எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?





காலையும் மாலையும் சாலைகளில் பயணிப்பதே சவாலான அனுபவமாக மாறிவிட்டது. அதுவும் பள்ளிக்கூடங்கள் இருக்கும் சாலைகளில், கேட்கவே வேண்டாம். அவ்வளவு மூச்சுத்திணறல். எங்கெங்கு நோக்கினும் மஞ்சள் நிறப்பேருந்துகள்... வேன்கள்... ஆட்டோக்கள். பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு அவசர அவசரமாக வாகனங்களை ஓட்டிவரும் பெற்றோர்களைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. மழை நாட்களிலோ கொடுமையோ கொடுமை!
 

வீதிக்கு வீதி சகல வசதிகளோடு அரசுப்பள்ளிகள் ‘வா வா’ என வரவேற்றுக் காத்திருக்க, ஒன்றுமில்லாத ஏழைகளுக்குத்தான் அரசுப்பள்ளிகள் என்ற மனோபாவம் மிடில் கிளாஸ் மக்களுக்கும் வந்துவிட்டது. மக்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க தனியார் பள்ளிகள் மூலைக்கு மூலை முளைத்து விட்டன. ஆனால், ‘குறிப்பிட்ட சில பள்ளிகள் மட்டுமே சிறந்த பள்ளி’ என்பதும், ‘அங்கு படித்தால் மட்டுமே குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்’ என்பதும் பெற்றோரின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்த மோகத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் பள்ளிகள், பாக்கெட்டில் பசையுள்ளவர்களை குறிவைத்து வளைத்துப் போட்டுக்கொண்டு மற்றவர்களை புறம் தள்ளி விடுகின்றன. பல பள்ளிகளில் அட்மிஷன் கேட்டுவரும் பெற்றோரை புழுக்களைப் பார்ப்பது போல பார்க்கிறார்கள். நம் மக்களும் இரவிலிருந்தே காத்திருந்து விண்ணப்பங்களைப் பெற்று பள்ளியில் சேர்த்தால்தான் ஆயிற்று என்று அடம்பிடிக்கிறார்கள்.

உலகின் பல நாடுகளில் நடைமுறையில் இருக்கும் ‘அருகாமைப் பள்ளி’ என்ற கான்செப்டே தமிழகத்தில் தோல்வியைத் தழுவி விட்டது. சில கல்வி நிறுவனங்கள், ‘பள்ளிப் பேருந்துகள்’ என்ற பெயரில் போக்குவரத்துத் தொழிலையும் வெற்றிகரமாக நடத்துகிறார்கள். அதற்காகவே அருகாமையில் இருக்கும் பிள்ளைகளை தங்கள் பள்ளியில் சேர்த்துக்கொள்வதில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள் பெற்றோர்கள்.

குங்குமம் தோழியின் வாசகி லதா ராமனின் அனுபவமே இதற்குச் சான்றாக இருக்கிறது.
“ரெண்டு வருஷம் லண்டன்லயும், 15 வருஷம் ஆப்பிரிக்காவிலயும் வாழ்ந்தோம். லண்டன்ல ஒன்றரை கிலோமீட்டருக்கு ஒரு ஸ்கூல் இருக்கும். பிள்ளைகளுக்கு எந்த கஷ்டமுமே இருக்காது. பள்ளிப்பேருந்துகளே பார்க்க முடியாது. மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் சில பேருந்துகள் ஓடும். ‘ஏழை நாடு’ன்னு இளக்காரமாப் பேசுற ஆப்பிரிக்காவில கூட அருகாமையில உள்ள பள்ளிகள்ல குழந்தையை சேர்த்துக்கணும்னு சட்டம் இருக்கு. போக்குவரத்துக்கு ஒரு ரூபாய் கூட செலவு பண்ணத்தேவையில்லை.

