ஜில்லுனு ஒரு த்ரில்!



ஃபார்முலா, மெஷின், மின்னணு, வேதிவினை... இப்படி வலை பின்னித் திரியும் அறிவியல் சிலந்தி களிடமிருந்து 10 நாட்கள் தப்பிக்க வாய்ப்புக் கிடைத்தால் எப்படி இருக்கும்?
அதிலும் பனித்தூறல், மலைச்சாரல் என இயற்கையின் கருவறையில் வசிக்கும் தருணம் வாய்த்தால் யாரேனும் வேண்டாம் என்பார்களா?

சேலம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் மாணவிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் மூலம் அந்த அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. இதோ... முதல்முறையாக சாகசப் பயிற்சி முகாமுக்கு சென்று வந்திருக்கிறார்கள். ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள
தர்மசாலா சென்று திரும்பியிருக்கும் அவர்களைச் சந்தித்தோம். முகாமில் கிடைத்த உற்சாகம் முகத்திலும் குரலிலும் அப்பட்டமாகத் தெரிய பேசுகிறார்கள்...

‘‘ஹிமாச்சலப் பிரதேசத்துல அந்த மலையோட ஜில் க்ளைமேட்டை இப்போ நினைச்சாலும் நடுங்குது. மலையோட கைரேகை மாதிரி வளைஞ்சு வளைஞ்சு போற ஒத்தையடிப் பாதையில திக் திக் பயணம். கயித்துல தொங்கிக்கிட்டே ஆற்றைக் கடக்கணும். எனக்கு நீச்சலும் தெரியாது. மேலேயிருந்து கீழே பார்த்தா, போன ஜென்மம் கூட தெரியற மாதிரி பிரமை. அதுக்கு முன்னாடி சாகசம் செய்யறதைப் பத்தி கற்பனை கூட செஞ்சதில்லை. பயிற்சியாளர் ஆலோசனையை கவனமா பின்பற்றி ஆற்றைக் கடந்துட்டேன். கரையில இறங்கினதுக்கு அப்புறம்தான் உயிர் வந்துச்சு. பயத்தோட ஆரம்பிச்ச பயணம் பரவசங்களோட முடிஞ்சுது... தன்னம்பிக்கை வந்தது. மனசளவுல தயாராகிட்டா எந்த சாதனையும் ஈசின்னு புரிஞ்சுகிட்டேன். இது மாதிரியான அனுபவங்கள் பெண்களோட மன உறுதியை இன்னும் வலிமைப்படுத்தும்’’ - திகைக்க வைத்த சுவாரஸ்ய அனுபவங்களை விழி விரிய விவரிக்கிறார் அனுஜா.

‘‘தென்றல்னா பயம்னுதான் அர்த்தம். அதையே மாத்தி எழுதிடுச்சு இந்தப் பனிப்பயணம்’’ என்று சிலிர்க்கிறார் மாணவி தென்றல். ‘‘ஒரு வழியா டிரெக்கிங் முடிச்சிட்டேன்... கேம்ப்புக்கும் போயாச்சு... வலுக்கட்டாயமா பல பேர் சேர்ந்து பிடிச்சித் தள்ளினதுக்கு அப்புறம்தான் ஒவ்வொரு பயிற்சியா செய்ய ஆரம்பிச்சேன். ‘பாராகிளைம்பிங்’... மத்தவங்க செய்யறதைப் பார்த்தவுடனேயே கிலி பிடிச்சுக்கிச்சு. முதல்ல போக மாட்டேன்னு சொன்னேன். ஆனா, தப்பிக்க முடியலை. பனி மலைப்பகுதியில அந்த அனுபவம் ஆயுசுக்கும் மறக்க முடியாதது. ராத்திரி, வெளிச்சம் இல்லாத காட்டுக்குள்ள ஒருத்தரோட ஒருத்தர் கயிற்றைக் கட்டிக்கிட்டுப் பயணம் செய்யணும். எனக்கு அழுகையே வந்துடுச்சு.

கூட வந்தவங்க என்னைத் தேற்றி இழுத்துட்டு போனாங்க. இருட்டு, பூச்சிகளோட சத்தம் எல்லாம் சேர்ந்து வயித்தைக் கலக்கிடுச்சு. ஒரு வழியா பத்திரமா திரும்பினதும் எங்களோட வழிகாட்டி ஷகிலா மேடம் என்னைக் கட்டிப் பிடிச்சு சந்தோஷத்தை வெளிப்படுத்தினாங்க. ஊருக்கு கிளம்பினப்போ அதுக்குள்ள கேம்ப் முடிஞ்சிடுச்சான்னு இருந்தது. இப்போ தென்றல்னா தைரியம்னு அர்த்தம்...’’ - சிரிக்கிறார் தென்றல்.

ஷீபாவுக்கு ஹிமாச்சல் அனுபவம் ரொம்ப ‘எக்ஸைட்டிங்’ ஆக இருந்ததாம். ‘‘இதுவரை இப்படி ஒரு ட்ரிப்பை யோசிச்சுக் கூட பார்த்ததில்லை. கும்மிருட்டு... கையில ஒரு கயிறு... 20 பேரையும் இணைக்கிற ஒற்றைப் பந்தம் அதுதான். கயிற்றோட அசைவுதான் மனம் உணரும் வெளிச்சம். தட்டுத் தடுமாறி, பயந்து பயந்து ஒரு மணி நேரம் ஜங்கிள் வாக் முடிச்சுட்டு திரும்பினப்போ, ‘இதையே பண்ணிட்டோம்... இனி எதை வேணாலும் பண்ணலாம்’னு நம்பிக்கை வந்துடுச்சு.

