மூட்டைப் பூச்சிகளின் டூயட்



பூச்சிப் பூக்கள் 51

மூட்டைப் பூச்சிகள் தம் காதல் களேபரங்களை ராத்திரி நேரத்தில்தான் வைத்துக் கொள்கின்றன. இந்த மூட்டைப் பூச்சிகளின் கண் பார்வை கம்மி என்பதால், கண்டதும் காதல் சாத்தியமில்லை. உடலில் சுரக்கும் ஒரு விதமான அசூயையான வாசனையைக் கொண்டே தன் இணையைத் தேடிக் கண்டுபிடித்துப் பிரசன்னமாகி விடுகின்றன.

இவற்றுக்கு இடையே ‘ஏக் தூஜே கே லியே’ அமர காதலெல்லாம் கிடையாது. எப்படியும் இரை தேடித் திரிந்துதான் ஆகவேண்டும். அப்படிப் போகிற வழியில் அகப்படுகிற சிங்காரமான இளம் இணையோடு கொண்டாட்டம்தான். பொதுவாக இந்த மூட்டைப் பூச்சிகளுக்கு இடையில் இணக்கமான கணவன் - மனைவி உறவுப் பிணைப்புகள் எதுவும் இருப்பதில்லை!

வழிப்போக்கில் எதிர்ப்பட்டுக் கிடைக்கும் வாளிப்பான இணை மூட்டைப் பூச்சியிடம் நாசூக்காக நூல் விட்டபடி செல்லமாக நெருங்கிவரும். கலவியில் ஆர்வம் இருக்குமாயின் அங்கிருந்து எஸ்கேப் ஆக முயற்சிக்காமல் நுட்பமாய் வாசனை பிடித்தபடி அதுவும் அங்கேயே இருக்கும்.

 கூடவே நாணத்துடன் கூடிய மெல்லிய சரீர அசைவுகளை மெதுவாக மேற்கொள்ளும். சேர்க்கைக்கு அதுதான் சமிக்ஞை.இந்நிலையில் இரண்டும் தம் ஃபீலர் கொம்புகளால் கொஞ்ச நேரத்திற்கு ஒன்றை ஒன்று உரசி கிச்சுகிச்சு மூட்டிக் கொண்டிருக்கும்.

பிறகு தம் குழல் வடிவ வாயால் நீண்ட நேரத்திற்கு முத்தமிட்டபடி வட்டமடித்துக் கொண்டு விளையாடி மகிழும். றெக்கையுள்ள ஜோடிகள் சொற்ப நேரத்திற்குப் பறந்து துரத்திக் குதூகலிக்கும். இப்படியாக எலிமென்டரி ஆலிங்கன சிலாகிப்புகள் முடிந்ததும், இரண்டுக்கும் ஊற்றெடுத்துவிடும் உணர்ச்சி மிக்க மோகப் பிரயாசை!

கல்வி சுகத்தை இவை மற்ற பிற ஜீவராசிகளைப் போலல்லாமல், ஏகபோக அங்கப் பரிபாலனங்களுடன் அனுபவித்து மகிழ்கின்றன. பெண் மூட்டைப் பூச்சி தன் மிருதுவான ஸ்பாஞ்ஜ் போன்ற கீழ்ப்புற மேனியை மேற்புறம் காட்டியபடி மல்லாந்து படுத்துக் கொள்ள, அதன் மீது ஆண் பூச்சி அபரிமிதமாய்ப் படர்ந்து உறவில் ஈடுபடும்.

 பொதுவாக செக்ஸ் உறவென்பது உலகில் வாழும் பல தரப்பட்ட உயிரினங்கள் எல்லாம் நீடித்து நிலைத்து, அவ்வினம்  முற்றிலும் அழிந்து போகாமல் பூமியில் தொடர்ந்து வாழ்தலுக்கான இயற்கையின் சுவாரஸ்யமான யுக்திதான்!

இதையும் ஒரு கடின வேலை என்று கருதி ஒதுக்கி விட்டால், இயற்கையின் இலக்கு தோற்றுப் போய்விடக் கூடுமல்லவா? எனவேதான் இந்த சுந்தர சங்கதியில் ஒரு இந்திர சுகத்தை இலைமறை காயாய் இயற்கை வைத்ததோ! ஈர்ப்பினை அதிகரிக்கவே இரு பாலின உடல்களிலும் பார்க்கவும், தொடவும், அனுபவிக்கவும் கவருகின்ற வகையில் ஆறல்ல, அறுபது வித்தியாசங்களை ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் ரீதியில் உருவாக்கியும் விட்டிருக்கிறது. பாலினக் கவர்ச்சிக்கு சூசகமான இயற்கை சூழ்ச்சி!

ஆனால் இந்த மூட்டைப் பூச்சிகளின் புணர் சங்கதிகளில் விநோதமான மாற்றுமுறை இருப்பது ஒரு பிரபஞ்ச விந்தை தான்! பொதுவாக இயல்புக்கு மாறான, ஹோமோசெக்ஸ் எனப்படும் ஒருபாலின உறவுகள் கணநீர்ச் சுரப்பிகளின் கட்டுப்பாடற்ற இயக்கத்தினால் எல்லா உயிரினங்களிலும் சொற்ப அளவில் இருப்பது சகஜம்.

