ஐஓஎஸ் 13



சமீப காலங்களில் ஐபோனுக்கான இயங்குதளமான ஐஓஎஸ் பதிப்புகள் எதுவும் அவ்வளவு சிறப்பான வரவேற்பைப் பெறவில்லை. அத்துடன் வாடிக்கையாளர் களுக்குப் பெருத்த ஏமாற்றத்தையே அளித்தது. தவிர, ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அதன் மீது வைத்தனர். அதனால் கடந்த ஆண்டில்  ஐஓஎஸ் இயங்குதளத்தை அடிக்கடி அப்டேட் செய்தது ‘ஆப்பிள்’.

இந்நிலையில் ‘ஐஓஎஸ் 13’ என்ற புதிய வெர்ஷனை களமிறக்கியிருக்கிறது ஆப்பிள். இதன் வடிவமைப்பில் பலவிதமான மாற்றங்களைச் செய்திருக்கிறது. இந்த மாற்றங்கள் முன்பே ஆண்ட்ராய்டு போன்களில் இருந்தாலும் ஐபோன் பயனாளி களுக்குப் புதிதாக இருக்கும்.

அதே நேரத்தில் ‘‘ஐபோனில் மட்டுமே பிரத்யேகமாக இந்த வசதிகள் உள்ளன...’’ என்று சொல்லுமளவிற்கு ஐஓஎஸ் 13 வந்திருப்பதாக விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படி அதில் என்னதான் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் கொஞ்சம் பார்ப்போம்.

டிஸ்பிளேவை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பதால் கண்கள் பாதிப்படைகிறது. பளிச்சென இருக்கும் அதன் வெளிச்சம் ஒரே மாதிரி இருப்பதால் விரைவிலேயே சலிப்புத் தட்டிவிடுகிறது.

கண்களை கூசாமல் டிஸ்பிளே இருந்தால் நல்லாயிருக்கும்  அல்லவா.  இதற்காகவே டார்க் மோடை இந்தப் புதிய இயங்குதளத்தில் அறிமுகம் செய்திருக்கிறார்கள். நமக்கு தேவைப்படும் போது டயல் பேடு, நோட்டிபிகேஷன்களை டார்க்காக மாற்றிக்கொள்ள முடியும். தேவையில்லை என்றால் டிஸ்பிளே பழையபடியே இருக்கும். இந்த வசதி முன்பே ஆண்ட்ராய்டு போன்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து மேப்பில் தனிக்கவனம் செலுத்தியிருக்கிறார்கள். எவ்வளவு முயன்றும் கூகுள் மேப்பின் பக்கத்தில் கூட நெருங்க முடியாமல் திணறியது ஆப்பிள் மேப். அதனால் மேப்பின் மொத்த வடி வமைப்பையே மாற்றியிருக்கிறார்கள். அத்துடன் உங்களின் இருப்பிடத்தை டிராக்கிங் செய்ய முடியாதபடி செக்யூரிட்டியை இறுக்கியிருக்கிறது ஆப்பிள்.

ஐபோனில் இருக்கும் Find My Friends மற்றும் Find My iPhone apps நீக்கப்பட்டு FIND MY என்ற ஆப் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொலைந்துபோன உரிமையாளரின் ஐபோனை ட்ராக் செய்வதோடு  மட்டுமல்லாமல் நமக்குத் தெரிந்தவர்களின் ஐபோனையும் ட்ராக் செய்ய முடியும். அடுத்து  ஆப்பிளில் மட்டுமே இருக்கும் ஒரு வசதி களில் ஒன்று அதன் வாய்ஸ் அசிஸ்டன்ட்டான ‘சிரி’. இதையும் பல வகைகளில் மேம் படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக ‘சிரி'யின் ஒலி அச்சு அசலாக மனிதர்கள் பேசுவதைப் போல   மாற்றப்பட்டுள்ளது.

இந்த ஐஓஎஸ் 13-ன்  இறுதிப் பதிப்பு வரும் செப்டம்பரில் வெளியாகிறது. இப்போது சோதனை வடிவம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. குறிப் பிட்ட சிலர் மட்டுமே இந்தச் சோதனையைச் செய்ய முடியும். 6S மற்றும் அதற்குப் பின் வெளியான ஐபோன் களில் மட்டுமே இந்தப் புதிய இயங்குதளம் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.