காசநோய் காரணமும் தீர்வும்!



உலக அளவில் தொற்றுநோயான காசநோய் குறித்தும், அதை ஒழிப்பதற்கான முயற்சிகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் மார்ச் 24-ம்தேதி உலக காசநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 
காசநோயால் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் மற்றும் சமூக விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்த நோயை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வரவே இந்த தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. 
அந்தவகையில், இந்தியாவில் காசநோயை ஒழிக்க ஆரம்ப நிலை நோய் கண்டறிதல் அவசியம் என்கிறார் நுரையீரல் சிறப்பு நிபுணர், மருத்துவர் கே. ராஜ்குமார். அவர் மேலும் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

காசநோய் என்பது ஒரு பாக்டீரியா தொற்று. இது முதன்மையாக நுரையீரலைப் பாதிக்கிறது. இருப்பினும் இது மூளை, முதுகெலும்பு மற்றும் சிறுநீரகங்கள் போன்ற உடலின் பிற பாகங்களையும் பாதிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. காசநோய் உள்ள ஒருவர் இருமல், தும்மல் போன்ற செயல்களைச் செய்யும்போதோ அல்லது பேசும்போதோ காற்றின் மூலம் மற்றொருவருக்கும் இது பரவுகிறது. 

உலக சுகாதார அமைப்பு தகவலின்படி, உலக அளவில் ஏற்படும் மரணங்களில் முதல் 10 காரணங்களில் ஒன்றாக காசநோய் இன்றும் உள்ளது. மேலும் எய்ட்ஸ் நோய் இறப்புகளைவிட, இதனால் ஏற்படும் இறப்புகள் அதிக அளவில் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. இருப்பினும், இந்த நோய் உருவாகுவதற்கான காரணங்களில் உள்ள பல்வேறு நுட்பமான விஷயங்கள் மற்றும் இதன் சிக்கலான தன்மை உள்ளிட்ட சமூக காரணிகளைக் கருத்தில் கொண்டு இதை ஒழிப்பதற்கு நீண்ட மற்றும் நீடித்த முயற்சி மிகவும் அவசியமாக உள்ளது.

இந்த அறிக்கையின்படி, உலகில் உள்ள காச நோயாளிகளில் 26 சதவீதம் பேர் இந்தியாவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. 1 லட்சம் பேரில் 195 பேர் என்ற விகிதத்தில் இது உள்ளது. மொத்தம் 27.62 லட்சம் பேருக்கு காச நோய் உள்ள நிலையில் இதுவரை 25.52 லட்சம் பேர் மட்டுமே தங்களை பதிவு செய்துள்ளனர்.

இந்த அடையாளப்படுத்தப்படாத நோயாளிகள் காசநோய் பரவுவதற்கும், நோய் மற்றும் இறப்புகளுக்கும் காரணமாக உள்ளனர். சந்தேகிக்கப்படும் காசநோய் நோயாளிகளில் 21 சதவீதம் பேர் மட்டுமே நியூக்ளிக் அமில பெருக்க சோதனை மூலம் பரிசோதிக்கப்பட்டனர், அதே நேரத்தில் 79 சதவீதம் பேர் நுண்ணோக்கி மூலம் பரிசோதிக்கப்பட்டனர். 

நுண்ணோக்கி மூலம் சில குறிப்பிட்ட அதாவது குறைவான பாக்டீரியாக்கள் உள்ள சந்தர்ப்பங்களில் (எச்.ஐ.வி-பாசிட்டிவ் நோயாளிகள் அல்லது குழந்தைகள் போன்றவர்கள்) குறைந்த உணர்திறன், மருந்து-எதிர்ப்பு விகாரங்கள் குறித்து கண்டறிய முடியாது, மேலும் இதை திறமையான தொழில்நுட்ப வல்லுனர்கள் மட்டுமே கையாள முடியும்.

எனவே இது துல்லியமான நோயறிதலுக்கு நம்பகத்தன்மையற்றதாக உள்ளது. காசநோயை கண்டறிவது என்பது மிகவும் சவாலான நடைமுறையாக உள்ளது. அத்துடன் அவர்களுக்கான மருந்து விதிமுறைகள் சிக்கலானவை மற்றும் நோயாளிகள் கண்காணிப்பும் மிகவும் முக்கியமாகும். 

கண்டறியப்படாத காசநோயாளிகள், சுகாதாரப் பாதுகாப்பு உள்கட்டமைப்பு இல்லாமை, காசநோய்க்கான சிகிச்சைகளை பெறுவதிலான சிக்கல்கள் ஆகியவையும் இந்த நோய் குறித்து மிகுந்த கவலை அளிக்கிறது.

இது குறித்து விழிப்புணர்வைப் ஏற்படுத்துவதன் மூலம், இதன் காரணமாக அதிக ஆபத்தில் உள்ளவர்கள் சிகிச்சை பெற உதவும். மேலும், காசநோய் குறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்தவும், தடுப்பூசி, ஆரம்பகால நோயறிதல் மற்றும் சரியான சிகிச்சை போன்ற தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் பொது சுகாதார பிரச்சாரங்களை நாம் அதிகரிக்க
வேண்டும்.

இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல், மாலையில் உடல் வெப்பநிலை அதிகரிப்பு, எடை இழப்பு, பசியின்மை மற்றும் சளியில் ரத்தம் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் ஆகும். இதற்கு தடுப்பூசி போட்டுக் கொண்டால், இந்த நோயை ஒழிக்க முடியும், மேலும் நாம் அனைவரும் ஒன்றாக, காசநோயை முடிவுக்குக் கொண்டுவரலாம்.

உலக காசநோய் தினம் நமக்கும் உலக சமூகத்துக்கும் ஒரு முக்கியமான நாள் ஆகும். காசநோயால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, இந்த நோயை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் நாள் இது. காசநோயை ஒழிப்பதற்கான உலகளாவிய முயற்சியில் நாமும் பங்கெடுப்பது குறித்து பெருமிதம் கொள்வோம்.

- ஸ்ரீதேவி குமரேசன்