என் ஐன்னல்





புத்தகம்
Gendering Caste: Through A Feminist Lens நூலின் தமிழாக்கத்தை வாசித்தேன். இந்த நூல் சாதியமைப்புக்குரிய அறம், அறிவு ஆகியன தொடர்பான அடிப்படை முரண்பாடுகளை சுட்டிக் காட்டுகிறது. விவசாயத்தொழில் புரிவதற்கான அறிவும், கைவினைத் தொழில்களுக்கான அறிவும் கடைநிலை சாதியினரிடத்து மட்டுமே உள்ள போதிலும், அத்தகைய அறிவை ‘அறிவா’கக் கொள்ளாது அருவமான மெய்ஞான அறிவுதான் ‘அறிவு’ என்று சாதிய சமுதாயம் தொடர்ந்து கூறிவந்துள்ளது.  இதுபோலவே, பெண்களின் அனுபவம் சார்ந்த அறிவும் திறமைகளும் அறிவாகக் கருதப்படுவதில்லை. வரலாற்று ரீதியாகவே ‘அறிவற்ற’ நிலையை ‘அறிவார்ந்த’ நிலையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க ‘சுத்தம்’-‘அசுத்தம்’ என்ற பதங்களை இச்சமுதாயம் பயன்படுத்தி வருகிறது. சாதியமைப்பு முறை தொடர்ந்து நீடித்துள்ளதற்கு அது சாத்தியப்படுத்தியுள்ள பெண்ணடிமைத்தனமும் பாலியல் கட்டுப்பாடுகளும் முக்கிய காரணங்கள். ஒரு காலத்தில் ஆதிக்க சாதியினரால் மட்டுமே பின்பற்றப்பட்ட பழக்கவழக்கங்கள், குறிப்பாக பெண்களின் பாலியல் ஆற்றலையும் கருவுரும் ஆற்றலையும் கட்டுப்படுத்தும் வகையில் அமைந்த செயல்பாடுகள் இன்று எல்லாச் சாதியினராலும் பின்பற்றப்படுகின்றன. பெண் தொடர்பான பெரும்பாலான ‘சீர்திருத்த’ கருத்துகளுக்கும் போராட்டங்களுக்கும் உண்மையான பின்புலமாக இருந்தது சாதிய எண்ணங்கள்தான் என்பதை உமா சக்ரவர்த்தியும் வ.கீதாவும் மிக நுணுக்கமாக வெளிப்படுத்துகிறார்கள்.

இதற்குச் சரியான உதாரணம் தோள்சீலை அணியும் போராட்டம். இதை பெண்களின் உடல் மாண்பு தொடர்பான பிரச்னையாக மட்டுமே போராடிய மக்கள் கருதவில்லை. ஆதிக்கசாதி இந்துக்களுக்கு மட்டுமே உரியதாகக் கொண்ட உரிமைகளை, அவர்களைப் பிறரிடமிருந்து வேறுபடுத்தி மேம்பட்டவராகக் காட்டப் பயன்படுத்தியவற்றை, போராடிய மக்களும் வரித்துக்கொள்ள விரும்பினர் என்று உணரும்போது, இதுவரை நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட வரலாற்றை பெண்ணிய நோக்கில் மீளாய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது.

(ஆசிரியர்: உமா சக்ரவர்த்தி, தமிழாக்கம்: வ.கீதா, வெளியீடு: பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18. ( 044-24332924. $40)

இணையம்
‘நேஷனல் உமன்ஸ் ஹிஸ்டரி மியூசியம்’ என்ற இணையதளம் உலக வரலாற்றில் மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட பெண்களைப் பற்றிய தகவல்களை அரிய புகைப்
படங்களுடன் தருகிறது. பெரும்பாலும் அமெரிக்கப் பெண்களைப் பற்றிய தகவல்களைத் தந்தாலும், சுவாரஸ்யமான ஆவணத்தொகுப்பாக இருப்பதால் கவனம் ஈர்க்கிறது. இந்தப் பெண்கள் சாதனையாளராக இருக்க வேண்டுமென்பது இல்லை... முதல் முயற்சி செய்தவர்களும் இந்தத் தொகுப்பில் இடம் பெறுகிறார்கள். இதைப் போன்ற இணைய தள ஆவணம் ஒன்றை இந்தியப் பெண்களுக்கும் உருவாக்கும் உந்துதலை ஏற்படுத்துகிறது.
http://www.nwhm.org



சினிமா

‘தி வே ஹோம்’ - கொரியப் படம். வாய்பேச இயலாத குக்கிராமத்துப் பாட்டிக்கும், ‘கெண்டகி சிக்கன், வீடியோ கேம்ஸ்’ என்று பெருநகரத்தில் வளர்ந்த 7 வயதுப் பேரனுக்குமான உறவை அழகாக சித்தரிக்கிறது. சொல்லாமல் கொள்ளாமல் ஒருவனோடு சென்ற மகள், ‘அவன் பிரிந்து சென்று விட்டான்’ என்று தன் மகனுடன் வந்து அம்மா முன் நிற்கிறாள். வேறு வேலை கிடைக்கும் வரை, மகனைப்பார்த்துக்கொள்ளுமாறு விட்டுச் செல்கிறாள். நகரத்துப் பேரனுக்கு பட்டிக்காட்டுப் பாட்டியை சுத்தமாக பிடிக்கவில்லை. பேரனின் காரணமில்லாத கோபமும் வெறுப்பும் பாட்டிக்கும் புரியவில்லை. அவன் செய்யும் சேட்டைகளை பொறுத்துக்கொண்டு, முடிந்தவரை அவன் ஆசைகளை நிறைவேற்றுகிறார். பேரன் பாட்டியை புரிந்துகொள்ளத் தொடங்கும்போது, மகள் வந்து அழைத்துச் சென்றுவிடுகிறார்.

