல்வி தருகிறதா?



தொடரும் சர்ச்சைகள்...

அண்ணா பல்கலைக்கழகத்தின் 2018ஆம் ஆண்டுக்கான 6ஆம் பருவத் தேர்வில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளில் 100க்கு 90 மதிப்பெண்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகளே இடம்பெற்றிருந்தன. குறிப்பாக 2 மதிப்பெண் வினாக்களில் 1,3,5,9,10 ஆகிய வினாக்களை தவிர மற்ற அனைத்து வினாக்களும் வரிசை எண் கூட மாறாமல் அப்படியே இருந்தது.

அதைவிட 13 மதிப்பெண் வினாக்களில் வரிசை எண் மட்டுமில்லாமல் இது அல்லது அது என்று தேர்ந்தெடுக்கக்கூடிய வினாக்கள் கூட கடந்த 2017 ஆம் ஆண்டு வினாத்தாளில் இடம்பெற்றிருந்த மாதிரியே இருந்துள்ளது. பழைய வினாத்தாளை அப்படியே புதிய வினாத்தாளாக பல்கலைக்கழகம் வழங்கி மாணவர்கள் தேர்வு எழுதி இருப்பதைத் தற்செயலாக நிகழ்ந்ததாக கருத இயலாது.

காரணம், 4 மாதிரி வினாத்தாள்கள் உருவாக்கப்பட்டு அதில் ஏதாவது ஒன்றுதான் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக தயாராகும் என்று கூறப்படுகின்றது. அப்படி இருக்க இது எப்படி தற்செயலாக நடந்த நிகழ்வாக கருத இயலும்? பல்வேறு தவறுகள், முறைகேடுகளில் அண்ணா பல்கலையின் பெயர்ப் படிப்படியாக அசிங்கப்பட்டுவரும் நிலையில் தொடர்ந்து  தவறுகள் அரங்கேறுவது மாணவர்கள், கல்வியாளர்கள், பொதுமக்களிடையே சந்தேகம் எழச்செய்கிறது. இதுகுறித்து கல்வியாளர்களிடம் கேட்டபோது அவர்கள் தெரிவித்த கருத்துகளைப் பார்ப்போம்...

ஜெயபிரகாஷ் காந்தி, கல்வியாளர்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இதுபோன்று தவறு நடந்ததாக இதுவரை எந்தச் செய்தியும் வந்ததாகத் தெரியவில்லை. அண்ணா கல்லூரியை சார்ந்துள்ள சுயநிதிக் கல்லூரிகளில்தான் இதுபோன்ற முறைகேடுகள் நடப்பது வெளிவருகிறது. இதில், என்ன தெரிகிறது என்றால், சுயநிதிக் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை முக்கியத்துவம் கொடுக்கவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.

அதற்கடுத்து இன்றைக்கு உயர்நிலைக் கல்வி தேர்வுகள் எல்லாம் ஆன்லைனில் வந்துவிட்டன. இதுபோன்ற முறைகேடுகளை சரிப்படுத்துவதற்கு இங்கும் ஆன்லைன் தேர்வுமுறையைக் கொண்டுவர வேண்டும். ஏன் இந்த முறைகேடு நடந்தது என கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற முறைகேடுகளால் அண்ணா பல்கலை மீதான நம்பிக்கை மாணவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவருகிறது.

அண்ணா பல்கலையில் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும்போது தரமான கல்வியில்தான் வந்துள்ளீர்களா என கேட்கும் நிலைக்கு மாறிக்கொண்டிருக்கிறது. உடனடியாக சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தேர்வு மற்றும் வேல்யூவேஷனில் மாற்றம் கொண்டுவர வேண்டும். அடுத்து மண்டல வாரியாக தேர்வு நடத்த வேண்டும். வினாத்தாள் என்பது ஐஐடி போன்ற நிறுவனங்களிலிருந்து தயாரிக்க வேண்டும். தரமான கல்வியும் தேர்வுமுறையில் மாற்றமும் கொண்டுவந்தால் நமது தமிழ்நாட்டு எஞ்சினியர்களை யாரும் மிஞ்சிவிட முடியாது. அதற்கு சீர்திருத்த நடவடிக்கை அவசியம் தேவை.

பேராசிரியர் அ.மார்க்ஸ்

அண்ணா பல்கலைக்கழகம் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்று. அது இன்று தமிழகத்தின் சிறுமைகளில் ஒன்றாகிவிட்டது. முந்தைய ஆண்டு கொடுக்கப்பட்ட அதே தேர்வுத்தாள் அடுத்த ஆண்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இது எப்படி நடந்திருக்கும்? ஒவ்வொரு முறையும் கேள்வித்தாள்கள் தயாரிக்கும்போது அப்படித் தயாரிக்கப் பணிக்கப்படும் பேராசிரியர் இரண்டு கேள்வித்தாள்கள் தயாரித்துத் தர வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் நான்கு தேர்வுத்தாள் கொடுக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது. தயாரித்தவருக்கே தெரியாது எந்தக் கேள்வித்தாள் தேர்வில் கொடுக்கப்படும் என்பது.

