இவர்கள் இப்படித்தான்!



மனசே... மனசே...

என் முடி மிகவும் கொட்டிக்கொண்டே இருக்கிறதே? நான் மிகவும் குண்டாக இருக்கிறேனே... என்னை யார் திருமணம் செய்து கொள்வார்கள்?தேர்வில் குழந்தை குறைந்த மதிப்பெண் எடுத்துவிடுவானோ?இந்த வேலை நிலைக்குமா? எல்லாம் நல்லா போயிட்டிருக்கே... எப்ப எந்த ரூபத்தில்  பிரச்னை வரப் போகுதோ? - இப்படி, சிலர் ஏதாவது ஒரு பிரச்னையை எடுத்துக்கொண்டு, அதை எந்நேரமும் நினைத்து வருந்திக்கொண்டே இருப்பார்கள். சின்ன விஷயமாக இருந்தாலும், அதற்கு காது, மூக்கு, கண் வைத்து பெரிதுபடுத்தி விடுவார்கள்.

பொதுவாக நாம் உலகத்தைப் பார்க்கும் போது, வெளிப்படையாகப் பார்க்காமல், அவரவர் மனக்கண்ணாடி மூலமாகவே பார்க்கிறோம். கண்ணாடி பழுதாக இருந்தால்  பிம்பம் சரியாக தெரியாதல்லவா? அதே போல, ஒருவரது மனதில் பாரபட்சமான எண்ணங்கள் மற்றும் தவறான கருத்துகள் அதிகமாக இருந்தால்..? அவரது பார்வையில் உலகம் துன்பம் ஏற்படுத்தும் ஒன்றாகவே தெரியும். தன்னைப் பற்றி தாழ்வாகக் கருதுபவன்,

அழகாக இருக்கும் மற்றவர்கள் தன்னை மதிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்துடனே அவர்களை அணுகுவான். அவர்கள் உண்மையில்இவனைப் பாராட்டினாலும், அதை இவனால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இப்படிப்பட்டவர்கள், மற்றவர் மனதில் உள்ளதை இவர்களாகவே தவறாக யூகித்துக் கவலையும் கொள்வார்கள். அலுவலகத்தில் நடந்து கொண்டிருக்கும் போது எதிரில் வரும் சக ஊழியர் சிரிக்கவில்லையெனில், அவருக்கு நம்மை பிடிக்கவில்லை என நினைத்து கவலை கொள்வார்கள்.

உண்மையில், அந்த நபர் தன் பிரச்னையை பற்றி யோசித்துக்கொண்டே நடந்ததால் கவனிக்கத் தவறியிருக்கலாம். இது போன்ற தவறான யூகிப்பினால் மனக்கசப்புகளும் உறவுப்
பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.சிலர் எப்போதும் கெட்டதையே பேசிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் உலகத்தை எப்போதும் கருப்புக் கண்ணாடி மூலமாகவே பார்க்கும் பழக்கம் கொண்டவர்கள்... ‘எனக்கெல்லாம் நல்லது நடக்கவே நடக்காது’, ‘தேர்வுல ஃபெயில் ஆயிட்டேன்...

எனக்கு கணக்கு இனிமே வரவே வராது’, ‘எனக்கு பதவி உயர்வா? இதுக்குப் பின்னாடி என்ன பிளான் இருக்கோதெரியலையே?’ - இப்படி...நாள் முழுவதும் அலுவலகத்தில் பல நல்ல விஷயங்கள் ஏற்பட்டிருந்தாலும் அதையெல்லாம் கவனிக்காமல் ஒரு வாடிக்கையாளர் தன்னைத் திட்டிய விஷயத்தை மட்டுமே கவனத்தில்கொள்வார்கள். எந்நேரமும் ஒரு விஷயத்தில் உள்ள நல்லதைப் புறக்கணித்து, கெட்டதையே யோசிப்பார்கள்... பேசுவார்கள்.

சில குடும்பத் தலைவி / தலைவரைப் பார்த்திருப்போம்... வீட்டில் எழுதப்படாத சட்டம் பல போட்டிருப்பார்கள். எல்லோரும் எத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டுமென்பது முதல், எந்தெந்த நேரத்தில் எந்தெந்த வேலைகளை செய்து முடிக்க வேண்டும், குறிப்பிட்ட வேலையை முடிக்க இவ்வளவு காலக்கெடு என்பது வரை ஓர் அட்டவணையை மனதில் போட்டு வைத்திருப்பார்கள். இப்படித் திட்டம் போட்டு வரையறுத்து வாழ்வதில் என்ன தவறு என நீங்கள் நினைக்கலாம்.

