பார்வையைப் பறிக்குமா பட்டாசு?



பத்து நடந்த பிறகு பாதுகாப்பைப் பற்றி அறிந்து கொள்ளாதீர்கள்’ என்றொரு பொன்மொழி உண்டு. வருமுன் காப்பதே விபரீதம் தடுக்க ஒரே வழி!கொண்டாட்டங்களுக்குக் குறைவில்லாத தீபாவளிப் பண்டிகையில், வருடந்தோறும் விபத்துக்களுக்கும் பஞ்சமிருப்ப தில்லை. பட்டாசு கொளுத்தும்போது ஏற்படுகிற சிறுகாயம் முதல் உயிரிழப்பு வரை எதுவும் நடக்கலாம்.

‘ராதாத்ரி நேத்ராலயா டிரஸ்ட்’ மூலமாக ஒவ்வொரு வருட தீபாவளியின் போதும், குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வு முகாம்களை நடத்துகிறார் விழித்திரை சிறப்பு சிகிச்சை நிபுணர் வசுமதி வேதாந்தம்.‘‘பட்டாசு கொளுத்தும்போது 40 சதவிகித அளவு காயங்கள் கைகளிலும் 20 சதவிகிதக் காயங்கள் கண்களிலும் 20 சதவிகிதக் காயங்கள் தலை மற்றும் முகத்திலும் ஏற்படுகிறது. மீதமுள்ளவை உடலில் மற்ற பகுதிகளில் ஏற்படும் காயங்களாகும்.

பட்டாசு கொளுத்தி கண்களில் காயம் அடைபவர்களில் 100ல் 30 பேர் பார்வை இழப்புக்கு உள்ளாகிறார்கள் என்பது சோகமான விஷயமாகும். அதைவிட முக்கியமான தகவல் என்ன தெரியுமா? பல நேரம், பட்டாசுகளை கொளுத்துகிறவர்கள் உஷாராக தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள். அப்பாவியான வழிப்போக்கர்கள் யாராவது அந்த பாதிப்பில் சிக்கிக்கொள்கிறார்கள்.

 அதனால் பட்டாசு கொளுத்துகிறவர்கள், அவர்களது பெற்றோர், அக்கம்பக்கத்தினர், வழிப்போக்கர்கள் அனைவருமே விழிப்புணர்வுடன் இருந்தால்தான் மகிழ்ச்சி யாக தீபாவளியை கொண்டாட முடியும்’’ என்கிற டாக்டர் வசுமதி, ஆபத்தான பட்டாசுகள் குறித்தும், பட்டாசு விபத்துகளில் சிக்குபவர்களுக்கான முதலுதவிக் குறிப்புகளையும் சிக்காமலிருக்க எச்சரிக்கைத் தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறார்.

காயமடைந்தவர்களிடம் எடுத்த ஆய்வுத் தகவல்களின்படி கம்பி மத்தாப்பு, வெடிக்கும் பட்டாசுகள், ராக்கெட் வகைகள் அதிக காயத்தை ஏற்படுத்துகின்றன. கண்களை முழுவதுமாக மூடும் விதத்திலான கண்ணாடி அணிய வேண்டும். அந்த கண்ணாடிகளின் விலை குறைவுதான். எல்லா இடங்களிலும் கிடைக்கும்.

 பட்டாசு கொளுத்தும்போது ‘முதல் உதவி’ மருந்துகள் அடங்கிய ‘கிட்’ ஒன்றை எல்லோரும் அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். அதில் காயமடைந்த கண்ணின் மேல் வைக்க வேண்டிய கவசம், ஆன்டிபயாடிக் ஐ டிராப்ஸ், கண் எரிச்சலைக் குறைக்கும் செயற்கை கண்ணீர் மருந்து, மருந்து கலந்த தண்ணீர் (மெடிக்கேட்டட் வாட்டர்) போன்றவற்றை வைத்திருக்க வேண்டும்.

