பயனங்களை படிக்கிறேன்



காவ்யா பிரபுகுமார்
சுற்றுலா திட்ட வடிவமைப்பாளர்
தாமஸ் குக் (டிராவல் நிறுவனம்), சென்னை.

‘ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல...’ வைரமுத்து வரிகளில், எஸ்.பி.பி. பாடுவதைக் கேட்கும் போது உண்மை என்றுதான் தோன்றும். 40 வயதுக்கு மேலாவது எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, பயணம் செய்து நான்கு இடத்தை சுற்றிப் பார்க்க வேண்டுமல்லவா? ஆனால், பலருக்குச் சுற்றுலா செல்ல வேண்டும் என்கிற நினைப்பு வருவதில்லை. சிலர் அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிப்பதே இல்லை. முக்கியமாக பெண்கள் குடும்பமே உலகம் என்று இருந்தார்கள் பல காலமாக...

கணவனோ, குடும்ப உறுப்பினர்களோ எங்கேயாவது அழைத்துச் சென்றால்தான் வெளிச்சமும் வெளி உலகமும் தெரியும். இன்றைக்கு நிலைமை மாறி வருகிறது. சுற்றுலா செல்வது ஒருபுறம் இருக்கட்டும்... சுற்றுலா தொடர்பான படிப்புப் படித்து, அது தொடர்பான துறையில் தனித்துவமும் பெறலாம் என நிரூபித்து வருகிறார்கள் பல பெண்கள். அவர்களில் ஒருவர் காவ்யா பிரபுகுமார். 

‘‘பயணம் பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது. புதுப்புது அனுபவங்களை அறிமுகப்படுத்துகிறது. பயணத்தால்தான் ஒரு மனிதனின் பொது அறிவு விசாலமாகிறது. அப்படிப்பட்ட பயணம் தொடர்பான அத்தனை விஷயங்களையும் கற்றுத் தரும் ‘டூரிஸம்’ கோர்ஸ் படிச்சது எனக்குக் கிடைச்ச வரம்னே சொல்லலாம்’’ என்று சிரித்த முகமாகப் பேச்சைத் தொடங்கு கிறார் காவ்யா.

‘‘பிறந்தது சேலத்துல... படிச்சதெல்லாம் பெங்களூர்ல. ஸ்கூல் படிப்பு முடிஞ்சதும் அண்ணாமலை பல்கலைக்கழகத்துல பி.பி.ஏ. ஏவியேஷன் மற்றும் டிராவல் மேனேஜ்மென்ட் கோர்ஸுக்கு அப்ளை பண்ணினேன். தொலைதூரக் கல்வி முறையில 3 வருஷம் படிச்சேன். விமானத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், அவர் களை அணுகும் முறை, அவர்கள் தங்குவதற்கான வசதிகளை செய்து கொடுக்கும் வழிமுறைகள், ஏர்ஹோஸ்டஸ் விதிமுறைகள், அவர்களின் நடை, உடை, பாவனை எப்படி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்களை அந்தப் படிப்பில் கத்துக் கொடுத்தாங்க. இடையில் தனியார் ஏர்வேஸ்ல ஒன்றரை வருஷம் ஏர்ஹோஸ்டஸ் ஆக வேலை பார்த்தேன்.

இந்தப் படிப்பு முடிஞ்சதும் அடுத்து என்ன செய்யப் போறோம்கிற கேள்வி வரவே இல்லை. ஏன்னா, நான் டூரிஸம் லைன்லதான் இருக்கணும்னு ஆசைப்பட்டேன். புதுச்சேரி பல்கலைக்கழகத்துல எம்.பி.ஏ. டூரிஸம்... 2 வருடப் படிப்பு... சேர்ந்துட்டேன். அந்த ரெண்டு வருஷத்துல சுற்றுலா உலகம் எப்படிப்பட்ட தனி உலகம்னு புரிஞ்சுது. தனியார் பஸ் டிராவல்ஸ் நடத்தும் நிறுவனரைக் கூட்டிட்டு வந்து பேச வைக்கிறதுல ஆரம்பிச்சு, ஒரு பயணத்தை நாமே வடிவமைக்கிற வரைக்கும் சொல்லிக் கொடுத்தாங்க. நிறைய செமினார், ட்ரிப்னு அந்தப் படிப்பு ரொம்ப இன்ட்ரஸ்டிங். ஒருமுறை கொடைக்கானல் போயிருந்தோம்.

