உங்கள் உரிமை என்ன?



அறிவோம்

வாழ்வதற்கான உரிமை உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் இருக்கிறது. ஒரு நாட்டின் குடிமக்களுக்கு அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் பல உரிமைகளை வழங்கியிருக்கிறது. அதன் அடிப்படையில் நோயாளிகளுக்கான உரிமைகள் என்னென்ன என்பதைத் தெரிந்து கொள்வதும் அவசியமே.  மருத்துவம் என்பது வணிகமாகி வரும் இச்சூழலில் மருத்துவமனைகள் சொல்வதை அப்படியே ஏற்று நடக்க வேண்டும் என்கிற நிலைதான் இங்குள்ளது.

உண்மையில் குறிப்பிட்ட பணி நேரத்துக்கு மருத்துவர் வரவில்லையெனில் கேள்வி எழுப்பும் உரிமை கூட நம் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால், அது குறித்த தெளிவு நம்மிடத்தில் இல்லாததால் நமது உரிமையை நாம் நிலைநாட்ட முற்படுவதில்லை. மக்கள் நலவாழ்வு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அமீர்கான் இது குறித்து விளக்குகிறார்.

நோயாளிகளுக்கான உரிமைகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை என எல்லாவற்றுக்கும் பொருந்தும். ஒரு மருத்துவமனையில் எவ்வளவு மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள்? எத்தனை செவிலியர்கள் இருக்கிறார்கள்? அம்மருத்துவமனை அரசிடமிருந்து எவ்வளவு நிதியைப் பெறுகிறது? தனியார் மருத்துவ
மனையாயின் அரசு உதவி பெறுகிறதா? இது போன்றவற்றைத் தெரிந்து கொள்வதற்கான உரிமை நோயாளிகளுக்கு இருக்கிறது.

இவ்விவரங்களை எழுதி மருத்துவமனையில் நோயாளிகளின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்கிற விதிமுறை இருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் இவ்விதி பின்பற்றப்படுகிறது. தனியார் மருத்துவமனைகள் பெரும்பாலும் இவ்விதியை பின்பற்றுவதில்லை. பொதுவாகவே மருத்துவமனையின் எந்த செயல்பாடு குறித்தும் தகவல் கோரும் உரிமை
நோயாளிக்கு உண்டு.

இந்திய மருத்துவத் தரக்கட்டுப்பாடு மருத்துவமனைகளுக்கான பல விதிமுறைகளை விதித்துள்ளது. அதாவது, எத்தனை மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்பது தொடங்கி எத்தனை துடைப்பங்கள் இருக்க வேண்டும் என்பது வரையிலும் சுகாதார விதிமுறைகளை விதித்துள்ளது. அந்த விதிகளை மருத்துவமனை பின்பற்றாவிட்டால் அதை எதிர்த்து கேள்வி கேட்பதற்கு நோயாளிகளுக்கு உரிமை இருக்கிறது.

நோயாளிகளின் உரிமைகள் மற்றும் நலனைப் பேணுவதன் அடிப்படையில் பொதுமக்கள் அங்கம் வகிக்கும் நோயாளிகள் நலச்சங்கம் அனைத்து மருத்துவமனைகளிலும் இருக்க வேண்டும். தனியொரு மனிதராக இருப்பதை விட அமைப்பாக இணையும்போது உரிமைகளைப் பெற முடியும். இன்றைக்கு அரசு மருத்துவமனைகள் எல்லாவற்றிலும் நோயாளிகள் நலச்சங்கம் இருக்கிறது. அதன் மூலம் முக்கியமான தினங்களில் நோயாளிகள் குறை கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பெரும்பான்மையான தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் நலச்சங்கம் இல்லை. சில மருத்துவமனைகளில் இருந்தாலும் அவை பெயரளவில் மட்டுமே இருக்கின்றன.