குழந்தையை நம்ம பண்பாட்டோட வளக்கணுங்கிறதுக்காக, கணவரோட வேலையை ரிசைன் பண்ணிட்டு சென்னைக்கு வந்தோம். தி.நகர்ல பிரபலமான ஒரு பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்தில  ஃபிளாட் வாங்கினோம். வீட்டுக்கு அருகில் இருந்த பள்ளிக்கூடம் என் மகளோட அதே பாடத்திட்டத்தைக் கொண்டிருந்ததால், அங்கே ஏழாம் வகுப்புக்கு அட்மிஷன் கேட்டோம். ஆனா, அட்மிஷன் தரலே. ‘ஸ்கூல் பக்கத்திலேயே வீடு இருக்கு சார். பயணம் செய்ற சிரமம் இல்லை. அதுக்காகவாவது அட்மிஷன் கொடுங்க’ன்னு கெஞ்சினோம். ஆனாலும், எந்தக் காரணமும் சொல்லாமல் நிராகரிச்சுட்டாங்க. மற்ற பெற்றோர்கிட்ட பேசுறப்போதான் தெரிஞ்சுது, ‘ஸ்கூல் பஸ்ல வர்றவங்களுக்குத்தான் அட்மிஷன்ல முக்கியத்துவம் கொடுப்பாங்க’ன்னு. வேறு வழியில்லாம 8 கி.மீ. தொலைவில இருக்கிற பட்டினப்பாக்கத்தில சேர்த்தோம்.

தமிழ்நாட்டுல தனியார் பள்ளிகள் கல்வியைத்தான் வியாபாரமா மாத்திட்டாங்கன்னு நினைச்சா, அதையும் தாண்டி பல தொழில்கள் நடந்துக்கிட்டிருக்கு. அரசுப்பள்ளிகளைப் போல தனியார் பள்ளிகளும் அருகாமையில் இருக்கும் மாணவர்களுக்குத்தான் முக்கியத்துவம்தரணும்னு அரசு ஒரு சட்டம் போடணும்...’’ என்று குமுறுகிறார் லதா.

அருகாமைப் பள்ளிகளே குழந்தைகளின் நலனுக்கு ஏற்றவை என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகிறார்கள். மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த கல்வி உரிமைச்சட்டமும் அருகாமைப் பள்ளியை வலியுறுத்துகிறது. தனியார் பள்ளிகளும் அருகிலிருக்கும் மாணவர்களுக்கு இடமளிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே 25 சதவிகித இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. ஆனால், அதை ஏதாவது ஒரு விதத்தில் சமன்படுத்தி, பள்ளிப் பேருந்து மூலம் இன்னொரு கூடுதல் லாபத்தை ஈட்டவே பல தனியார் பள்ளிகள் முயற்சிக்கின்றன.

நெடுங்காலமாக அருகாமைப் பள்ளி, பொதுப்பள்ளி முறையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் ‘பொதுப்பள்ளிக்கான மாநில மேடை’ அமைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம்...

‘‘குழந்தையின் உடல்நலம் மட்டுமின்றி மனநலத்துக்கும் உகந்தது அருகாமைப் பள்ளிதான். அதில் 2 பலன்கள் உண்டு. குழந்தைகளின் படிப்பில் போக்குவரத்துக்கு மிகப்பெரும் தொகையை செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அதை மிச்சப்படுத்தலாம். பெருமளவு பெட்ரோல் பயன்பாட்டையும் மிச்சப்படுத்த முடியும். அதனால் அரசாங்கத்துக்கு அன்னிய செலாவணி மிச்சமாகும். கரியமில வாயுவின் தாக்கத்தில் ஆங்காங்கே அமில மழையே பொழியத் தொடங்கியிருக்கிறது. பெட்ரோல் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் உலகையே அச்சுறுத்தும் ‘புவி வெப்பநிலை உயர்வு’ பிரச்னையை ஓரளவு

சமாளிக்கலாம். சென்னையில் மட்டும் பல நூறு பள்ளிப் பேருந்துகள் சாலையை அடைத்துக்கொண்டு ஓடுகின்றன. விபத்துகளைத் தடுக்கவும் அருகாமைப் பள்ளி உதவும்.

அருகாமைப் பள்ளியில் படிந்திருந்தால் ஸ்ருதி பலியாகி இருக்கமாட்டாள். பிள்ளையை பேருந்தில் அனுப்பிவிட்டு பெற்றோர் படுகிற பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. தொலைக்காட்சியில், நாளிதழ்களில் ஒரு செய்தி வந்துவிட்டால் போதும்... பெற்ற மனம் பதறுகிறது.