ஐ.எஸ்.ஐ. முத்திரை உள்ள பட்டாசுகளையே வாங்க வேண்டும்.
குழந்தைகள் கையில் பட்டாசுகளை கொடுக்கக் கூடாது.
ஓரளவு பெரிய குழந்தைகள் பட்டாசு கொளுத்தும்போது பெரியவர் ஒருவர்
அருகில் இருந்து கண்காணிக்க வேண்டும்.
ஒரு வாளியில் தண்ணீர், இன்னொரு வாளியில் மண் வைத்திருக்க வேண்டும்.
நீளமான ஊதுபத்திகளை பயன்படுத்தி, தூரத்தில் வைத்து வெடிக்க வேண்டும்.
தளர்வான உடைகளை அணிந்து கொண்டு பட்டாசு கொளுத்தக் கூடாது.
நிதானமாக, கவனமாக பட்டாசுகளை கொளுத்தினால் பாதிப்புகளை தவிர்க்கலாம்.

கவனமாக இருந்தும் சிலருக்கு பட்டாசு கண்களில் பட்டு பாதிப்பை ஏற்படுத்தலாம். கண் சிவந்துபோதல், கண்ணீர் வழிதல், வெளிச்சத்தை பார்க்கும்போது கண்கள் கூசுவது, தலை வலிப்பது, கண்களிலும் வலி, பார்வை மங்குதல், நடக்கும்போது கால் இடறுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இவற்றில் ஒன்றோ, கூடுதலாகவோ அறிகுறிகள் இருந்தால் உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும்.

கண்களில் காயம்பட்டாலே உடனே கைகள் கண்களை கசக்கச் செல்லும். அந்தத் தவறை செய்யக்கூடாது. ஏன் என்றால் பட்டாசு காயத்தில், அதில் இருக்கும் ரசாயனம் பெரும்பங்கு வகிக்கிறது. காயம் அடைந்திருக்கும் கண்களை கசக்கினால் காயத்தின் பாதிப்பு அதிகமாகும். கண்களில் பட்டிருக்கும் ரசாயனமும் அதிக இடங்களில் பரவும். பட்டாசு கொளுத்தும்போது கைகளில் பட்டாசின் ரசாயனத் துகள்கள் படிந்திருக்கும். பதற்றத்தோடு கண்களை கசக்கும்போது அந்தத் துகள்களும் கண்களில் பட்டு, பிரச்னையை அதிகரித்துவிடும்.

அதனால் காயம் ஏற்பட்டால் பதற்றம் அடையக் கூடாது. முதலில் கைகளை கழுவ வேண்டும். மருந்துக் கடைகளில் கிடைக்கும் மெடிக்கேட்டட் வாட்டர் வாங்கி கண்களில் ஊற்றிக் கழுவ வேண்டும். அது கிடைக்காவிட்டால் சுத்தமான தண்ணீரால், 15 நிமிடங்கள் வரை கழுவ வேண்டும்.  கண்களில் கிழிவது போன்ற பிளவு காயம் ஏற்பட்டு விட்டால், எக்காரணத்தைக் கொண்டும் கழுவக் கூடாது. முதல் உதவிப் பெட்டி யில் இருக்கும் கவசத்தை அதன் மீது வைத்து பாதுகாத்து உடனே டாக்டரிடம் அழைத்து வந்து விடவேண்டும்.

* கண் முழுவதுமாக காயம் அடைந்து கன்றிப் போனாலோ, கருவிழியில் காயம் ஏற்பட்டாலோ, பட்டாசு சிதறல் குத்தி காயம் அடைந்துவிட்டாலோ கழுவக் கூடாது. உடனே டாக்டரின் ஆலோசனையை பெறுவதுதான் சிறந்த வழி.

* சிலர் சுண்ணாம்புத் தண்ணீரை காயம் பட்ட கண்களில் ஊற்றுகிறார்கள். சுண்ணாம்பு ரசாயனக் கலப்பு கொண்டது. அதற்கு காயத்தை ஆற்றும் சக்தி கிடையாது. காயம்பட்ட கண்களுக்கு சுய மருத்துவம் எதையும் செய்யக்கூடாது. களிம்பு பூசுவதோ, பேண்டேஜ்  கட்டுவதோ, கண்களை அழுத்துவதோ கூடாது. கம்பி மத்தாப்பு, வெடிக்கும் பட்டாசுகள், ராக்கெட் வகைகளே அதிக காயத்தை ஏற்படுத்துகின்றன. கண்களில் காயம்பட்டாலே உடனே கைகள் கண்களை கசக்கச் செல்லும். அந்தத் தவறை செய்யக்கூடாது.

- அதிதி