இன்றைய...முதியோருக்கும்! நாளைய முதியோருக்கும்!



கவர் ஸ்டோரி

உலகளவில் 60 வயதுக்கு மேற்பட்டோர் 60 கோடி பேர் வரை உள்ளனர். இந்த எண்ணிக்கை 2025-ல் இரட்டிப்பாகி, 2050-ல் 200 கோடியைத் தாண்டிவிட  வாய்ப்புள்ளது. எனவே, இன்றைய முதியவர்களும், நாளைய முதியவர்களும் புரிந்துகொண்டு பின்பற்ற வேண்டிய சில முக்கியத் தகவல்கள் இங்கே...

* முதியோரைப் பொருளாதார ரீதியாக வஞ்சிப்பதைப் புரிந்துகொண்டு அதற்கு முடிவுகட்ட வேண்டும். வறுமை, பட்டினி, வீடிழப்பு, சுகாதார இழப்பு, நல்வாழ்க்கை  இழப்பு மற்றும் அகால மரணம் அடைய வழிகோலும் பொருளாதார மற்றும் பொருள் வஞ்சனையை உள்ளடக்கிய அனைத்து வகையான அவமதிப்புகளும்  இல்லாமல், தங்கள் முதுமைப் பருவத்தில் கண்ணியமான வாழ்க்கை வாழ்வது முதியோரின் உரிமை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

* வயது கூடும்போது உடல் உறுப்புகளின் இயக்கங்களில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த மாற்றங்கள் முதியோரின்  ஊட்டச்சத்து தேவைகளில் மாற்றத்தை  ஏற்படுத்துகின்றன. முதியோர் உடல்நலத்தோடும், சுறுசுறுப்போடும் இருப்பதற்கு சத்து நிறைந்த சமச்சீர் உணவை உட்கொள்ள வேண்டும். உணவில் பழங்கள்,  காய்கறிகள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வதோடு புரதம், உயிர்ச்சத்து, தாதுச்சத்து, நார்ச்சத்து நிறைந்த சமச்சீர் உணவை எடுத்துக்கொள்வது  அவசியம்.

* நம்பிக்கை தேவைப்படும் ஓர் உறவுக்குள் ஒரு தனி செயலாலோ, தொடர் செயலாலோ அல்லது போதுமான நடவடிக்கை இன்மையாலோ முதியோருக்கு  ஏற்படும் துன்பத்தை ‘முதியோர் அவமதிப்பு’ என்று உலக சுகாதார நிறுவனம் வரையறுக்கிறது. உடலியல், பாலியல், உளவியல் மற்றும் உணர்வியல்  அவமதிப்பு, பொருளியல், பொருள் சார் வஞ்சனை, கைவிட்டுவிடுதல், புறக்கணிப்பு, கடுமையான கண்ணியம் மற்றும் மரியாதைக் குறைவு போன்றவை முதியோர்  அவமதிப்பில் அடங்கும். இத்தகைய அவமதிப்புகள் யாவும் மனித உரிமை மீறல்களாக உள்ளது. எனவே, முதியோர்கள் உரிய மரியாதையுடன் நடத்தப்பட  வேண்டியது அவசியம்.

* எலும்புப் புரை மற்றும் எலும்பு முறிவைத் தடுக்கும் சுண்ணாம்புச் சத்து நிறைந்த பால் (கொழுப்பு நீக்கப்பட்டது), பச்சைக் கீரைகள், புரதச் சத்து நிறைந்த  பருப்புகள், முட்டை வெள்ளைக்கரு போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகள், இனிப்புகள், எண்ணெய்ப்  பலகாரங்கள், உப்பு ஆகியவற்றைக் குறைக்க வேண்டும். அதிக காரமான உணவுகள் மற்றும் துரிதவகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

* நீர்ச்சத்திழப்பு மற்றும் மலச்சிக்கலைத் தவிர்க்க அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். நீடித்த நோய் பாதிப்புடையவர்கள் மற்றும் நீண்டநாள் படுக்கையில்  இருப்போரின் உடல்நிலைகளுக்கு ஏற்ற உணவுகளை மருத்துவர் ஆலோசனைப்படி  எடுத்துக்கொள்வது நல்லது.

* மத்திய மற்றும் மாநில அரசுகள் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மூத்த குடிமக்களுக்குத் தனித்த, சிறப்பான,  விரிவான சுகாதாரப் பராமரிப்பை அளிப்பதே இந்த திட்டங்களின் அடிப்படை நோக்கமாக உள்ளது. உதாரணமாக தமிழ்நாடு அரசின் ஆதரவற்ற முதியோர்களுக்கான  முதியோர் உதவித்தொகை திட்டம், முதியோர் பஸ் பாஸ் திட்டம் போன்றவற்றைச் சொல்லலாம். முதியோர் பாதுகாப்பிற்காக இருக்கும் மூத்த குடிமக்கள்  பராமரிப்பு நலச்சட்டம் 2007 மற்றும் முதியோர்களை பாதுகாக்க உதவும் சிறப்பு திட்டம் போன்ற அரசின் நலத்திட்டங்கள், செயல்பாடுகள் பற்றி முதியவர்கள்  தெரிந்துகொள்வது அவசியம். விபரமறிந்த இளைஞர்கள் முதியவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேண்டும்.