எல்லாரும் போற வழக்கமான இடங்களுக்கு போகாம, த்ரில்லிங்கா ஏதாவது கிடைக்குமான்னு தேடி அலைஞ்சோம். கையில கம்பு, தோள்ல பேக்னு ட்ரெக்கிங் கிளம்பினோம். மலைல ஏறினோம், பள்ளத்தாக்குல இறங்கினோம், சில குகைகளுக்குள்ள நுழைஞ்சு பார்த்தோம். எங்களைப் பொறுத்த வரைக்கும் அது பெரிய அட்வென்ச்சர்! அதுக்கப்புறம் பாரம்பரிய விஷயங்கள் தொடர்பான பயணத்துல எங்க கவனம் திரும்பிச்சு. அந்த வகைல நாங்க போனது தஞ்சை பெரிய கோயிலுக்கு. இப்படி பலவிதமா டிராவல் பண்ணினோம்.

ரெண்டாவது வருஷம் படிக்கும்போது ஒரு புராஜெக்ட்... 22 நாள் சுற்றுப் பயணம்... நாங்களே திட்டமிட்டு, வெற்றிகரமா போயிட்டு திரும்பி வரணும். ரொம்ப கஷ்டமான அதே நேரம் என்ஜாய் பண்ற ஒரு அனுபவமா அது இருந்துச்சு. எத்தனை பேர் போகணும், எங்கே தங்கணும், எந்த ஊருக்கு, எப்படிப் போகணும் எல்லாத்தையும் முடிவு செஞ்சு டிக்கெட் புக் பண்றது வரை எல்லா வேலைகளையும் நாங்களே கவனிச்சுகிட்டோம். சென்னையில இருந்து ராஜஸ்தான், ஆக்ரா, சண்டிகர்னு 22 நாட்களுக்கான பயணத் திட்டத்தை நாங்களே
வடிவமைச்சது சுவாரஸ்யமான விஷயம்.

படிப்பு முடிஞ்சது. ‘தாமஸ் குக்’ டிராவல் கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். அது முழுக்க முழுக்க பயணம், அது தொடர்பான பணிகள் சார்ந்த நிறுவனம். விடுமுறை நாட்கள்ல டூர் போறவங்க, அலுவலக சம்பந்தமான கார்ப்பரேட் கம்பெனி களின் டூர், இதுக்கெல்லாம் ஏற்பாடு செய்வது,

மணி டிரான்ஸ்ஃபர், விசா, பாஸ்போர்ட் எடுத்துக் கொடுக்குறதுன்னு பல பணிகளை எங்க நிறுவனம் செய்கிறது. பல வேலைகளை தனித்தனியாக செய்ய வேண்டி இருக்கும். அவை எல்லாம் முழுமையாகும் போதுதான் ஒரு பயணத் திட்டம் வெற்றிகரமா முடியும்.

டிசம்பர்லருந்து ஜூன் மாதம் வரைக்கும் எங்களுக்கு வேலை அதிகமாக இருக்கும். மற்ற சீசன்ல அப்படி இருக்காது. ‘ஹனிமூன் ட்ரிப்’, ‘பிசினஸ் ட்ரிப்’ மாதிரியான வேலைகள்தான் இருக்கும். ஒரு புதுவிதமான சூழலைத் தேடி பயணம் செய்யறவங்க கூட இருக்காங்க. ‘ட்ரெக்கிங்’, ‘ஈகோ டூரிஸம்’, ‘வைல்டு லைஃப் டூரிஸம்’னு விதவிதமான சுற்றுலா கனவுகளோட வர்றவங்களும் இருக்காங்க. 2016ல கனடா ஸ்பேஸ் சென்டர்ல இருந்து, ‘ஸ்பேஸ் டூரிஸம்’ போக திட்டம் போட்டிருக்காங்க.

அதாவது, விண்வெளிக்கு ராக்கெட் மூலமாக போயிட்டு வர்றது! த்ரில்லிங்கான அந்த அனுபவத்துக்கு இப்பவே நிறைய பேர் போட்டி போட்டுட்டு புக் பண்ணி இருக்காங்கங்கறது ஆச்சரியமான உண்மை. இதற்கு ரூ.1 கோடி கட்டணம் செலுத்த வேண்டி யிருக்கும். ஆனாலும், பணத்தை பெரிசா நினைக்காம பயணத்தையும் வித்தியாசமான அனுபவத்தையும் ரசிக்கறவங்க இருக்கத்தான் செய்யறாங்க.

