ஆரோக்கியமான குடல்… அற்புதமான வாழ்க்கை!



உண்ணும் உணவை உடலில் சேர்ப்பதில் இரைப்பை மற்றும் குடலுக்கு முக்கியப் பங்கு உள்ளது. மனிதன் உடலின் அரைவை நிலையங்கள் எனப்படும் இந்த அற்புத உறுப்புகள் மனிதனுக்குச் செய்யும் நற்காரியங்கள் பல. நவீன மருத்துவம் வயிற்றுக்கும் மூளைக்கும் தொடர்புண்டு என்று சொல்கிறது. ஆரோக்கியமான வயிறுதான் ஆரோக்கியமான மூளையின் வழிமுறை.

ஆரோக்கியமான மூளைதான் அற்புதமான வாழ்வின் வழிமுறை. எனவே, வயிறை வளர்ப்பதில் தவறே இல்லை. வயிறை வளர்ப்பது என்றால் கண்டதையும் உண்டு தொப்பை பெருத்து கஷ்டப்படுவது அல்ல. உண்ண வேண்டியவற்றை உரிய முறையில் உரிய நேரத்தில் உண்டு ஆரோக்கியமாக வயிற்றை வைத்துக்கொள்வதுதான். 

வயிற்றை எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்று இரைப்பை மற்றும் குடலியல் அறுவைசிகிச்சை நிபுணர் ஜே.எஸ்.ராஜ்குமார் அவர்களிடம் கேட்டோம். அவர் சொன்ன ஆலோசனைகள் இதோ…‘நான் எனது 40 வருட அனுபவத்தில் இருந்து கூறுகிறேன் குடல் என்பது வெறும் செரிமான உறுப்பு மட்டுமல்ல; அது நமது நோய் எதிர்ப்பு சக்தி, சுறுசுறுப்பு, மனத் தெளிவு ஆகியவற்றையும் பாதிக்கிறது.

வயதாக ஆக, பலருக்கு அமில எதுக்களிப்பு (Acid Reflux), வயிற்று உப்புசம் (bloating) மலச்சிக்கல் (constipation) போன்ற செரிமான பிரச்னைகள் வருகின்றன. ஆனால், வயதாவதால் இந்த பிரச்னைகள் வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சில எளிய வாழ்வியல் மாற்றங்கள் செய்வதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

ஏன் குடல் ஆரோக்கியம் முக்கியம்?

நமது குடலில் பல டிரில்லியன் நுண்ணுயிரிகள் உள்ளன. இவை உணவை செரிக்கவும், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும், நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தவும் உதவுகின்றன. இந்த நுண்ணுயிரிகளின் சமநிலை குலைந்தால், செரிமானக் கோளாறு, சோர்வு, நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு போன்றவை ஏற்படும்.

பல நோயாளிகள் என்னிடம் கேட்பது ‘‘டாக்டர், சாப்பிட்ட பிறகு வயிறு உப்புசம், செரிமானம் மெதுவாக இருப்பது ஏன்?” வயதாகும்போது செரிமானம் மந்தமாவது இயல்பு. ஆனால், சிறிய வாழ்க்கை முறை மாற்றங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்!

குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் விஷயங்கள்

1. நார்ச்சத்து நிறைந்த உணவை உண்ணுங்கள். நார்ச்சத்து செரிமானத்துக்கும் குடல் பாக்டீரியாவுக்கும் முக்கியம்.

- முழு தானியங்கள் (ஓட்ஸ், பிரவுன் ரைஸ், முழு கோதுமை ரொட்டி)
- பழங்கள் (ஆப்பிள், வாழை, பேரிக்காய்)
- காய்கறிகள் (கீரை, கேரட், ப்ரோக்கோலி)
- பருப்பு வகைகள் (பயறு, கொண்டைக்கடலை, பீன்ஸ்)
- கொட்டைகள் மற்றும் விதைகள் (ஆளி விதை, சியா விதை)
இவற்றை உணவில் சேர்க்கவும்.

2. புரோபயாடிக்ஸ் மற்றும் ப்ரீபயாடிக்ஸ் சேர்க்கவும்.

புரோபயாடிக்ஸ் (தயிர், புளித்த உணவுகள்) நல்ல பாக்டீரியாவை அறிமுகப்படுத்தும்; ப்ரீபயாடிக்ஸ் (பூண்டு, வெங்காயம், வாழை) அவற்றுக்கு உணவாகும்.

3. சீரான நீர்ச்சத்து.

செரிமானத்துக்கு உதவவும் மலச்சிக்கலைத் தடுக்கவும் தினமும் குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள்.

4. மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள்.

மன அழுத்தம் செரிமானத்தைப் பாதிக்கும். தியானம், ஆழ்ந்த சுவாசம், அல்லது நடைப்பயிற்சி போன்றவை மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.

5. உடற்பயிற்சியைத் தவறாமல் செய்யுங்கள்.

30 நிமிட நடைப்பயிற்சி, யோகா, அல்லது அல்லது கை கால்களை நீட்டி மடக்குதல், செரிமானத்தை சீராக வைக்கும்.

6. பதப்படுத்தப்பட்ட மற்றும் சர்க்கரை உணவுகளைத் தவிர்க்கவும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் குடல் பாக்டீரியாவை பாதிக்கும். வீட்டில் சமைத்த, சமச்சீர் உணவைத் தேர்ந்தெடுங்கள்.

7. தூக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

நல்ல தூக்கம் செரிமானத்தை மேம்படுத்த தினமும் சரியான நேரத்தில் தூங்குங்கள், படுப்பதற்கு முன் அதிக உணவு உட்கொள்வதை தவிர்க்கவும்.

8. தவறாமல் மருத்துவப் பரிசோதனை செய்யுங்கள்.

வழக்கமான பரிசோதனைகள் குடல் பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிய உதவும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

ஆரோக்கியமற்ற குடலின் அறிகுறிகள்

*அடிக்கடி வயிறு உப்புசம் அல்லது வாயு பிரச்னை
*மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு
*அமில ரிஃப்ளக்ஸ் அல்லது நெஞ்செரிச்சல்
*விவரிக்க முடியாத சோர்வு
*நோய் எதிர்ப்பு சக்தி குறைவு

இந்த அறிகுறிகள் இருந்தால், குடல் ஆரோக்கியத்தை உடனே கவனியுங்கள்!”

இரைப்பை, குடலியல் நிபுணர் ஜே.எஸ்.ராஜ்குமார்