அது மிகவும்நல்லதும் கூட. ஆனால், எப்போது ஒருவர், தினசரி வேலைகளில் சிறிய மாற்றம்ஏற்பட்டாலும் சகஜமாக ஏற்றுக்கொள்ள முடியாமல் கஷ்டப்படுகிறாரோ, அப்போதுதான் இவ்வகை மனப்பான்மை ஆரோக்கியமற்றதாகிறது. வழக்கத்துக்கு மாறாக எது நடந்தாலும் இவர்களின் நிம்மதி எளிதில் பறிபோய் விடும். வாழ்வின் நெளிவு சுளிவுக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளாமல், ‘நான் இப்படித்தான்’ என வாழ்பவர்கள் எளிதில் மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள்.

மேலும் சிலரை நம் வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்து இருக்கலாம்... ‘எதிலும் தோல்வியடைந்து விடக்கூடாது... யாரும் குறை சொல்லி விடக் கூடாது’ என்பதற்காக எல்லாகாரியத்தையும் பூரணமாக செய்ய வேண்டுமென்கிற மனப்பான்மை... எடுத்த காரியத்தில் சிறிய தவறு ஏற்பட்டால் தன்னைத் தானே சுய விமர்சனம் செய்து நொந்து கொள்வது... அடுத்த முறை கண்டிப்பாக சரியாக செய்தே தீர வேண்டுமென நினைப்பது... அதோடு, தங்கள் உடனிருப்போரும் சிறு தவறு கூட செய்யக் கூடாது என்ற எதிர்பார்ப்பு.

இவர்களால் ரிலாக்ஸாக வாழ்க்கையை ரசிக்க முடியாது. இவர்களின் சாத்தியமற்ற எதிர்பார்ப்பால், சார்ந்தவர்களுக்கும் தொல்லை மற்றும் வீண் மனக்கசப்பு. இதனால், இவர்களை மன அழுத்தம் அதிக அளவில் தாக்கக்கூடும்.சிலர் வாழ்வில் துன்பமும் வலியும் அடிக்கடி ஏற்படுவதால் அதுவே பழகிப் போய் விடும்.

எப்போதும் துயரத்தில் இருந்து விட்டகாரணத்தால், இவர்களுக்கு, தினசரி ஏதாவது பிரச்னை இல்லாமல் இருக்க முடியாது. இது கூட மது/சிகரெட் பழக்கம் போல ஒருவகை போதை (Addiction)தான். ஏதாவது சிந்தித்து சிந்தித்து தங்களை தாங்களே குழப்பிக் கொண்டு, அவர்களாகவே அவர்கள் வாழ்வை சிதைத்துக் கொள்வார்கள்.

இல்லையெனில் வேண்டுமென்றே, எதிலாவது தோல்வியுற்று (தேர்வு/ விளையாட்டு) தவறு செய்து, மற்றவர்களை தூண்டி விட்டு, அவர்கள் திட்டுவதன் மூலமாக தங்களைப் பற்றி தாழ்வாகக் கருதுவதற்கு அவர்களே வழி செய்வார்கள். இதன் மூலமாக அவர்கள், தங்கள் மன அழுத்தத்தை சமாளிக்க முற்படுவர். பிரச்னையிலிருந்து வெளியே வந்து மகிழ்ச்சியாக வாழவேண்டுமென நினைக்காமல், ‘வாழ்க்கையே ஒரு பிரச்னைதான்’ என்பார்கள்.

ஒரு சிலர் எதிலுமே பொறுமை இல்லாமல் எல்லாவற்றிலும் அவசரம் காட்டுவார்கள். குறைந்த நேரத்தில் அதிக வேலை / சாத்தியமற்ற வேலைகளை செய்து முடிக்க முற்படுவார்கள். எடுத்த எல்லா காரியத்திலும், பிறரைக் காட்டிலும் ஒரு படி மேலே சென்று ஜெயித்து காட்ட வேண்டுமென துடிப்பார்கள்.மற்றவர்களிடமுள்ள நல்ல விஷயத்தை விடுத்து, அவர்களின் கெட்ட குணங்களை மட்டுமே கண்டு மிகுந்த எரிச்சல் அடைவார்கள். உதாரணத்துக்கு... சாலையில் மேடு, பள்ளம் இருந்தால்கூட, உடனே அதற்குக் காரணமானஅரசியல் மற்றும் அரசியல்வாதிகளை திட்டித் தீர்ப்பார்கள். எல்லாத் தருணங்களிலும் பகைமை மற்றும் வெறுப்பு மனப்பான்மை கொண்டிருப்பார்கள்.

