தூவானம்




நதியும், கடலும்


எல்லா நதிகளும் கடலில்தான் சங்கமிக்கின்றன என்பது பொதுவான இயற்கை அமைப்பு. இதற்கு முக்கிய காரணம், நதிகள் மலைகள் போன்ற உயரமான பகுதிகளில் உருவாகி, தாழ்
நிலைப் பகுதிகளை நோக்கி ஓடி வருவதுதான். ஒரு நதியைப் பொறுத்தவரை, கடல் என்பது அதன் நிலையிலிருந்து தாழ்வானது. ஆகவேதான் தன் இயல்புப்படி பள்ளத்தை நோக்கி வருகிறது நதி.

தாலி எப்படி வந்தது?

பண்டைய தமிழகத்தில் ஒரு திருமணத்தின் முக்கியமான சம்பிரதாயம், தாலி கட்டுவதாக இன்று போலவே இருந்து வந்திருக்கிறது. ஆனால் அந்நாளில் ஒரு பனை ஓலையை மடித்து அதனுள் நூல் கோத்து, அதை மணமகன், மணமகள் கழுத்தில் கட்டுவான். இந்தத் தாலியை 'தால பத்திரம்’ என்று அழைத்தார்கள். நாளடைவில் தால பத்திரமே தாலியாகி விட்டது.

முதல் பயணச் சீட்டு

ரயிலில் பயணம் செய்வதற்காக சிறிய அட்டையில் பயணச் சீட்டை அச்சிட்டுத் தருகிறார்கள். இந்த முறையை முதன்முதலில் இங்கிலாந்தைச் சேர்ந்த தாமஸ் எட்மன்ட்சன் என்பவர்தான் அறிமுகப்படுத்தினார். 1836ம் ஆண்டு இங்கிலாந்தில் ஸ்டேஷன் மாஸ்டராக அவர் பணியாற்றியபோது இந்த உத்தி அவருக்குத் தோன்றியது. அதற்கு முன் ஒரு காகிதத்தில் பயணச் சீட்டு எழுதித் தரப்பட்டு வந்தது.

கடன் ஊக்குவித்த ஊக்கு

பதினெட்டாம் நூற்றாண்டில் மக்கள் தங்கள் உடைகளை ஒரு சீராக அணிந்துகொள்ள பலவகை ஊக்குகளைப் பயன்படுத்தி வந்தனர். இதனால் அடிக்கடி கைவிரல்களில் ஊசிக்குத்தும், ரத்தப் பெருக்கும் ஏற்பட்டன. இப்போது நாம் பயன்படுத்தும் ‘ஸேஃப்டி பின்’, 1849ம் ஆண்டில் நியூயார்க் நகரைச் சேர்ந்த வால்டர் ஹன்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஸேஃப்டி பின் தயாரிப்பு நுட்பத்தை யாரிடமோ தான் பட்டிருந்த 15 டாலர் கடனுக்கு ஈடாக அவர் கொடுக்க வேண்டியிருந்தது!

வீல் சத்தம் கேட்காத சக்கரம்

லண்டன் நகரிலுள்ளது ஆயிர மாண்டு சக்கரம். ‘மில்லினியம் வீல்’ எனப்படும் இச்சக்கரம், பிக்பென் கடிகார கோபுரத்தைவிட நான்கு மடங்கு உயரமானது. 2100 டன் இரும்பால் உருவாக்கப்பட்ட சக்கரம் இது. நெதர்லாந்தில் தயாரிக்கப்பட்டு இங்கே கொண்டுவரப்பட்டது. இந்தச் சக்கரத்தில் சுற்றுலாவாசிகள் உல்லாசமாகச் சுற்றி வர 32 பெட்டிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 25 பேர் வீதம் பயணிக்கலாம்.

பெட்டி உயரே செல்லும்போது 40 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பாலிருக்கும் இடங்களைத் துல்லியமாகக் காண முடிகிறது. உலகின் மிகப் பெரிதான இந்தச் சுழலும் சக்கரத்தை சரியான கோணத்தில் நிலைநிறுத்துவதற்கு மட்டும் ஒரு வாரம் ஆயிற்றாம்.

எருமையூர்

கர்நாடக மாநிலம் மைசூரின் ஆரம்பகாலப் பெயர் மஹிஷுரு. மஹிஷம் என்றால் எருமை என்று பொருள். அந்தவகையில் மஹிஷுரு என்றால் எருமையூர் என்று பொருள்.

அப்போதே பெண்களுக்கு முக்கியத்துவம்

பெண்களுக்கென தனி பள்ளிக்கூடம் அமைத்த பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு. தஞ்சை மாவட்டம் தரங்கம்பாடியில்தான் இவ்வாறு முதல் பள்ளிக்கூடம் அமைந்தது. எந்த வருடம் தெரியுமா? 1727!
 
- வித்யுத்