வெயில் கால உபாதைகள் - கவனிக்க தவறாதீர்கள்!



கோடை வந்தாலே வெயிலின் கொடூரக் கோரத்தாண்டவம் தொடங்கிவிடும். குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் வெயிலின் உக்கிரத்தில் தவிக்க, வெளியே சென்று அலைந்து திரிந்து வேலை செய்ய வேண்டிய நிலையில் இருப்பவர்கள் இந்தக் கோடையை எப்படி சமாளிப்பது என்று மருகுவார்கள்.

காக்கா, குருவிகளையும் கால்நடைகளையும் வருத்தும் இந்தக் கோடையை தனக்கென ஒரு தனித்துவமான வாழ்வியல் முறை அமைத்துக்கொண்ட மனிதன் எதிர்கொள்வது அத்தனை எளிதல்ல. சில ஆரோக்கியமான விஷயங்களை செயல்படுத்தினால் கோடையின் வெக்கையை வெயிலின் வெம்மையை எளிதாக வெல்லலாம். அவை என்னென்ன என்று பார்ப்போம்.

கோடை காலத்தில் நம்மையும், நம் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதுகாத்துக்கொள்ளுதல் அவசியம்தான். ஏன் என்றால் கோடை காலம் சில உடல் உபாதைகளையும் ஏற்படுத்தக்கூடியதுதான். 
அதில் முக்கியமானவை மற்றும் நாம் கவனம் செலுத்த தவறக்கூடியவை வெப்ப அழுத்தம் (Heat stroke) மற்றும் உடல் நீர் குறைபாடு (Body Dehydration). இந்த இரண்டு வெப்பம் சார்ந்த நோய்களுக்கும் சரியான  முன் எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால், இவை நம் உயிருக்கு கூட ஆபத்தாக மாறலாம்.

நீர் குறைபாடு என்றால் என்ன?

நீர் குறைபாடு (Dehydration) என்பது அதிக வெயில் காலத்தில் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து  உடலுக்கு  ஏற்படும் ஆபத்தான நிலை. சிறிய குழந்தைகள் மற்றும் 60-க்கு மேற்பட்டவர்கள் அதிக ஆபத்துக்கு உள்ளாகின்றனர்.

ஏன் நீர் குறைபாடு ஏற்படுகிறது?

நம் உடல் வழக்கமாக வியர்வை, மூச்சு, கண்ணீர், சிறுநீர் மற்றும் மலத்தின் மூலம் தண்ணீரை இழக்கிறது. இந்த இழப்பை நாம் தண்ணீர் குடித்து, நீர் கொண்ட உணவுகளை உண்டு சமநிலைப்படுத்த வேண்டும். அதிக வெப்ப காலங்களில் இதை நாம் கடைபிடிக்கத் தவறினால், நம் உடலில் போதிய தண்ணீர் இல்லாமல், நீர் குறைபாடு ஏற்படுகிறது.

நீர் குறைபாடு அறிகுறிகள்

தாகம், குறைந்த சிறுநீர், உலர்ந்த தோல், சோர்வு, மயக்கம், உள்ளுணர்வு குறைதல், வாய் உலர்வு, விரைவான இதயத்துடிப்பு.குழந்தைகளில் கண்ணீர் இல்லாத அழுகை, உலர்ந்த வாய், வயிறு மற்றும் கண்கள் உட்பட்ட நிலை, சோகமாக இருப்பது போன்ற அறிகுறிகள் வரலாம்.

நீர் குறைபாடு சிகிச்சை

லேசான நிலைதான் என்றால், தண்ணீர் மற்றும் ஓ.ஆர்.எஸ் (ORS) மூலம் வீட்டு சிகிச்சை செய்யலாம். மிதமான நிலைக்கு அடிப்படை மருத்துவமனை சிகிச்சை தேவைப்படலாம். கடுமையான நிலையை மருத்துவ அவசரமாக கருதி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தேவை.

தடுப்பது எப்படி?

அதிக வெப்பம் உள்ள நேரங்களில் அதிக தண்ணீர், மோர், பழச்சாறு, கரும்புப்பால், கம்பங்கூழ் போன்றவை உட்கொள்ளவும். உடற்பயிற்சி குளிர்ந்த நேரங்களில் செய்யவும். குழந்தைகளை வெயில் நேரங்களில் வெளியே அழைத்துச் செல்லக் கூடாது.

வெப்ப அழுத்தம் (Heat Stroke) என்றால் என்ன?

நீண்ட நேரம் வெயிலில் இருந்து, உடல் வெப்பம் அதிகரித்து, அதனால் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான நிலை. முதியோர், குழந்தைகள், வெளியில் வேலை செய்யும் நபர்கள் அதிக
ஆபத்துக்குள்ளாகிறார்கள்.

வெப்ப அழுத்த அறிகுறிகள்

தலைவலி, குழப்பம், திடீர் சோர்வு, மயக்கம், வலிப்பு வெப்பமான உலர்ந்த தோல்,  வேகமான இதயத் துடிப்பு.

வெப்ப அழுத்த சிகிச்சை

வெயிலிலிருந்து நிழலுக்குக்  சென்று உடலை குளிர்விக்கவும். துணியை நீரில் நனைத்து அழுத்தி உடலைத் துடைக்கலாம். சிறிய ஐஸ் பேக்  பயன்படுத்தலாம். உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவதும் சிலருக்கு  அவசியம்.

வெப்ப அழுத்தத் தடுப்பு முறை

வெயிலில் அதிக நீர் குடிக்கவும். இலகுவான, பருத்தி துணிகள் அணியவும். அதிக வெப்பம் உள்ள நாட்களில் வெளியில் செல்லும் நேரத்தைக் குறைக்கவும். குழந்தைகளை மதிய நேரங்களில் வெளியே அனுப்பக்கூடாது.

கோடை காலங்களில், வரும் முன் காத்தல் மிகவும் அவசியமாகும். போதிய நீர் பருகுதல் (குறைந்தது 3 - 4 லிட்டர்), நீர்ச்சத்து மிகுந்த தர்பூசணி, வெள்ளரி, முலாம்பழம், ஆரஞ்சு, மோர், கரும்பு பால், பழச்சாறு போன்ற ஆகாரங்களை எடுத்துக்கொள்வதன் மூலம், நம்மையும், நம்மைச் சுற்றிய பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை நாம் கோடை கால உபாதைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

- ஸ்ரீதேவி குமரேசன்