வரிசையில் நிற்கும்போது, யாரேனும் நடுவில் நுழைந்தால், அவர்கள் மேல் மிகுந்த கோபம் கொண்டு சண்டை போடுவார்கள். உளவியலில் (Type A Personality) என்றழைக்கப்படும் இப்படிப்பட்ட குணம் கொண்டவர்களுக்கு மன அழுத்தம் அதிகம் ஏற்படுவதால் ரத்தக்கொதிப்பு, இதய நோய் (Coronary Heart Disease), மாரடைப்பினால் மரணம் போன்ற உடல் ரீதியான கோளாறுகள் தாக்கும் அபாயமும் அதிகம்.

இப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவர்களுக்கு, வெளியில் இருப்பவர்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டியதில்லை...தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக் கொள்வார்கள். எனவே, காரணிகள் இல்லாமலேயே தங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் பல உடல்/மனநல தொந்தரவுகளுக்கு எளிதில் ஆளாவார்கள். மன அழுத்தம் ஏற்படுத்தும் பல்வேறு மோசமான விளைவுகளைப் பற்றி வரும் இதழில் பார்ப்போம்.

டாக்டர் சித்ரா அரவிந்த் மனநல நிபுணர்

ப்ரியாவுக்கு என்ன பிரச்னை?

ப்ரியாவுக்கு வயது 37. இரண்டு குழந்தைகள். திருமணமாகி 10 ஆண்டுகள். கணவன் விவாகரத்து கோரியதால் நீதிமன்றம் மூலமாக என்னிடம் வந்தனர். இருவரிடத்திலும் பேசி அடிப்படை தகவல்களைப் பெற்று கொண்ட பின்னர், ப்ரியாவிடம் தனியாக பேசினேன். அவர் வயது முதிர்ந்த தோற்றத்துடன், அதிக பருமனுடன் காணப்பட்டார். ப்ரியாவின் கணவன் ராகுல் ஐ.டி. நிறுவனத்தில் பொறியாளராக இருக்கிறார்.

ப்ரியாவும் ராகுலும் காதல் திருமணம் புரிந்தவர்கள். திருமணமான புதிதில், வேலை நிமித்தமாக அமெரிக்காவில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். 6 ஆண்டுகளுக்குப் பின், தன் பெற்றோரின் தேய்ந்து வரும் உடல்நலம் கருதி இந்தியா வந்து, ராகுலின் பெற்றோருடன் கூட்டுக் குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். அமெரிக்காவில் இருந்த வரை ப்ரியா வேலைக்குச் சென்றுள்ளார்.

இந்தியாவில், பெற்றோரின் எதிர்பார்ப்புக்கு இணங்க ப்ரியா குடும்பத் தலைவியாக மாறினார். நிர்பந்தத்தினால் வீட்டிலேயே இருந்த ப்ரியா தன் தினசரி வாழ்வை நொந்து கொண்டார்.

‘வேலைக்குத்தான் செல்ல முடியவில்லை... வீட்டிலாவது தன் கவனத்தை செலுத்தலாம்’ என எண்ணினார் ப்ரியா. கணவன் வருகைக்காக ஆர்வமாகக் காத்திருந்த ப்ரியாவுக்கு, ராகுல்
தன்னைக் கண்டு கொள்ளாமல், வந்தவுடன் தன் பெற்றோருடன் நேரம் செலவழிப்பதைக் கண்டு ஏமாற்றம். வயதான பெற்றோராக இருந்ததால், ராகுலால் ப்ரியாவை அதிகம் வெளியில் கூட்டிச் செல்வதும் இயலவில்லை. ப்ரியா இரு பிள்ளைகளின் தேவைகளில் கவனம் செலுத்தலாம் என எண்ணினார்.

அவர்களோ தாத்தா, பாட்டியுடனே நேரம் முழுவதையும் கழித்தனர். தன் ஆசை மற்றும் லட்சியத்தை இந்தக் குடும்பத்துக்காக தியாகம் செய்த போதிலும், யாரும் தன்னை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை எனக் குமுறினார் ப்ரியா. தன் வாழ்வுக்கு எந்த அர்த்தமும் இல்லை என சிந்திக்க ஆரம்பித்தார். தன்னால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை என எண்ணி மனம் நொந்தார்.இவ்விஷயங்கள் அவருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தின.

இதை சமாளிக்க பிள்ளைகளை தன் வசம் ஈர்க்க பார்த்தார். அம்மா பேச்சுகேட்கவில்லையெனில், பிள்ளைகளைத் திட்டிவிட்டு, பின்னர் அதை நினைத்து, நினைத்து குற்ற உணர்ச்சியால் தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொண்டார். உறவினர் யாரேனும் வருவதாகத் தெரிந்தால், அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுவிடும்.

