பி.பி. மானிட்டர்



பி.பி. மானிட்டர் என்கிற ரத்த அழுத்தமானியைப் பற்றித் தெரிந்துகொள்ளும் முன், ரத்த அழுத்தம் பற்றி ஒரு சிறிய அறிமுகம். உடல் முழுவதும் ரத்த நாளங்களின் வழியாக ரத்தம் ஓடிக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். இந்த ரத்த ஓட்டம் வழக்கத்துக்கும் மாறாக அதிகமாகவோ, குறைவாகவோ ஓடும்போது ரத்த நாளங்களின் உட்புறச்சுவர்களில் அழுத்தம் ஏற்படுகிறது. இதையே ரத்த அழுத்தம் என்கிறார்கள்.

இந்த ரத்த அழுத்தம் பொதுவாக, 120/80 mmHg என்ற அளவில் இருக்க வேண்டும். இந்த அளவு கூடினால் அது உயர் ரத்த அழுத்தம் என்றும் 100/60 mmHg என்பது போல குறைந்தால் குறை ரத்த அழுத்தம் என்றும் சொல்கிறோம்.

இந்த அளவைக் கண்டு பிடிப்பதற்கே ரத்த அழுத்தமானி பயன்படுகிறது. உண்மையில் ‘ஸ்பிக்மோமனோ மீட்டர்’ என்பதுதான் ரத்த அழுத்தமானிக்கு மருத்துவ உலகம் வைத்திருக்கும் பெயர். வாயில் வராத பெயராக இருப்பதால், ‘பி.பி.யை மானிட்டர் பண்ணுகிற கருவிதானே... அப்ப பி.பி. மானிட்டர்னே சொல்லுங்க பாஸ்’ என்று சிம்பிளாக மாற்றிவிட்டார்கள்.

ஸ்பிக்மோமனோ மீட்டர் என்ற பெயர், இன்ன பிற மருத்துவ கண்டுபிடிப்புகளைப் போல கிரேக்க வார்த்தைகளிலிருந்தே உருவானது. ஸ்பைக்மோஸ் என்பது துடிப்பையும் மேனோமீட்டர் என்பது அழுத்தத்தை அளக்கும் கருவி என்பதையும் குறிக்கும். அதெல்லாம் சரி...

mmHg என்று ரத்த அழுத்தத்தை அளப்பதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று ஆழ்ந்த விளக்கம் கேட்பவர்களுக்காக ஒரு தகவல்... எம்.எம். என்பது மில்லிமீட்டரையும் ஹெச்.ஜி. என்பது மெர்க்குரியை - அதாவது, பாதரசத்தையும் குறிக்கும் சொல். ரத்த அழுத்தத்தை அளவிடும் கருவியில் பாதரசம் முக்கிய பங்கு வகிப்பதால்தான் இந்த அளவீட்டைப் பயன்படுத்துகிறார்கள்.

இத்தனை விஷயங்களைச் சொல்லி ரத்த அழுத்தமானியைக் கண்டுபிடித்தவர் பெயரைச் சொல்லாமல் இருக்க முடியுமா? ‘சாமுவேல் சீக்ஃப்ரைட் கார்ல் வோன் பாஸ்க்’ என்ற ஆஸ்திரிய மருத்துவர்தான் ரத்த அழுத்தமானியின் தந்தை. இவ்வளவு பெரிய பெயர் வைத்துவிட்டு எதையாவது கண்டுபிடிக்காமல் இருந்தால் எப்படி என்று 1881ம் ஆண்டில் ரத்த அழுத்தமானியைக் கண்டுபிடித்தார்.

1896ல் ‘சிப்லான் ரிவா ரோக்கி’ என்பவர் அந்தக் கருவியை இன்னும் நவீனமாக்க, 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘ஹார்வி கஸிங்’ என்ற மருத்துவர், இதை எல்லோரும் பயன்படுத்துகிற வகையில் எளிமையாக்கிப் பலரிடமும் கொண்டு சேர்த்தார்.

இப்போது பயன்பாட்டில் இருக்கும் இந்த ரத்த அழுத்தமானியில் 2 வகைகள் இருக்கின்றன. மருத்துவமனைக்குச் சென்றதும் தோள்பட்டையில் பெல்ட் போட்டு மருத்துவர்கள் பரிசோதிப்பது மேனுவல் வகை. இதை மருத்துவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இன்னொன்று டிஜிட்டல் வகை.

கொஞ்சம் பெரிய சைஸ் கடிகாரம்போல இருக்கும் இந்த வகையில் நோயாளிகளே தங்களது ரத்த அழுத்தத்தைக் கண்டுபிடித்துக் கொள்ள முடியும்! ‘சாமுவேல் சீக்ஃப்ரைட் கார்ல் வோன் பாஸ்க்’ என்ற ஆஸ்திரிய மருத்துவர்தான் ரத்த அழுத்தமானியின் தந்தை!

- ஜி.ஸ்ரீவித்யா