டியர் டாக்டர்



சூரிய நமஸ்காரம் என்ற உடலுக்கும் உள்ளத்துக்கும்புத்துணர்வு தரக்கூடிய யோகா வழிமுறைகளை, யோகா ஆசிரியர் ராமகிருஷ்ணன் விளக்கிய விதம் எளிமையாகவும்,அனைவருக்கும் ஏற்றதாகவும் இருந்தது.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘சாகா வரம் சாத்தியமா?’ என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், டாக்டர் வி.ஹரிஹரன் கூறியுள்ள அனைத்துத் தகவல்களும் ஆச்சரியத்தை அளிக்கின்றன.
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.

குழந்தை பிறந்த பெண்களுக்கு அவர்களது வயிற்றில் உண்டாகிற தழும்புகளை நீக்குவதாக விளம்பரப்படுத்தப்படுகிற க்ரீம் மற்றும் லோஷன்களால் எந்தப் பயனும் இல்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்கியது டாக்டர் நிவேதிதாவின் கட்டுரை.
 - பிரியதர்ஷிணி, கன்னியாகுமரி.

அமிதாப் பச்சனுக்கும் தாலசிமியா என்கிற தகவல்அதிர்ச்சியையும், அதே நேரத்தில் ஆறுதலையும் தந்தது.சாதனைக்கு இந்தப் பிரச்னை தடையல்ல என்பதை உணர்த்தியமைக்கு நன்றி.  நெருங்கிய உறவு திருமணங்களைத் தவிர்ப்பதும், கர்ப்பிணிகள் மூன்றாவது மாதத்திலேயே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்வதும்தான் முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் என்று எடுத்துரைத்தமைக்கும் நன்றிகள்.
- உஷா நடராஜன், கரூர் மற்றும் பர்வீன், ஆத்தூர்.

முதியவர்களைத் தாக்கும் அல்சீமர் நோயைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக அலசியதுடன், குடும்பத்தாருக்கான அவசிய அறிவுரைகளையும் சொல்லி, முதியவர்களை குழந்தைகளைப் போல நடத்தச் சொல்லி கண்களைத் திறந்திருக்கிறார் டாக்டர் வி.எஸ்.நடராஜன்.
- டி.பாண்டியராஜன், மதுரை.

பெயரைக் கேட்டாலே நாக்கில் எச்சில் சுரக்கும் ‘பிஸ்கெட்’ டுக்கு இப்படி ஒரு தடா போடுவீர்களா! அட்டைப் படக் கட்டுரையை  படித்து முடித்தபின் சப்த நாடியும் பயத்தால் ஒடுங்கியே விட்டது. ‘நாம் மாற வேண்டிய நேரம் இது’ - என்ற பஞ்ச் வரி கவனிக்க வேண்டிய விஷயம்! ‘என்ன நடக்கிறது பிரேதப் பரிசோதனையில்’ கட்டுரை நல்ல விளக்கம்!
- சிம்மவாஹினி, சுகந்தி நாராயண், வியாசர் காலனி.

எனது பேரன், பேத்திக்கு செல், லேப்டாப் கிடைத்தால் போதும். சாப்பாடு, தூக்கம் எதுவுமே வேண்டாம்.  டாக்டர் முருகன், டாக்டர் மோகன் வெங்கடாசலபதியின் கருத்துகளைப் படிக்கச் சொன்னேன். புரிந்து கொண்டனர்.பிரேதப் பரிசோதனை என கத்தியை கொண்டு பல இடங்களில் வெட்டுவார்கள், அதையும் இதையும் எடுப்பார்கள் என நினைத்தேன். டாக்டர் வினோத் பிரேதப் சோதனையில் மூன்று வகை உள்ளதையும், அதைச் செய்யும் முறைகளையும் இதுவரை அறியாதவர்களுக்கும் அழகாகப் புரிய வைத்துவிட்டார். நன்றி குங்குமம் டாக்டர்!
- எஸ்.துரைசிங் செல்லப்பா,  உருமாண்டம்பாளையம், கோவை.