 இருட்டுக்குள்ளயும் ஒரு வெளிச்சம் இருக்கு. அது கண்களால் உணர முடியாத வெளிச்சம். நிசப்தத்தை இசைக்கும் காற்றின் ஓசை... பறவைகள், பூச்சிகளின் உரையாடல்னு யாரோ யாருக்கோ குட்டிக் கதைகள் சொல்லி, தட்டிக் கொடுப்பது போல இருந்தது. அவ்வளவு ஜில் க்ளைமேட்டில் எந்தப் பிரச்னையும் இல்லாம இயங்க முடிஞ்சது ஆச்சரியம். மலை ஏறுவதற்கான சக்தியை ‘பேலன்ஸுடு டயட்’ கொடுத்தது. முதல்ல, ‘நம்மால முடியுமா’ன்னு தோணினாலும், அதுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் சின்னச் சின்ன யுக்திகள், மலை ஏறும்போது நம் உடலை காற்றைப் போல லேசாக மாற்றிடுது. பாராகிளைம்பிங் பண்ணும் போது பனிமலைச்சாரலில் ஒரு பறவையைப் போல உணர்ந்தேன்...’’ - பரவசப்படுகிறார் ஷீபா.

‘‘ஹிமாச்சல் ட்ரிப் வாழ்க்கையை எவ்வளவு எளிமையாக வாழ முடியும்னு உணர்த்தியது. வழி தெரியாமல் காட்டுக்குள்ள மாட்டிக்கிட்டா அங்கே இருக்கும் பொருட்களைக் கொண்டே எப்படி வாழறதுன்னு டிவில பார்த்திருப்போம். அதை நடைமுறைல செஞ்சு பார்த்தோம். காட்டுல நாங்களே டென்ட் அமைச்சு தங்கினோம். வீட்டுல சின்ன அசௌகரியம் இருந்தாக்கூட டென்ஷன் எகிறும். ஆனா, அந்த மலைப்பகுதியில, கடும் குளிர்ல குட்டி டென்டுக்குள்ள அட்ஜஸ்ட் செஞ்சுகிட்டு படுத்துத் தூங்கினோம்.

கிடைச்சதைச் சமைச்சு சாப்பிட்டோம். எளிய வாழ்க்கை அவ்வளவு அழகு! ‘பிரச்னைகளும் அவற்றுக்கான எளிய தீர்வுகளும் வாழ்க்கையை சுவாரஸ்யமாகவும் இனிமையாகவும் மாற்றும்’கிற உண்மை புரிஞ்சுது. நாட்டு எல்லையில பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவத்தினரின் பணி எவ்வளவு மகத்தானது என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைச்சது’’ என்கிறார் சுமதி.

‘‘காலைல எந்திரிக்கிறதுலருந்து ஒவ்வொரு வேலையையும் முடிக்கிறது வரைக்கும் எல்லா விஷயத்துலயும் நேரத்தைக் கையாள்றது எவ்வளவு முக்கியம்னு புரிஞ்சுது. புதுமையான உணவு, புதிய சூழல்னு வித்தியாசமான அந்த வாழ்க்கைமுறை பிடிச்சிருந்தது. பழக்கம் இல்லாத பயிற்சியைக் கூட விடாமுயற்சியோட செஞ்சா அதுல விஸ்வரூப வெற்றியை அடைய முடியும். வருஷத்துக்கு ஒரு தடவை இது மாதிரி அனுபவம் கிடைச்சா விடலைத்தனமான குறும்புகள் நம்மை விட்டு ஓடும்... பொறுப்புகள் புரியும்’’ என்கிறார் ஹரிசுதா.

இந்தப் பெண்களை வழிநடத்திச் சென்ற ஏஞ்சலின் ஷகிலா சொல்கிறார்... ‘‘என்னோட எடைக்கு சம தரையில வாக்கிங் போறதே கஷ்டம்... எப்படி மலை ஏறப்போறேங்கிற சந்தேகத்தோடதான் ஹிமாச்சல் ட்ரிப் கிளம்பினேன். பயிற்சியாளர்கள் கொடுத்த டிப்ஸை கடைப்பிடிச்சேன்... ஏறிட்டேன். மாணவர்களின் அனைத்து பயிற்சிகள்லயும் நானும் கலந்துகிட்டேன். பெண்களுக்கு சாகசம் புரியறதுக்கான வாய்ப்புகள் அளிக்கப்படும்போது அது எந்தளவுக்கு தன்னம்பிக்கையை உயர்த்தும்னு முழுசா புரிஞ்சுகிட்டேன்!’’

சாகசத் திட்டத்தில் சம உரிமை!

‘ராஜீவ்காந்தி சாகசத் திட்டம்’ 2009 ஜூன் 26 அன்று அறிமுகம் செய்யப்பட்டது. மாணவர்கள் மத்தியில் சாகச அனுபவங்களை உருவாக்குவதே இதன் நோக்கம். இத்திட்டத்தில் ஆண்டுக்கு இரண்டாயிரம் நாட்டு நலப்பணித்திட்ட (NSS) மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. மாணவிகளுக்குச் சம உரிமை வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஆயிரம் மாணவிகள் சாகசப் பயிற்சியில் பங்கேற்கிறார்கள். வட இந்தியாவில் ஹிமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் பாலைவனம், தென்னிந்தியாவில் தேக்கடி, குன்னூர் ஆகிய இடங்களில் 10 நாட்கள் வரை இந்த சாகச முகாம் நடத்தப்படுகிறது.

பழக்கம் இல்லாத பயிற்சியைக் கூட விடாமுயற்சியோட செஞ்சா அதுல விஸ்வரூப வெற்றியை அடைய முடியும்!


- ஸ்ரீதேவி