மூளைக்குப் பரிசு!



நோபல்

‘பாதைகளையும் இடங்களையும் மூளை எப்படி அடையாளம் கண்டுகொள்கிறது? இப்படித்தான்’ எனத் துல்லியமான ஆராய்ச்சி முடிவுகளை வழங்கிய நார்வே தம்பதிக்குத்தான் இந்த ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு!

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தம்பதி மேபிரிட் மோசர் - எட்வர்ட் ஐபிரிட் மோசர், 2005ம் ஆண்டு முதல் இது பற்றி ஆய்வு செய்து வந்தனர். இவர்களுக்கு முன்னதாக, 1971லேயே அமெரிக்க மருத்துவர் ஜான் ஓ கீஃபே, இந்த பாதைகள் குறித்த விவரத்தை ஓர் ஆய்வில் கண்டுபிடித்திருந்தார்.

மூளையிலுள்ள ஹிப்போகேம்பஸ் பகுதிதான் இடத்தை நினைவில் வைத்துக் கொள்கிறது என்பதை, எலிகள் ஓர் அறையிலிருந்து இன்னோர் அறைக்கு சென்று திரும்புவதைக் கொண்டு நிரூபித்திருந்தார்.

ஜான் ஓ கீஃபேவின் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டே மோசர் தம்பதி, இன்னும் பல நுணுக்கமான உண்மைகளைக் கண்டுபிடிப்பதற்காக ஆய்வு செய்தனர். ‘ஹிப்போகேம்பஸில் இருக்கும் Place cells என்கிற ‘இடம் அறியும் அணுக்கள்’தான் தகவல்களைப் பதிந்து வைத்துக் கொள்கின்றன’ என்று ஜான் ஓ கீஃபே
குறிப்பிட்டிருந்தார்.

மோசர் தம்பதியின் ஆய்வில், மூளையில் இருக்கும்  நிக்ஷீவீபீ நீமீறீறீs என்ற மற்றொரு வகை செல்களும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதை அறிந்துள்ளனர். அதாவது, இந்த இரண்டு வகை செல்களும் ஒருங்கிணைந்துதான் பாதைகள், இடங்கள் போன்றவற்றை நினைவில் வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது நமக்குத் தகவல்களைத் தருகின்றன என்று ஆய்வை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். 

இந்த விருது, நோபல் பரிசை உருவாக்கிய ஆல்பர்ட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10 அன்று வழங்கப்பட இருக்கிறது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடக்கும் விழாவில் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.6.76 கோடி) பரிசு வழங்கப்பட உள்ளது. இந்தத் தொகை மருத்துவர் ஜான் ஓ கீஃபேக்கும் மோசர் தம்பதிக்கும் பாதிப்பாதியாக அளிக்கப்படும். ‘‘ஒரு சாமானியனாகவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும் கண்டுபிடிப்பு இது!

ஒரு கணிப்பொறி செயல்படுவதற்குக் கூட மின்சாரம் உள்பட பல்வேறு விஷயங்கள் தேவை. ஆனால், மூளை எப்படி சூப்பர் கம்ப்யூட்டராக செயல்படுகிறது என்பதையெல்லாம் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து கொண்டே தான் இருக்கிறார்கள். அவற்றில் ஒரு பகுதியாக, செல்போனில் இருக்கும் ஜி.பி.எஸ். போல, இடங்களை மூளை எப்படி கண்டுகொள்கிறது என்பதை 3 மருத்துவர்கள் கண்டுபிடித்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.

அல்ஸீமர் போன்ற மறதி நோய் உள்ளவர்களுக்கு இந்தக் கண்டுபிடிப்பு பெரிதும் உதவும்.  இந்த ஆய்விலேயே மருத்துவர் ஜான் கண்டு பிடித்ததன் அடுத்த கட்டமாக, மோசர் தம்பதி வேறொன்றைக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள். இப்படி, இன்னும் புதிய புதிய தகவல்கள் நமக்குக் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. காரணம், மூளையின் ரகசியங்களுக்கும் அதிசயங்களுக்கும் முடிவே இல்லை!’’ என்கிறார் அறுவை சிகிச்சை மருத்துவரான மோகன்.

- ஜி.ஸ்ரீவித்யா