இந்நிலையில் சென்ற ஆண்டு கேள்வித்தாள் எப்படி இந்த ஆண்டும் கொடுக்கப்பட்டிருக்கும்? ஒருவேளை கம்ப்யூட்டரில் சேமித்து வைக்கப்பட்ட பழைய கேள்வித்தாள் தவறாக மீண்டும் அச்சிடப்பட்டிருக்கும் என்றால் இரண்டு மார்க் கேள்விகள் 5 மட்டும் இந்தக் கேள்வித்தாளில் மாறியுள்ளன. அதெப்படி? சூரப்பா இதற்கு என்ன சமாதானம் சொல்லப்போகிறார். இன்று உயர்கல்வி என்பது வணிகப் பொருளாகிவிட்டது. பல லட்சம் ரூபாய் முதலீடு செய்துதான் மாணவர்கள் படிக்க வேண்டிய நிலையும், பல்கலைக்கழகங்கள் உலகச் சந்தையில் போட்டியிட வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.

இப்படியான சூழலில் நமது பெருமைக்குரிய அண்ணா பல்கலைக்கழகத்திற்குத் தொடர்ந்து ஏற்படும் அவப்பெயர் மிகவும் கவலைக்குரிய ஒன்று. ஏற்கனவே உலகத்தரமான பல்கலைக்கழகங்களில் நமக்கு இடமில்லாத நிலையில் இப்படி நடந்துள்ளதை ஏற்க இயலாது. கல்வி வணிகமயமாகிவிட்ட நிலையில் காசு சம்பாதிப்பதற்கு எதை வேண்டுமானாலும் செய்யும் நிலை கல்வித்துறையில் இனி அதிகரிக்கப்போகிறது. முறையான விசாரணை செய்யப்பட்டு குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தகுதி மிக்க பல்துறை நிபுணர்கள் கொண்ட விரிவான புலனாய்வு தேவை.

எம்.வெங்கடேசன், அண்ணா பல்கலை தேர்வுக் கட்டுப்பாட்டாளர்

தேர்வுத்தாள் தயாரிக்கும் பணியை கடந்த ஆண்டு தயாரித்த அதே ஆசிரியரிடம் கொடுத்துள்ளார்கள். பார்ட் ஏ-யில் 6 வினாக்களை மட்டும் மாற்றிவிட்டு அப்படியே கொடுத்துள்ளார். வினாத்தாள் தயாரித்து வருவதை யாரும் பார்க்க மாட்டார்கள், வருவதை அப்படியே அச்சிட்டு தேர்வுக்கு அனுப்பிவிடுவோம். இதில் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்கக்கூடியவர், தயாரிக்கக்கூடியவர் தேர்வுத்தாளை தேர்வு செய்யும் ஆசிரியர் மட்டும்தான். கடந்த ஆண்டு என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டது என்பது அவர்களுக்கும் தெரியாது, யாருக்கும் தெரியாது. அதுதான் இப்படிப்பட்ட பிரச்னைக்கு காரணம்.

இந்த தவறு அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் நடைபெறவில்லை. இணைவு பெற்ற கல்லூரிகளில்தான் இந்த தவறு நடந்துள்ளது. இதுகுறித்து வினாத்தாள் தயாரித்த ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம். அவர் சரியான பதில் கொடுக்கவில்லை. சரியான பதில் கொடுக்கும்படி திரும்பவும் கடிதம் எழுதியுள்ளேன். ஆனால், அவர் இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று வழி தேடிக்கொண்டிருக்கிறார். யாரோ ஒருசிலர் செய்யும் இப்படிப்பட்ட தவறுகளால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழத்தான் செய்யும் என்ன செய்ய முடியும்? இதற்குமேல் தவறு நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பெயர் சொல்ல விரும்பாத கல்வியாளர்களின் கருத்து

அண்ணா பல்கலையின் பருவத் தேர்வு வினாத்தாள் குளறுபடிகள் தொடர்பாக கேட்டபோது, சிலர் தன்னை அடையாளம் காட்ட தயங்கினார்கள். ஆனால், கருத்து சொல்ல தயங்கவில்லை. அப்படி அவர்கள் சொன்ன சில கருத்துகள் உங்கள் பார்வைக்கு… அண்ணா பல்கலையில் இன்றைக்கு இருப்பவர்களில் 90 சதவிகிதம்பேர் தகுதிவாய்ந்த நபர்கள் இல்லை என்பதே உண்மை. உயர்கல்வி மற்றும் பதவிகளைப் பணம் கொடுத்து வாங்கி பணியில் அமர்ந்துள்ளனர். அரசியல் தலையீடும் உள்ளது. எனவே, கல்வித்தரம் மற்றும் ஊழல், முறைகேடுகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். ஒரு நாட்டின் உயர்வு என்பது அந்நாட்டின் கல்வித்தரத்தில்தான் உள்ளது. அதற்கு அரசாங்கம்தான் தகுதிவாய்ந்தவர்களுக்கு மட்டும் வாய்ப்பளித்து கல்வித்துறையை சரிசெய்ய முடியும்.
 
- தோ.திருத்துவராஜ்.