 வயிறு உப்புதல், ஜீரணக் கோளாறு என பல பிரச்னைகளுக்கும் ஆளானார். பல சோதனைகளுக்குப் பிறகு, உடல்ரீதியாக எந்த பிரச்னையும் இல்லையென சொல்லி விட்டனர். மன அழுத்தத்தின் வெளிப்பாடான குடல்நோய் எரிச்சல் (Irritable Bowel Syndrome) ஏற்பட்டிருந்த போதிலும், அதை சாதாரண ஜீரணக் கோளாறு என நினைத்து சிகிச்சை ஏதும் மேற்கொள்ளாமல்அவதிப்பட்டார் ப்ரியா.

கோபமும் குற்ற உணர்ச்சியும் ஏற்படும் போதெல்லாம், அதைத் தணிக்க தன்னை அறியாமல் அதிக உணவு உட்கொள்ள ஆரம்பித்தார். இதன் விளைவாக, எடை அதிகரித்தது. பருமனான தன் உருவத்தை கண்டு தன்னைத் தானே வெறுக்க ஆரம்பித்தார். தாழ்வு மனப்பான்மை மேலும் மேலும் மன அழுத்தத்தை அதிகமாக்கியது.

ஆபீஸிலிருந்து சோர்வாக வரும் ராகுலிடம், உடனே சண்டை போட ஆரம்பித்து விடுவார் ப்ரியா. ராகுல் யாருக்கு போன் பேசினாலும்  சந்தேகத்துடன்  பார்க்க ஆரம்பித்தார். ப்ரியாவின் போக்கால் வீட்டில் அடிக்கடி சச்சரவு வரும். இதற்கிடையில் மாமியார் யாரிடமாவது பேசினால், தன்னைப் பற்றி குறை கூறுவதாக நினைத்து தினமும் சண்டைப் பிடித்தார்.
வீட்டில் சிக்கல் அதிகமாகி விவாகரத்து வரை வந்துவிட்டது.

சில வார ஆலோசனைக்குப் பின், ப்ரியாவின் மன அழுத்தத்தின் காரணம் ராகுலிடம் புரிய வைக்கப்பட்டது. ப்ரியாவிடம் அன்பை வெளிக்காட்டி, அவருக்கு உறு துணையாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கினேன்.   ப்ரியாவுக்கும் மன அழுத்தத்தை குறைக்க ஆலோசனைகளும் சிகிச்சையும் வழங்கப்பட்டது.

குடும்ப சூழ்நிலையை சரிவர புரிந்து கொண்ட ப்ரியா, மாறிவரும் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறனை வளர்த்துக் கொண்டார். தன் தேவையை ராகுலிடம் சரியான முறையில் பேசிப் புரிய வைத்து, பின் இருவரும் கலந்தாலோசித்து, வீட்டிலிருந்தே பார்க்கும் ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்க முடிவெடுத்தனர்.

ப்ரியாவால் மகிழ்ச்சியுடன் தன் திறமையை வெளிப்படுத்த முடிந்தது. ராகுலின் பெற்றோர் மற்றும் பிள்ளைகளுடன் தன் நேரத்தை மகிழ்ச்சியாக கழிக்கவும் முடிந்தது. ராகுலும் ப்ரியாவும் இப்போது சண்டை சச்சரவு நீங்கி நிம்மதியாக வாழ்கின்றனர்.

மன அழுத்தத்தால் ஏற்பட்ட பல அறிகுறிகள், அவராலும் அவரது குடும்பத்தாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. மன அழுத்தம் ஏற்படும் அளவுக்கு ப்ரியா இந்தப் பிரச்னையை வளரவிடாமல் முதலிலேயே கணவரிடம் தன் தேவை குறித்து வெளிப்படையாக பேசியிருக்க வேண்டும்.

இப்படி, உணர்ச்சிவசப்படாமல் பேசித் தீர்த்துக் கொண்டால் குடும்பத்தில் பல சிக்கல்களைத் தவிர்க்கலாம். இல்லையெனில் தீர்க்கப்படாத / வெளிக்காட்டப்படாத சின்ன பிரச்னை கூட, தினம் தினம் வளர்ந்து விஸ்வரூபமெடுத்து, மனக்கசப்பை ஏற்படுத்தி, விவாகரத்து வரை வந்து விடும்.

எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதற்குப் பின்னால் அவரவர் தேவைகள்/எதிர்பார்ப்புகள் குறித்த கருத்து வேறுபாடுதான் காரணமாக இருக்கும். இவ்வித கருத்து வேறுபாடு குறித்து ஆரோக்கியமான முறையில் கையாள வாழ்வியல் திறன் தேவைப்படுகிறது  இவ்வித திறனை ஒவ்வொரு கணவனும் மனைவியும் வளர்த்துக் கொண்டால் பல பிரச்னைகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்!


(மனம் மலரட்டும்!)