குஜராத் மக்கள் பொதுவாகவே தங்களோட வருமானத்துல 40 சதவிகிதத்தை பயணத்துக்காக செலவழிக்கறவங்க. மாசத்துக்கு ஒரு தடவை  எங்கேயாவது கிளம்பிப் போயிடுவாங்க. ஆனா, இப்பதான் புது அனுபவம் தேடி, பயணம் செய்யும் ஆர்வத்துல வர்றவங்க இங்கே அதிகமாகிட்டு இருக்காங்க. ஏதோ ஒரு வெளிநாட்டுக்குப் போகணுமா? அதுக்காக லட்சக்கணக்குல செலவு பண்ணணும்கிற அவசியம் இல்லை. மிகக்குறைந்த செலவுலயும் போயிட்டு வரலாம். அதுக்கேத்த மாதிரி பிளான் பண்ணி கிளம்பினா போதும்.

கேரளாவில் ‘டூரிஸம்’ என்ற ஒரு வார்த்தைக்கு அத்தனை மதிப்பு! அவங்களுக்கு சுற்றுலாத் துறையின் மூலம் வர்ற வருமானம்தான் அதிகம். நம்ம ஊர்ல அந்தளவுக்கு சுற்றுலாவை ப்ரமோட்
பண்றதில்லை. அந்த வருத்தம் எனக்கு நிறையவே இருக்கு.

நான் இந்தியாவுல பல இடங்களுக்கு டிராவல் பண்ணியிருக்கேன். உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கணும்கிற ஆசை எனக்குள்ள நிறைய இருக்கு. அந்தக் கனவு நிஜமாகப் போற நாட்களுக்காக ஒவ்வொரு நாளும் காத்திருக்கேன். நான் பயணங்களின் காதலி...’’ - சொல்லும் போது கண்
கள் பட்டாம்பூச்சியாகப் படபடக்கிறது காவ்யாவுக்கு.

டூரிஸம் படிக்க விருப்பமா?
வழிகாட்டுகிறார் புதுச்சேரி பல்கலைக்கழக டூரிஸம் துறைத் தலைவர் டாக்டர் யெட்லா
வெங்கடராவ்...

‘டூரிஸம்’ படிப்பு இப்போது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக ஆகிவிட்டது. உள்ளூர் பயணங்கள் தொடங்கி வெளி மாநிலம், வெளிநாடுகள் என்று பயணம் செய்கிறவர்களுக்கு பல வழிகளில் இந்தப் படிப்பை முடித்தவர்கள் தேவைப்படுகிறார்கள். அதாவது, டிராவல் கைடு, டிராவல் டிசைனர் என பலவிதமான வேலைகளுக்கு...

பி.ஏ. டூரிஸம் மேனேஜ்மென்ட் என்ற இளங்கலைப் பட்டத்தை சென்னை எத்திராஜ் கல்லூரி, ஊட்டி அரசு கலைக் கல்லூரி, கோயம்புத்தூர் அரசுக் கல்லூரிகளில் படிக்கலாம். வருடத்துக்கு ரூ.10 ஆயிரம் செலவாகும். தனியார் கல்லூரிகளில் இதைவிட அதிகமாகும். முதுகலைப்பிரிவில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. டூரிஸம் படிக்கலாம். 2 வருட படிப்பு.

பெங்களூரு பிரிஸ்ட் பல்கலைக்கழகம், மங்களூர் உள்ளிட்ட இடங்களிலும் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. இதைப் படிக்க ரூ.80 ஆயிரம் வரை செலவாகும். டிப்ளமோ இன் டூரிஸம் பிசினஸ் மேனேஜ்மென்ட், பிஜி (றிநி) டிப்ளமோ இன் டிராவல் அண்ட் டூரிஸம் மேனேஜ்மென்ட், பிஜி டிப்ளமோ இன் டூரிஸம் மேனேஜ்மென்ட், பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் டூர் மெனேஜ்மென்ட், டூர் ஆபரேஷன், டிராவல் அண்ட் டூரிஸம்  என்பவையும் சுற்றுலா தொடர்பான படிப்புகளே! சில பல்கலைக்கழகங்களில் தொலைதூரக் கல்வியாகவும் சில கல்லூரிகளில் முழுநேர படிப்பாகவும் கிடைக்கின்றன. வருடத்துக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகும்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களிலும் தொலைதூரக் கல்வி முறையிலும் பகுதி நேர படிப்பாகவும் கிடைக்கிறது. சில திறந்தவெளி பல்கலைக்கழகங்களிலும் படிக்கலாம். அதிக அளவில் களப்பணி செய்ய வேண்டியிருக்கும். சுற்றுலாத்துறை, தனியார் டிராவல்ஸ் நிறுவனங்கள், ஹோட்டல்களில் வேலை கிடைக்கும்.

- எஸ்.பி.வளர்மதி
படங்கள்: ஆர்.கோபால்