தனியார் பள்ளிகள் பள்ளிப் பேருந்துகளைத் தனித் தொழிலாகத்தான் நடத்துகின்றன. வாகனங்களில் செல்லும் பிள்ளைகள் மிகப்பெரும் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். முதுகில் மிகப்பெரும் மூட்டை... டிரைவரில் இருந்துகிளீனர், பள்ளி வாட்ச்மேன் வரை எல்லோரி¢ன் அதட்டலுக்கும் மிரட்டலுக்கும் குழந்தை ஆளாக வேண்டியிருக்கிறது. ஆளாளுக்கு குழந்தைக்கு ஆணை பிறப்பிக்கிறார்கள்.

இதனால் ஏற்படும் மன அழுத்தம் குழந்தையை வெகுவாக பாதிக்கிறது. ஆறேழு மணி நேரம் பள்ளியில் சிக்குண்டு கிடக்கும் குழந்தை 2 மணி நேரம் பயணத்துக்காக இழக்க வேண்டியிருக்கிறது. இன்றுள்ள கல்விச்சூழலில் குழந்தைகளுக்கு அவர்களுக்கான நேரத்தை நாம் ஒதுக்குவதே இல்லை. அருகாமைப் பள்ளியில் படிக்க வாய்ப்புக் கிடைத்தால் அந்த 2 மணி நேரத்தை குழந்தை, தனக்கான நேரமாக, தனக்குப் பிடித்த வேலைகளில் செலவிட முடியும். கிரிக்கெட் விளையாடலாம். நூலகத்துக்குச் சென்று வாசிக்கலாம். நண்பர்களோடு பேசலாம். கல்விச்சூழல் அளிக்கிற மிதமிஞ்சிய அழுத்தம் குறைய வாய்ப்பிருக்கிறது.

அருகில் இருக்கும் பள்ளியில் படித்தால் நிதானமாகக் கிளம்பி, இதமாக நடந்தே பள்ளிக்குச் செல்லலாம். காலையில் சமைத்த காய்ந்துபோன உணவையே வைத்துத் திணிக்காமல், பிற்பகலுக்கு அப்போது செய்த உணவை பெற்றோரே பள்ளிக்குக் கொண்டுபோய் கொடுக்கலாம்... ஊட்டியும் விடலாம். அந்தத் தருணங்களில் ஆசிரியைகளோடு பேசலாம். பள்ளிக்கூடத்தில் ஏதாவது பிரச்னை என்றால் பெற்றோரும் அறியலாம்.

அருகாமைப் பள்ளி சமூகப் பள்ளியாகவும் செயல்படும். வீட்டுக்கு அருகில் பள்ளி இருப்பதில் மாணவனுக்கு பல லாபங்கள் உண்டு. தம் ஊரைப்பற்றி தெள்ளத்தெளிவாக அறிந்து கொள்ளமுடியும்.

உள்ளூரில் இருக்கும் பிரச்னைகளை புரிந்து கொள்ள முடியும். தமிழகத்தில் இதெல்லாம் வெறும் கனவாகவே இருக்கிறது. எந்த தனியார் பள்ளியும் அருகாமையில் இருக்கும் மாணவர்களை சேர்த்துக் கொள்வதில்லை. ஒவ்வொரு அசைவிலும் பணம் பார்க்கவே குறியாக இருக்கிறார்கள். இது ஒரு சாபக்கேடு. அரசாங்கத்தின் அணுகுமுறையும் தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதாகவே இருக்கிறது.