அரசு மருத்துவமனைகளைக் காட்டிலும் தனியார் மருத்துவமனைகளில்தான் அதிக அளவில் விதிமுறை மீறல்களும் சுரண்டலும் நடைபெறுகின்றன. சாதாரண தலைவலி என்று சென்றால் கூட தேவையற்ற பரிசோதனைகளை எல்லாம் மேற்கொள்ள வைத்து நோயாளியிடமிருந்து பணத்தைச் சுரண்டுகின்றனர். நோயுற்றவர் தனது உடல்
நலமடைவதைத் தவிர வேறு எதைப் பற்றியும் யோசிக்க முடியாத மனநிலையை, இவர்கள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்நிலையில், தனது பிரச்னைக்கும் இந்த பரிசோதனைக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி கேட்கும் உரிமை நோயாளிக்கு இருக்கிறது.

அப்படி கேள்வி கேட்கும் நிலையில், ‘எங்களுக்குத் தெரியாதா?’ என்றெல்லாம் அலட்சியப்படுத்தக் கூடாது. மருந்து நிறுவனங்களுடன் கூட்டிணைந்து கொண்டு நோயாளிக்கு அதிக விலை மருந்துகளை எழுதித்தருவது கூட விதிமுறை மீறலே. அரசு உதவி பெற்று தொடங்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் பத்து சதவிகிதம் பேருக்கு இலவசமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற விதி இருக்கிறது. எத்தனை தனியார் மருத்துவமனைகளில் இது உண்மையாக நிறைவேற்றப்படுகிறது?

மருத்துவம் மிகப்பெரிய வணிகத்தளமாவதைத் தடுக்க வேண்டும். இந்திய அரசு மருத்துவத் துறையில் மிகவும் பின்தங்கியிருக்கிறது. தனியார் மருத்துவமனைகளின் துணை இல்லாமல் எல்லோருக்கும் மருத்துவத்தை வழங்கிவிட முடியாது என்கிற நிலையே இன்னும் நீடிக்கிறது. இதன் காரணமாகத்தான் தனியார் மருத்துவமனைகளின் விதிமீறல்களைக் கூட அரசு பொருட்படுத்துவதில்லை. அரசு தனது மக்களின் கல்விக்கும் மருத்துவத்துக்கும் உறுதியளித்து விட்டால், மற்ற எல்லாவற்றுக்கும் வரி உயர்த்தினாலும் அதிக சுமையாக இருக்காது. கல்வி உரிமைச் சட்டம் போல மருத்துவ உரிமைச் சட்டமும் கொண்டு வரப்பட வேண்டும்.

மருத்துவத்தை உரிமையாக்கும்போது எந்த ஒரு குடிமகனுக்கும் எவ்வித மருத்துவத் தேவை ஏற்பட்டாலும் அதற்கு அரசு முழுப்பொறுப்பேற்றுக் கொள்ளும். அப்படி இல்லாத சூழ்நிலையில் குறைந்தபட்ச நடவடிக்கையாக கல்விக்கு கட்டண நிர்ணயம் செய்திருப்பதைப் போல மருத்துவத்துக்கும் கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போதுதான் மருத்துவம் என்கிற பெயரில் நடக்கும் சுரண்டல்களைத் தடுக்க முடியும்’’ என்கிறார் அமீர்கான்.

நோயாளிகளுக்கான சட்டங்கள் குறித்து விளக்குகிறார் வழக்கறிஞர் விஜயன்.‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டம், நுகர்வோர் சட்டங்கள், குடிமைச் சட்டங்கள், மனித உரிமைச் சட்டங்கள் ஆகிய எல்லாவற்றிலும் நோயாளிகளுக்கான சட்டங்கள் இடம்பெற்றுள்ளன. வாழ்வதற்கான உரிமையில் கண்ணியமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கு உடல், மனம், சமூகம், சுற்றுப்புறச்சூழல் ஆகியவை ஆரோக்கியமான சூழலோடு இருக்கவேண்டும் என்பதை சட்டம் முன்மொழிகிறது. தனிமனித உரிமைகளில் நலவாழ்வுக்கான உரிமையில் உடல்நலம் வருகிறது. நோயுற்றவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்களை பொருட்
படுத்த வேண்டும் என சட்டம் சொல்கிறது.