* உடல் எடை குறைவதாலும், உடல் செயல்பாடுகள் குறைவதாலும் முதியவர்களுக்கு குறைந்த அளவு கலோரிகளே  தேவைப்படும். அவர்களுக்குப் பொதுவாக  பசியின்மை, திட உணவுகளை மென்று உண்ண முடியாதது போன்ற பிரச்னைகள் ஏற்படும். அதற்கு பழங்கள், காய்கறிகள் அடங்கிய மென்மையான உணவுகள்  மற்றும் திரவநிலை அல்லது கூழ்ம நிலையிலுள்ள உணவுகளை அவர்களுக்குக் கொடுக்கலாம். அவர்களுக்கான உணவு நன்றாக வெந்ததாகவும்,   மென்மையானதாகவும் இருப்பதோடு உப்பும், காரமும் குறைவாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.  முறையான இடைவெளியில் குறைந்த அளவில்  கூடுதல் முறை உணவு உட்கொள்ளலாம்.

* முதியவர்களுக்கு ஏற்படுகிற வயது தொடர்பான சிதைவு நோய்களை எதிர்கொள்ளவும், முதுமையை ஆரோக்கியமாகக் கழிப்பதற்கும் அவர்களுடைய உணவில்  சுண்ணாம்புச்சத்து, இரும்பு, துத்தநாகம், வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி  ஆக்சிடென்ட் போன்றவை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

* முதியவர்கள் தங்களின் ஆரோக்கியத் தேவைகளைப் புரிந்துகொண்டு நோய்த் தடுப்புக்கான பரிசோதனைகளைச் செய்து வர வேண்டும். ரத்த சர்க்கரை, ரத்த  அழுத்தம், உடல் எடை போன்றவற்றை முறையாக குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மேற்கொள்ள வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மருத்துவர்  ஆலோசனையின்றி நிறுத்தக்கூடாது. தேவைப்படும் சமயங்களில் முதியோர் நல மருத்துவர் அல்லது குடும்ப மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்று அதன்படி  நடக்க வேண்டும்.

* உடலுக்குப் போதுமான ஓய்வு கொடுப்பது அவசியம். ஓய்வு நேரங்களில் புத்தகம் வாசிப்பது, இசையை ரசிப்பது போன்ற பிடித்தமான பொழுதுபோக்குகளில்  ஈடுபடலாம்.

* தற்போதைய வேகமான, நவீன வாழ்க்கை முறையில் சமூகத்தின் வளர்ச்சிக்கு முதியவர்களின் பங்கு மிகவும்  முக்கியமானது. இப்போதைய இளைஞர்களின்  வளர்ச்சிக்கு அவர்களுடைய அனுபவமும், அறிவும் உறுதுணையாக  இருக்கும். அவர்களுடைய முழு பங்களிப்பு அனைத்துத் தலைமுறையினருக்கும் நல்ல  பலனைக் கொடுக்கும். எனவே, அவர்களுடைய உடல் மற்றும் மனநல ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது அவசியம்.

* சமூக, கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவது, பொறுப்புகளை ஏற்று குடும்பத்துக்கு உதவி செய்வது, குழந்தைகள்,  குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு  மகிழ்ச்சியாக இருப்பது போன்றவை முதியவர்களின் மனநல ஆரோக்கியத்திற்கு நல்லது.

* மூட்டு அசைவுகள் மற்றும் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது  நல்லது. அது உடல் வலிமை,  சமநிலை, நெகிழ்வுத் தன்மைகளைப் பேண உதவி செய்யும். தொடர் உடற்பயிற்சியின் மூலம்  சிதைவு நோய் ஆபத்துகளைக் குறைக்கலாம். காலை அல்லது  மாலை வேளைகளில் நடை, யோகா மற்றும் தியானப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

* மக்கள் நலப் பணிகளை செய்வதற்கும், பல்வேறு சாதனைகளைப் புரிவதற்கும் வயது ஒரு தடையல்ல. தங்களுடைய உடல் மற்றும்மனதை  ஆரோக்கியமாகவும், உறுதியாகவும் வைத்திருக்கும் நபர்கள் வயதானாலும் சாதிக்கலாம், வரலாற்றில் இடம்பெறலாம்.

தொகுப்பு : க.கதிரவன்