வெளியில் சாப்பிட போகிறீர்களா?!



Take Care

வெளியிடங்களில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்று தெரிந்தாலும் பலராலும் அதைத் தவிர்க்க முடிவதில்லை. தவிர்க்க முடியாத  சந்தர்ப்பங்களில் வெளியில் சாப்பிட நேரும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்...

மெனு கார்டைப் படியுங்கள்

மெனு கார்டில் உள்ள ஐட்டங்களை முழுமையாகப் படியுங்கள். அதிக எண்ணெய் அல்லது கொழுப்பு சேர்த்த உணவுகளாகத் தெரிந்தால் அவற்றைத் தவிருங்கள்.  நீங்கள் ஆர்டர் செய்யும் உணவுகள் எத்தனை கலோரிகள் கொண்டவை என்பதையும் ஆராயலாம். அந்த உணவு எப்படிப்பட்டது என்று கணிக்க முடியாத பட்சத்தில்  சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் கேட்டுத் தெளிவு பெறலாம். இதெல்லாம் சாத்தியமில்லை என்று நினைத்தால் ஏற்கனவே உங்களுக்குப் பரிச்சயமான,  ஆரோக்கியமானது என நீங்கள் நம்பும் உணவை ஆர்டர் செய்து சாப்பிடவும்.

சாப்பிடுவதற்கு முன் சாப்பிடுங்கள்

ஹோட்டலில் அல்லது பார்ட்டியில் சாப்பிடுவது என முடிவாகி விட்டதா? வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பே கொஞ்சம் நட்ஸ், பழங்கள் போன்று எதையாவது  சாப்பிட்டு விட்டுக் கிளம்புங்கள். வெளியிடத்தில் நீங்கள் உங்களையும் அறியாமல் அதிகம் சாப்பிடுவதை இது தடுக்கும். ஹோட்டல் அல்லது பார்ட்டியில் சூப்,  சாலட், கொண்டைக்கடலை அல்லது பழக்கலவை போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.

சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடியுங்கள்

அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும், எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைப்போரும் பின்பற்றும் பிரபலமான டெக்னிக் இது. சாப்பிடுவதற்கு சில  நிமிடங்களுக்கு முன்பாக ஒன்று அல்லது இரண்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். தண்ணீரில் கலோரி கிடையாது. ஆனாலும் அது வயிற்றை நிரப்புவதோடு குடலை  சுத்தப்படுத்தும் கிளன்சராகவும் செயல்படும்.

இனிப்புகளைத் தவிருங்கள்

ஃபுல் மீல்ஸ் அல்லது பஃபே சாப்பிட்டவுடன் கடைசியாக விதம்விதமான இனிப்புகளையும், ஐஸ்கிரீம் வகைகளையும் சாப்பிடுவது சில வருடங்களாக பழக்கத்தில்  இருக்கிறது. ஆனால், இது மிகவும் மோசமான ஒன்று. வயிறு நிறைய உணவு உண்ட பிறகு கூடுதலாக இனிப்பு மற்றும் ஐஸ்கிரீம் சாப்பிடுவது உடலில் வயிறு,  இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளைச் சுற்றி கொழுப்பு சேரக் காரணமாகிவிடும். எனவே, கூடிய வரையில் உணவுக்குப் பிறகு அல்லது உணவுடன் சேர்த்து  இனிப்புகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நாவை அடக்க முடியாது, இனிப்பு சாப்பிட்டே ஆக வேண்டும் என நினைப்பவர்கள் மெயின் கோர்ஸ்  உணவுகளைத் தவிர்க்கலாம்.

ஆப்பிள் சிடர் வினிகர் குடியுங்கள்

ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடியுங்கள். வெளியில் சாப்பிடப் போவதற்கு முன் இதை முயற்சி செய்தால்  உணவுகளின் மீதான தேடல் குறையும். ரத்த சர்க்கரை அளவையும் குறைப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.

பஃபே சீக்ரெட்ஸ்

பஃபே சாப்பிடச் செல்லும்போது சூப், ஸ்டார்ட்டரில் தொடங்கி பிறகு மெயின் கோர்ஸ்க்குச் செல்வது வழக்கம். ஸ்டார்ட்டரில் பெரும்பாலும் பொரித்த, வறுத்த  உணவுகள் அதிகம் இருக்கும். அதை அடுத்த மெயின் கோர்ஸிலும் கலோரி அதிகமான உணவுகள் அடுக்கப்பட்டிருக்கும். இவை எல்லாவற்றையும் ருசி பார்க்க  ஆசைப்பட்டு தட்டு நிறைய எடுத்து வந்து திணறத் திணற சாப்பிடுபவர்கள் பலர். இவற்றையெல்லாம் முடித்துவிட்டு கடைசியாக டெசர்ட் செக்ஷனுக்குச்  செல்வார்கள்.

இதைத் தவிர்க்க சாலட் வகைகளிலிருந்து உங்கள் பஃபேவைத் தொடங்கலாம். அதுவே ஓரளவு பசியை குறைத்து விடும். பிறகு கொழுப்பில்லாத ஆரோக்கியமான  உணவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து சாப்பிடலாம். இது எதுவுமே முடியாது என்பவர்கள் பஃபே சாப்பிட்ட அடுத்த சில வேளைகளுக்கு பச்சைக் காய்கறிகள்,  பழங்கள் என கலோரி குறைவான உணவுகளை சாப்பிட்டு ஏற்கனவே சாப்பிட்ட உணவுகளின் பாதிப்பிலிருந்து மீளலாம்.

உணவுடன் வேண்டாமே பானங்கள்

ஃபுல் மீல் சாப்பிட்டு முடித்த பிறகு சிலருக்கு காப்பியோ, டீயோ குடித்தால் தான் நிறைவு கிடைக்கும். இன்னும் சிலருக்கு உணவுடன் சேர்த்து கார்போனேட்டட்  பானங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு வழக்கங்களுமே தவறானவை. இவை இரண்டுமே நீங்கள் ஏற்கனவே உட்கொண்ட உணவுகளில் உள்ள  சத்துக்களை உடல் கிரகிக்க விடாமல் செய்து விடும். இவற்றிலுள்ள சர்க்கரை உடல் பருமனுக்கும் வழிவகுத்துவிடும். செரிமானத்திலும் பாதிப்பு ஏற்படும்.

- ராஜி