என்னால் எப்படி போராடாமல் இருக்க முடியும்?



முத்தாரம் நேர்காணல்


நேர்காணல்: டெனிஸ் முக்வீஜ், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.

காங்கோ நாட்டில் பிறந்த டெனிஸ் முக்வீஜ் புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர். 63 வயதிலும் தினமும் 18 மணிநேரம் அயராது உழைத்து வருகிறார். இவரின் ‘பான்சி’ மருத்துவமனை காங்கோ நாட்டின் தனித்த அடையாளமாகவே  மாறிவிட்டது. கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட 40  ஆயிரம் பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார் டெனிஸ். அதுவும் இலவசமாக. மகப்பேறு மருத்துவரான நீங்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்களின் பக்கம் கவனம் செலுத்தக் காரணம் என்ன?

1989-இல் லெமிராவில் உள்ள பொது மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பிரவசத்தின் போது ஏற்படும் உயிரிழப்பைக் கட்டுப் படுத்துவதே என்னுடைய முக்கிய நோக்கமாக அப்போது இருந்தது. 1996-இல் காங்கோ யுத்தம் ஆரம்பித்தது. எங்கள் மருத்துவமனை போரில் தரைமட்டமானது. மருத்துவ மனையில் பணியாற்றியவர் களும் சிகிச்சைக்காக வந்திருந்த பெண்களும் கொல்லப்பட்டனர். உயிர் பிழைத்த நான் லெமிராவில் இருந்து கிளம்பி புகாவிற்கு வந்து 1999-இல்  ‘பான்சி’ மருத்துவ மனையைத் திறந் தேன்.

இங்கேயும் பிரசவத்தின்போது உயிரிழப்பைக் கட்டுப்படுத்துவதே என் நோக்கமாக இருந்தது. ஆனால், நடந்ததே வேறு. பாலியல் வன்புணர்வால்  உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஓர் இளம் பெண்தான் ‘பான்சி’ மருத்துவமனையின் முதல் நோயாளி. ஆறுமுறை அறுவை சிகிச்சை செய்து அவளைக் காப்பாற்றினேன். மூன்று மாதங்களில் இதே மாதிரி 45 பெண்கள்.

ஒருத்தர் கூட பிரசவத்துக்கு வரவில்லை. பெண்கள் மட்டுமல்ல, பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண் குழந்தைகளும் சிகிச்சைக்காக வந்தனர். ஒரு நாள் ஆறு மாதப் பெண் குழந்தையைப் பெற்றோர் கொண்டு வந்தனர். அக்குழந்தையை  யாரோ ஒருவர் குரூரமாக பாலியல் வன்புணர்வு செய்திருந்தார். இதற்கு எதிராக என்னால் எப்படி போராடாமல் இருக்க முடியும்?

நோபல் பரிசு வாங்கிய தருணத்தை எப்படி உணர்கிறீர்கள்?

அன்று வெள்ளிக்கிழமை. வழக்கம்போல அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தேன்.  அப்போது அலைபேசியின் அழைப்பு மணி ஒலித்தது. எனது உதவியாளர் எடுத்துப் பேசினார். என்ன விஷயம் என்று சொல்லாமல் மருத்துவமனையில் இருந்த அனைத்து பெண்களின் முகத்திலும் மகிழ்ச்சி; பூரிப்பு. எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத் திருப்பது தெரியவந்தது. நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போதே இத்தகவல் கிடைத்தது பெரு மகிழ்ச்சி.

 தினமும் எவ்வளவு    பேருக்கு அறுவை சிகிச்சை செய்கிறீர்கள்?
குறைந்தபட்சம் 10 பேர்.

நன்றி: Sverine Desmarest, யுனெஸ்கோ