அருகாமை ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் 25 சதவிகிதம் இடமளிக்க வேண்டும் என்று சொல்கிறது கல்வி உரிமைச்சட்டம். இதில் வேடிக்கை என்னவென்றால் 2 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் இருக்க வேண்டுமாம். இந்தியாவில்  80 சதவிகிதம் பேர் அன்றாடம் 20 ரூபாய்க்கும் கீழே சம்பாதிக்கிறார்கள் என்று அறிக்கை கொடுக்கிறார் மத்திய திட்ட கமிஷன் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா. இங்கே யார் ஏழைகள்? ஒரு நாளைக்கு 20 ரூபாய் சம்பாதிப்பவர்களா? வருடத்துக்கு 2 லட்சம் சம்பாதிப்பவர்களா? அழுகிற குழந்தையை ஏமாற்ற லாலிபாப் கொடுப்பது போல அருகாமைப் பள்ளி உரிமை கேட்பவர்களின் வாயை அடைப்பதற்காக அரசு இந்த இட ஒதுக்கீட்டை அறிவித்திருக்கிறது. இதைத்தான் தனியார் பள்ளிகள் ஊக்கமாக எடுத்துக்கொள்கிறார்கள். அரசு சமரசம் இல்லாமல் சாட்டையை முடுக்காத வரை இந்த அவலம் தீராது...’’ என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

‘‘கட்டுமானம் தொடங்கும்போதே அட்மிஷன் ஆரம்பித்துவிடும் தனியார் பள்ளிகள் வங்கிக்கடன் பெற்று பேருந்துகளை வாங்கிக் குவித்து விடுகிறார்கள். அவர்கள் தீர்மானிப்பதுதான் கட்டணம்.

குழந்தைகள் மீதான பெற்றோரின் அக்கறையை பலவீனமாக மாற்றி காசு பறிக்கிறார்கள்.

கல்வி முற்றிலும் வணிகமயமாகிவிட்ட இக்காலக்கட்டத்தில், கிடைப்பதில் எல்லாம் லாபம் பார்க்கத் துடிக்கிறார்கள். அருகாமைப் பள்ளித் திட்டம் கல்வியாளர்களால் முன்மொழியப்பட்டு அரசின் கல்விக்கொள்கையிலும் இடம்பெற்றுள்ளது. அரசுப்பள்ளிகளில் அது 100 சதவிகிதம் நடைமுறையில் இருக்கிறது. ஆனால், வழக்கம்போல தனியார் பள்ளிகள் அந்த விதியை மதிப்பதில்லை. அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அமைதியாக வேடிக்கை பார்க்கிறது. புற நகரங்களில் உள்ள பள்ளிப் பேருந்துகளில் தகுதியான ஓட்டுனர்களைக்கூட நியமிப்பதில்லை. நீதிமன்றம், பள்ளிப்பேருந்துகளின் பாதுகாப்புக்காக பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. பல பள்ளிகள் அதையெல்லாம் மதிப்பதில்லை.

ஒருசில பள்ளிகளைத் தவிர பெரும்பாலான பள்ளிகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட அதிகமாகவே வாங்குகிறார்கள். தர மறுக்கும் பெற்றோரின் பிள்ளைகளை கட்டம் கட்டி துன்புறுத்துகிறார்கள். நன்கொடை, டியூஷன் ஃபீஸ், லேப் ஃபீஸ், நூலகக் கட்டணம், விழா கட்டணம், கிளப் ஃபீஸ் என்று பிய்த்துத் தின்கிறார்கள். வாங்குகிற பணத்துக்கு முறையாக ரசீதும் தருவதில்லை.

சகோதரி லதா ராமனைப் போன்ற பலர் அரசுப் பள்ளிகளை தவிர்ப்பதற்குக் காரணம், அங்குள்ள கல்வித்தரம்தான். தனியார் பள்ளிகளை மனம்போன போக்கில் செயல்பட விடுகிற அரசு குறைந்தபட்சம் அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காகவேணும் திட்டங்கள் வகுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகள் கண்டிப்பாக அரசுப்பள்ளிகளிலேயே படிக்க வேண்டும் என்று ஒரு அரசாணை போட்டால் போதும், ஆசிரியர்கள் பொறுப்பாக பணியாற்றத் தொடங்கி விடுவார்கள். அனைவரின் பார்வையும் அரசுப்பள்ளி நோக்கி தி¢ரும்பிவிட்டால் தனியார் பள்ளிகளின் கல்வி வியாபாரம் படுத்துவிடும்...’’ என்கிறார் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன். அரசு என்ன செய்யப்போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்!
- வெ.நீலகண்டன்