இந்த மூட்டைப் பூச்சிக்குப் புணர்வதற்கு தன்னைவிட இளையதும் ஃபிரஷ்ஷானதுமான தன்னினத்து சகா கிடைத்தால் போதும். அது இன்னொரு ஆணாக இருந்தாலும் கூட ஓகே. காரணம் என்னவெனில், இவை உறவு கொள்வதற்கு பெண் உறுப்பு தேவைப்படுவதில்லை. நிஜத்தில் இது நம்ப முடியாத நானிலத்து அதிசயம்!

ஆண் மூட்டைப் பூச்சிகள் பெண்ணின் பிறப்பு உறுப்பிற்குள் தம் உயிரணுக்களை செலுத்துவதில்லை. ஆண் பூச்சி தனது ஹைப்போடெர்மிக் ஊசி போன்ற ஆணுறுப்பால் இணையின் அடி வயிற்றில் ஏதோவொரு இடத்தில் மூர்க்கமாய்த் துளைத்து, அதன் வழியே புணர்ந்து விட்டு, உயிரணுக்களை அப்டாமினல் கேவிட்டி எனப்படும் வயிற்று குடோனுக்குள் பாய்ச்சி விடுகின்றன. ஆகவே, உறவிற்கு பெண் உறுப்பை இவை தேடிக் கொண்டிருப்பதில்லை. வாய்க்கும் சகாவின் அடிவயிற்றில் துளை போட்டுத் தாமே உருவாக்கிக் கொள்கின்றன. பெட்டர் ஃபிட்! 

 எனவே ஒரு இளைய ஆண் பூச்சி இப்படி வேறொரு திடகாத்திர ஆண் பூச்சியிடம் சிக்கிக் கொள்ளும் பட்சத்தில், எதிரிகளை எச்சரிக்கப் பயன்படுத்தும் அலாரமாக ஃபிரமோன்களை வெளியிட்டு எஸ்கேப்பாக எத்தனிப்பதுண்டு. ஆனால் வீராவேசத்தை இடை நிறுத்த முடியாமல், சங்காத்தத்தை முடித்த பின்னரே அந்த ஆக்ரோஷ ஆண்பூச்சி தன் பிடியைத் தளர்த்தும். இந்த உறவிற்கு சற்றும் பலனேதும் இருக்காது!

நல்லுடலுறவில் மீசைப் பார்ட்டியால் வயிற்றுக் குழிவுக்குள், ரத்தக் களரியோடு குத்திச் செலுத்தப்பட்ட உயிரணுக்கள், ரத்த ஓட்டத்தின் மூலமாக ஸ்டோரேஜ் பவுச்சிற்கு வந்து சேர்ந்து விடுகின்றன.

அங்கே இந்தப் பொக்கிஷத்தை ஆயுசுக்கும் இருப்பு வைத்துக்கொண்டு தம் வாரிசு முட்டைகளை ஆவரேஜாக ஐந்து என்ற எண்ணிக்கையில் ஆயுள் முழுவதும் பல தடவைகளில் இடுகின்றன. இறப்பதற்குள் குறைந்த பட்சம் 500க்கு மேற்பட்ட முட்டைகளைப் பல்வேறு ஸ்பாட்டுகளில் இட்டு வைக்கின்றன.

இதில் சைவ பார்ட்டிகள் ஏதாவதொரு தாவரத்தின் கீழுள்ள வேர்ப்பகுதி அல்லது உயரமான மென் தண்டுகளைத் தேர்வு செய்கின்றன. மிலிட்டரி விலாஸ் பார்ட்டிகள் தாம் வாழும் ஃபர்னிச்சர் கேப்புகளையே பயன்படுத்திக் கொள்கின்றன.

மூட்டைப் பூச்சிகளில் சில கில்லாடி ரகங்கள் உள்ளன. இவை பலே சாதுரியமாய், சுக ஜோலி முடிந்தவுடனே, போர்க்கால அவசரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட தம் வாரிசு முட்டைகளை, ஒருவிதமான ஸ்பெஷல் க்ளூவைப் பயன்படுத்தித் தன்னைப் புணர்ந்த ஆணின் றெக்கைகளிலேயே ஒட்டி வைத்துவிட்டு ஜகா வாங்கி விடுகின்றன.

சர்வ புத்திர சாதுரியம்!  இவ்வாறு பல வகைகளில் பத்திரப்படுத்தப்பட்ட முட்டைகள் 46 வார காலத்தில் பொரிந்து ஒரு சப்ஜூனியர் லார்வா புழு வெளிப்படும். இந்தப் புழு சில முறை தோலுரித்துக் கொண்ட பின்பு, சில வாரங்களில் தம் பெற்றோர் சாயலைப் பெற்று ஒரு ஜூனியர் மூட்டைப் பூச்சியாக மாறுகிறது. அரைகுறை உருமாற்ற வித்தை!

(தொடரும்)

டாக்டர் ஆர்.கோவிந்தராஜ்