பாலத்தைக் காணோம்!



கார், மொபைல், பைக், நகை, பணம், டிவியைத் திருடிக்கொண்டு போய்விட்டார்கள் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ‘பாலத்தை திருடிட்டுப் போயிட்டார்கள்’ என்று எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ரஷ்யாவின் முர்மன்ஸ்க் என்ற இடத்துக்கு இப்போது விசிட் அடித்தால் பாலம் திருடுபோனதுதான் அங்கே ஹாட் டாக்.

வடிவேலுவின் ‘கிணத்தை காணோம்’ போன்ற சம்பவம் இது. முர்மன்ஸ்க் பகுதியில் உம்பா நதி ஓடுகிறது. அதன் மேல் 75 அடிக்கு ஒரு ஆற்றுப்பாலத்தை நிறுவியிருந்தார்கள். அதன் பெரும்பகுதி மெட்டலால் ஆனது. கொஞ்ச நாட்களுக்கு முன் பாலத்தின் சில பகுதிகள் உடைந்து கீழே தொங்கிக்கொண்டிருந்தன.

பாலத்துக்குக் கீழே நதி ஓடும் இடம் குப்பைகளால் நிறைந்து கிடந்தது. இதைப் புகைப்படமாக எடுத்து இணையத்தில் வெளியிட்டிருந்தனர். ஆனால், கடந்த வாரம், உடைந்துபோன பாலத்தைக் காணவில்லை. அத்துடன் நதியில் இருந்த குப்பையையும் காணவில்லை.

காணாமல் போன பாலத்தின் எடை சுமார் 50 டன் இருக்கும். அதிலிருந்த மெட்டல் கோடிகளுக்குப் போகும். இத்தனைக்கும் பாலத்துக்கு அருகில் மக்கள் வசித்து வருகின்றனர். அது பரபரப்பான ஓர் இடமும் கூட.

 ‘‘மெட்டல் திருடர்கள் தான் பாலத்தை திருடிக்கொண்டு போயிருப்பார்கள்...’’ என்று ஊர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாலத்தைக் காணோம் என்பது ஒரு விநோதம் என்றால் பாலம் திருடுபோனதுக்கான எந்த சுவடும் இல்லாதது இன்னொரு விநோதம். திருடர்களைப் பிடிப்பதற்காக  காவல்துறையினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். இப்படியான சம்பவம் நடப்பது முதல் முறையல்ல.

2008-ம் வருடம் இதே ரஷ்யாவில் சுமார் 200 டன் எடையுள்ள பாலம் திருடுபோயிருக்கிறது. திருடர்களைக் காவல்துறையினர் பிடித்து தண்டித்து வெளியே விட்டது தனிக்கதை. அந்தப் பழைய திருடர்கள்தான் இப்போதும் தங்களின் கைவரிசையைக் காட்டியிருப்பார்களோ என்ற கோணத்திலும் விசாரணை சென்றுகொண்டிருக்கிறது. இதனால் முர்மன்ஸ்க்கே பரபரப்பாக இருக்கிறது.