நோயாளியின் நோய், சிகிச்சை பற்றிய விவரங்களை நோயாளியைத் தவிர்த்து யாரிடமும் தெரியப்படுத்தாமல் ரகசியம் காப்பாற்றப்பட வேண்டும். உதாரணத்துக்கு எய்ட்ஸ் நோயாளிகளுக்கான கூட்டங்கள் நடக்கும் நிலையில் நோயாளிகள், மருத்துவர்களைத் தவிர வேறு யாரையும் அனுமதிக்கக் கூடாது. விபத்தோ, கொலை முயற்சியோ - காரணம் எதுவாக இருந்தாலும் அவசர சிகிச்சை அளிக்க வேண்டும். சிகிச்சைக்குப் பிறகுதான் காவல்துறையின் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எலிகளுக்கு மருந்தைச் செலுத்தி சோதனைக்கு உட்படுத்துவது போல எந்த ஒரு மனிதரையும் கட்டாயப்படுத்தி சோதனைக்குட்படுத்துவது மனித உரிமைக்கு எதிரானதும் சட்டப்படி தவறானதும் கூட. தவறான சிகிச்சைகள் மேற்கொண்டு அதனால் நோயாளி பாதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட எந்த மருத்துவமனையாக இருந்தாலும் சட்டரீதியில் வழக்குத் தொடர்ந்து இழப்பீடு பெற்றுக் கொள்ள முடியும்’’ என்கிறார் விஜயன்.

நோயாளிகளின் உரிமையை நிலை நாட்ட வேண்டுமெனில் மருத்து வர்களும் சரியான முறையில் தங்களது கடமைகளை மேற்கொள்ள வேண்டும். நோயாளிகளின் உரிமையோடு மருத்துவர்களின் கடமை குறித்தும் பேசுகிறார் மருத்துவர் ரவீந்திரநாத்.‘‘நோயாளிகளின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் ஆசிரியராக மருத்துவர்கள் செயல்பட வேண்டும். ஒரு நோயாளியை பரிசோதித்து அவரது நோய் மற்றும் அவருக்கு அளிக்கப்படவிருக்கும் சிகிச்சை குறித்து தெளிவாக விளக்க வேண்டிய கடமை மருத்துவருடையது. தனக்கு அளிக்கப்படவிருக்கும் சிகிச்சையை மறுக்கும் உரிமை நோயாளிக்கு இருக்கிறது.

அதனால் யாரையும் கட்டாயப்படுத்தி சிகிச்சைக்கு உட்படுத்த இயலாது. நோயாளிக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை, பரிசோதனைகள் குறித்த ஆவணங்களின் நகலை ஒப்படைக்க வேண்டியதும் கட்டாயம். நோயாளியின் நோய் மற்றும் சிகிச்சை குறித்து ரகசியம் காப்பாற்றுவதில் மருத்துவர்கள் முனைப்பு காட்ட வேண்டும். மருத்துவத் தொழில்நுட்பங்களைக் கொண்டு நோயாளிக்கு ஏற்ற சிகிச்சையை வழங்கி குணமாக்குவது மருத்துவர்களின் அடிப்படைக் கடமை. வேறொரு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை புரிய பரிந்துரைக்கும் நிலையில், என்ன காரணம் என்பதை மருத்துவர்கள் விளக்க வேண்டும்.

எந்த மருத்துவமனையில், எந்த மருத்துவ முறையில், எந்த மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்வது என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமை நோயாளிகளுக்கு இருக்கிறது. சிகிச்சையோடு, பொதுவான சுகாதார நடவடிக்கைகள் குறித்தான ஆலோசனைகளை வழங்குவதும் மருத்துவரின் கடமையே’’ என்கிறார் ரவீந்திரநாத்.விழிப்படைவோம்... உரிமையை நிலைநாட்டுவோம்!நோயாளிகளின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் ஆசிரியராக மருத்துவர்கள் செயல்பட வேண்டும்.

 - கி.ச.திலீபன்