வயதான பாட்டி சுயமரியாதையோடு தனித்து வாழ்வது, கிராமத்து நட்புகள், நேசம், சிறுகுழந்தைகளின் உலகம் என்று மலையோரக் கிராமத்தில் கவிதையாக விரிகிறது படம். குழந்தைகள் தெரிந்தே பிறருக்கு கொடுக்கும் சிரமங்களை யதார்த்தமாக சொல்லிச் செல்கிறது. பல விருதுகளை வாங்கிய இப்படத்தின் இயக்குனர் லீ ஜாங் ஹாங் என்ற பெண். மதுரையில் ‘கூடு’ பெண்கள் வாசிப்பரங்கத்தின் `பெண் திரை’ திரைப்பட விழாவில் முதல் படமாக திரையிடப்பட்டது ‘தி வே ஹோம்’.

இடம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, யூத் ஹாஸ்டல் அசோசியேசன் ஏற்பாடு செய்த, சேஷாச்சலம்  மலைத்தொடர்களில் ட்ரெக்கிங் சென்றது இனிய ஓர் அனுபவம். இந்த மலைத்தொடர் ஆந்திராவில் திருப்பதிக்கு அருகில் துவங்குகிறது. டிரக்கிங் தொடங்கியதோ குக்கலதொட்டி என்ற மலைக்கிராமத்தில்.  5 நாள் ட்ரெக்கிங் நீண்ட மலைத்தொடரைக் கடந்து திருமலை உச்சியில் முடிந்தது. காடுகளில் நடந்து, மலையேறி, அருவிகளில் நீராடி, இரவில் அடர்ந்த கானகத்தின் நடுவே டென்ட் அடித்துத் தங்கி, நிலவு நட்சத்திரங்களுடன் கதைபேசி, விடியலில் மென்காற்றுடன் கைகோர்த்து, பறவைகளுடன் பாடி, சலசலக்கும் சிற்றோடைகளில் கால் நனைத்து, அப்போதுதான் அறிமுகமான நண்பர்களுடன் உரையாடிக் கொண்டே உலாவினோம். இது சங்க காலத்தில் காடுகளில் சுதந்திரமாக சுற்றித் திரிந்த பாணினிகளைப் போன்று உணர வைத்தது. பலமொழி பேசும் 80 பேருடன் நடைப்பயணம். 12 வயது சிறுவனிலிருந்து 70 வயது முதியவர் வரை ஆர்வமாகக் கலந்துகொண்டது ஆச்சரியப்படுத்தியது. பணிக்குச் செல்வோர், இல்லத்தரசிகள் என்று 20 பெண்களும் வந்திருந்தனர்.

இந்தப் பயணத்தில் நாங்கள் சென்ற இரண்டு இடங்கள் மறக்கமுடியாதவை... தும்புரு பள்ளத்தாக்கு, ராமகிருஷ்ணா தீர்த்தம். புராணத்தில் சொல்லப்படும், ‘தும்புரு’ என்ற குதிரைமுக இசைக்கலைஞர் வாழ்ந்ததாக சொல்லப்படும் இடம்தான் தும்புரு பள்ளத்தாக்கு. இந்த இடத்துக்குச் செல்லும் வழி ஆபத்தானது. இருபுறமும் மலைத்தொடர்... நடுவில் ஆழமான நீரோடை... அதன் பக்கவாட்டில் உள்ள குறுகலான பாதையில், வழுக்கும் பாறைகளின் மேல் கவனமாக கால்
பதித்துச் செல்லவேண்டும். வழிகாட்டுனர்கள் கயிறு கட்டிப் பிடித்துக்கொள்ள, கயிற்றைப் பிடித்துக்கொண்டே போனால்... திடீரென விழுகிறது அருவி! எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் ஆகாயத்திலிருந்து விழுவது போல ஒரு காட்சிப்பிழை! அருவி நீர் விழும் குளத்தில் நீராடியது அற்புத அனுபவம்!

தும்புரு பள்ளத்தாக்கிலிருந்து ஒரு கிலோமீட்டர் மலையேறி, இரண்டு கிலோமீட்டர் பள்ளத்தாக்குக்குள் இறங்கினால் ராமகிருஷ்ணா தீர்த்தம். கீழே இறங்குவது இருக்கிறதே... ரொம்ப கஷ்டம்! வளைந்து வளைந்து இறங்கும் மாடிப்படி போல, மண்ணும் சிறுகற்களும் நிறைந்த குறுகிய பாதை. ஆங்காங்கே மரங்களில் கயிறுகள் தொங்குகின்றன. பிடித்துக்கொண்டு, குனிந்துகொண்டே இறங்க வேண்டும். சில

இடங்களில் குழந்தையைப் போல தவழவேண்டும். ஒரு வழியாக இறங்கி முடித்தால்... மிகப்பெரிய சமதளப் பாறை! நடுவே ஓடும் சிற்றோடைகள், சுற்றிலும் விழும் குட்டி நீர்வீழ்ச்சிகள்! வாவ்... இப்படியும் ஒரு இடமா! களைப்பும் சிரமமும் போன இடம் தெரியவில்லை. பாறையில் சாய்ந்துகொண்ட போது, இன்னதென்று தெரியாத ஒரு பரவசம். பிரபஞ்சம் எனக்கு நெருக்கமான தோழியாகிவிட்ட உணர்வு! மறக்கமுடியாத பயணம். மனரீதியான, உடல் ரீதியான ‘கம்போர்ட் ஸோன்’-ஐ கடக்கச் செய்து, உண்மையான செயல்திறனை எனக்குள் உணர்த்தியவை சேஷாச்சலம் மலைத் தொடர்கள்தான்.