சென்னை சீக்ரெட்ஸ்



மீண்டு வந்த மேயர்!

1792 ஆம் ஆண்டு  பிரிட்டிஷ் நாடாளு மன்றத்தின் உள்ளாட்சி சட்டம் வழிகாட்ட, மேயரும், நகர்மன்ற உறுப்பினர்களும் இல்லாமலேயே மெட்ராஸ் நகராட்சி சிறப்பாகச் செயல் படத் தொடங்கியது. இதன்படி, நகரங்களில் ‘அமைதி நடுவர்கள்’ நியமிக்கப்பட்டு தெருக்களின் பராமரிப்பு பற்றி முடிவெடுக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டது.
இந்த அமைதி நடுவர்களுக்கு மதுபானங்களின் விற்பனை மீது வரி விதித்துக் கொள்ளவும் அதிகாரம் வழங்கப்பட்டது. இவர்கள் நகரின் நீதி நிர்வாக விஷயங்களையும் கவனித்து வந்தனர்.

1856ம் ஆண்டில் அமைதிக் காவலர் முறை விலக்கப்பட்டு மூன்று ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர். நகரத்தைப் பராமரிக்கவும், அதற்கு சில வரிகள் வசூலிக்கவும் ஆணையர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. ‘‘நிலவரி அதிகமாக விதித்துக் கொள்ள சட்டம் இயற்றப்பட்டதால் வீட்டு வரி நூற்றுக்கு 5 சதவீதம் என்பதிலிருந்து ஏழரை சதவிகிதமாக உயர்ந்தது.

வண்டிகளுக்கும், மாடுகளுக்கும் வரி போடப்பட்டது. 1863ல் வர்த்தக வரி, உத்தியோக வரி, சுங்கவரி முதலியன  விதிக்கப்படவும் சட்டம் இடம் தந்தது. அதுவரையில் நகராட்சியிடமிருந்த போலீஸ்துறை அரசின் பொறுப்பில் வந்தது” என்கிறார் ‘சென்னை மாநகர்’ நூலில் எழுத்தாளர் மா.சு.சம்பந்தன்.

பிறகு, மெட்ராஸ் எட்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொன்றுக்கும் நான்கு ஆணையாளர்கள் வீதம் நகர மக்களிலிருந்தே அரசு நியமித்தது. ெமாத்தமுள்ள இந்த 32 ஆணையாளர்களும் சேர்ந்து விவாதிக்கும் கூட்டத்திற்கு ஒரு நிர்வாக அதிகாரி தலைமை வகித்தார்.

பின்னர், 1878ல் கொண்டு வரப்பட்ட சட்டப்படி 32 பேரில் 16 பேர் வரி செலுத்துவோரில் இருந்து  நியமிக்கப்பட வேண்டும் என்றது. ெதாடர்ந்து 1884 ஆம் ஆண்டு நகர உள்ளாட்சிச் சட்டம் கொண்டு வரப்பட்டது. பொது சுகாதாரம், பாதுகாப்பு, ஆரம்பக் கல்வி மற்றும் கழிப்பிட வசதிகள் போன்றவற்றிற்கு உள்ளாட்சி வருவாயைப் பயன்படுத்தலாம் என்றது இந்தச்சட்டம். இதன்பிறகு மீண்டும் உயிர்பெற்றது மேயர் பதவி!